வியாழன், 6 பிப்ரவரி, 2020

பதவி பறிபோய்விடும் என்பது வதந்தி, ஆதாரம் இதோ!’- பெரியகோயில் சென்டிமென்ட் குறித்து தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு
தஞ்சை பெரிய கோயில்vikatan.com - கு. ராமகிருஷ்ணன் - ம.அரவிந்த் : 1997-ல்,  கலைஞர்  மட்டுமல்ல, பல அமைச்சர்கள், வாசல் வழியாகத்தான் பெரியகோயிலுக்குள் சென்று வந்தார்கள். அவர்கள் எவரும் பதவியை இழக்கவில்லை. மீதியிருந்த ஆட்சிக்காலத்தையும் முழுமையாக நிறைவு செய்தார்கள். உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் வருகையால் தஞ்சை நகரமே விழாக் கோலத்தில் காட்சியளிக்கிறது. ஆனால், இவ்விழாவில் அ.தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவில்லை. இது தஞ்சை மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தவிர மற்ற அமைச்சர்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை.
`பதவி பறிபோய்விடுமோ என்ற சென்டிமென்டின் காரணமாகவே ஆளுங்கட்சியினர் இவ்விழாவை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளார்கள். ஆனால், அமைச்சர்களின் இந்தப் பயம் தேவையற்றது’ என்கின்றனர் கோயில் நிர்வாகிகள்.





இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றக்கூடியது, தஞ்சை பெரியகோயில். ஆட்சி நிர்வாகத்துக்கும் கட்டடக் கலைக்கும் வேளாண்மைக்கும் உலகுக்கே வழிகாட்டியவர் மாமன்னன் ராஜராஜ சோழன். அவர் கட்டியெழுப்பிய தஞ்சை பெரியகோயிலை தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் புறக்கணிப்பது மிகுந்த வேதனைக்குரியது. இங்கு வந்து சென்றால், பதவிப் பறிப்போய்விடும் எனச் சொல்வது தேவையற்ற வதந்தி.



தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்
இது பொய்யானது. 1997-ம் ஆண்டு குடமுழுக்கின் போது, அப்போதைய அமைச்சர் கோ.சி.மணி பெரியகோயிலுக்குப் பலமுறை சென்று வந்தார். தீவிபத்து ஏற்பட்ட பிறகு, அப்போதைய முதலமைச்சர் தலைவர் கலைஞர், பெரியகோயில் வாசல் வழியாகத்தான் கோயிலுக்குள் சென்று பார்வையிட்டார். கலைஞர் மட்டுமல்ல, பல அமைச்சர்கள், வாசல் வழியாகத்தான் பெரியகோயிலுக்குள் சென்று வந்தார்கள். அவர்களில் எவரும் பதவி இழக்கவில்லை. மீதியிருந்த ஆட்சிக்காலமான நான்கு ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்தார்கள். 2010-ம் ஆண்டு பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழா ஏற்பாட்டுக்காக, நான் உட்பட, அப்போதிருந்த பெரும்பாலான அமைச்சர்கள், வாசல் வழியாகத்தான் பெரியகோயிலுக்குள் அடிக்கடி சென்று வந்தோம். அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினும் வாசல் வழியாகத்தான் உள்ளே சென்று வந்தார்.



கருணாநிதி- ஸ்டாலின்
கருணாநிதி- ஸ்டாலின்
ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது, கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு எளிதாகச் செல்வதற்காகவும் வாசல் பகுதியில் கூடியிருந்த மக்களை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகவும்தான், அப்போதைய முதலமைச்சர் கலைஞர், பெரியகோயிலின் வேறு பாதையின் வழியாக உள்ளே சென்றார். பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருமே, ஆட்சிக்காலம் முழுவதையுமே நிறைவு செய்தார்கள்.
பெரியகோயிலுக்குள் வந்தால், பதவி பறிபோய் விடும் எனச் சொல்வது அப்பட்டமான பொய். இதை நம்புவது அறிவார்ந்த செயல் அல்ல” என்கிறார் விரிவாக.
இவ்விழாவில், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி. வைத்திலிங்கம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டவர்களும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.
vikatan.com

கருத்துகள் இல்லை: