ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

பட்ஜெட் “பணம் இல்லை, மாநிலங்களுக்கான நிதி குறைப்பு, 7.66 லட்சம் கோடி கடன்”.. விரிவான பார்வை:

BBC :நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக மத்திய
பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். அவர் பட்ஜெட்டில் செய்த அறிவிப்புகள் குறித்து தீவிர விவாதங்கள் நடந்து வருகின்றன.
ஆனால், பட்ஜெட் கணக்கு வழக்குகளில் உள்ள பிரச்சனைகள் இன்னும் தீவிரமானவை. பட்ஜெட்டில் உள்ள பல விவரங்கள் பிரச்சனைக்குரியவை என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைர் ஜோதி சிவஞானம். இந்த பட்ஜெட் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் அவர் பேசியதிலிருந்து:
இந்த பட்ஜெட் மற்றுமொரு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட். பொதுவாக ஒரு பட்ஜெட்டிற்கு சில நோக்கங்கள் இருக்கின்றன. 1. வளர்ச்சியை உறுதி செய்வது. இப்போது இருப்பது போல பொருளாதாரம் மிகவும் வீழ்ந்திருக்கும் நிலையில், அரசு முன்வந்து அதனைத் தூக்கி நிறுத்த வேண்டும். தனியார் முன்வராத நிலையில் அரசுதான் அதைச் செய்ய வேண்டும். 2. வேலைவாய்ப்பு. 3. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது. 4. பொருளாதாரம் அந்தத் தருணத்தில் எதிர்கொண்டுவரும் பிரச்சனையை சரிசெய்வதற்கான வழிகள் அந்த பட்ஜெட்டில் இருக்க வேண்டும்.

தற்போதைய சூழலில், முதலில் உள்ள மூன்றுமே மிக மோசமாக இருக்கிறது என்பதுதான் நம்முடைய நான்காவது பிரச்சனை. வளர்ச்சி வரலாறு காணாத விகிதத்தில் மோசமாக இருக்கிறது. 2013-14ல் வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சி என்றார்கள். ஆனால், இப்போது வேலைவாய்ப்பும் இல்லை வளர்ச்சியும் இல்லை.
வளர்ச்சியை உருவாக்குவதற்காக, ரிசர்வ் வங்கி ஐந்து முறை வட்டிவிகிதங்களைக் குறைத்தது. 110 அடிப்படைப் புள்ளிகள் குறைந்தன. இதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்குமென எதிர்பார்த்தார்கள். ஆனால், வளர்ச்சி கீழே சென்றுகொண்டேயிருக்கிறது. பணவீக்கம் அதிகரித்தது. குறிப்பாக உணவுப் பொருள்களின் பண வீக்கம் அதிகரித்தது. இதை Stagflation என்று அழைப்பார்கள். பொருளாதாரம் தேங்கி நிற்கிறது; ஆனால், விலைவாசி மட்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது. மேலும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்திருக்கிறது. இம்மாதிரியான சூழல் இந்தியாவில் இதுவரை ஏற்பட்டதேயில்லை.
e>மேலே சொன்ன இந்த விஷயங்கள்தான் இந்தியா இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்னைகள். இது எல்லோருக்கும் தெரியும் என்றாலும் அரசு எதையும் ஒப்புக்கொள்வதில்லை. நமது பொருளாதாரம் மந்தமாகியிருப்பதற்கு ஒரு காரணம் உலகப் பொருளாதாரம் மந்தமாகியிருப்பதுதான் என்கிறார் தலைமை பொருளாதார ஆலோசகர். ஆனால், நம்முடைய பொருளாதாரம்தான் உலகப் பொருளாதாரத்தைக் கீழே இழுக்கிறது என ஐஎம்எஃபை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். அரசு சொல்வதைப் போலவே, உலகப் பொருளாதார மந்தம் ஒரு காரணமாகவே இருக்கட்டும். மற்ற காரணங்கள் என்னென்ன என்பதை ஏன் சொல்லவில்லை? Stagflationனுக்கான உள்நாட்டுக் காரணங்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்.
அரசு போடும் பட்ஜெட்டின் அளவு என்பது, நம் பொருளாதாரத்தில் மிகச் சிறிய அளவுதான். அதாவது நம் ஜிடிபியில் வெறும் 12 சதவீதம்தான் அரசாங்க பட்ஜெட். முன்பு 15 சதவீதமாக இருந்தது. இப்போது வரி வருவாய், செலவு எல்லாம் குறைந்து 12 சதவீதமாகிவிட்டது. அதனால், நம் பட்ஜெட்டால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால், நம்பிக்கையை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், இந்த பட்ஜெட்டை நம்ப முடியவில்லை.
நீண்ட காலமாகவே அரசு வெளிப்படைத் தன்மையுடன் பற்றாக்குறைகளைப் பற்றிப் பேச வேண்டும்; சரியான புள்ளிவிவரங்களைத் தர வேண்டும் என்றெல்லாம் சொல்லி வந்திருக்கிறோம். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.
முதலில் வருவாயை எடுத்துக்கொள்வோம். வரி வருவாயைப் பொறுத்தமட்டில், நவம்பர்வரை சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இன்று வெளிவந்துள்ள திருத்தப்பட்ட மதிப்பீட்டில் (Revised Estimate) 21.6 லட்சம் கோடி ரூபாய் வந்திருப்பதாகக் காட்டியிருக்கிறார்கள். இது நம்பக்கூடியதாக இல்லை. இது எப்படி வந்தது என்று தெரிய வேண்டும். மீதமுள்ள மூன்று மாதங்களுக்கும் சேர்த்து பத்து லட்சம் கோடி ரூபாய் நீங்கள் வசூலித்துவிட்டீர்களா அல்லது வெறும் மதிப்பீடா? மதிப்பீடாக இருந்தாலும் இவ்வளவு பெரிய வித்தியாசம் எப்படி இருக்கும்?
கடந்த முறை எகனாமிக் சர்வேவில் உள்ள புள்ளி விவரங்களுக்கும் பட்ஜெட்டில் இருந்த புள்ளிவிவரங்களுக்கும் இடையில் 1.76 லட்சம் கோடி ரூபாய் வித்தியாசம் இருந்தது. இந்த முறை எகனாமிக் சர்வேவில் திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடே தரவில்லை. போன முறையே தவறாக வந்துவிட்டது என நினைத்தார்களோ என்னவோ?
2019-20ல் பற்றாக்குறையைப் பொறுத்தவரை, முதலில் 3.3 சதவீதம் இருக்கும் என்றார்கள். இப்போது திருத்தப்பட்ட மதிப்பில் பற்றாக்குறை 3.8 சதவீதம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே நம்முடைய வரி வருவாயில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்திருக்கிறது. அதற்கேற்றபடி பற்றாக்குறையும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 0.5 சதவீதம் அளவுக்குத்தான் பற்றாக்குறையை அதிகரித்துக் காட்டியிருக்கிறார்கள். அதாவது, 63 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத்தான் பற்றாக்குறையை அதிகரித்துக் காட்டியிருக்கிறார்கள். ஆகவே மீதமுள்ள 2 லட்சம் கோடி ரூபாயை எப்படிச் சரிசெய்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
>இந்த 2 லட்சம் கோடி ரூபாயை சரிக்கட்ட மாநிலங்களின் வருவாயில் கை வைத்திருக்கிறார்கள். மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய வரியில் 1.73 லட்சம் கோடி ரூபாயைக் குறைத்திருக்கிறார்கள். இதனால், மாநிலங்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு வரும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, மாநிலங்கள்தான் பொருளாதார ரீதியாக சிறப்பாகச் செயல்படுகின்றன. மொத்த செலவினத்தில் 68-69 சதவீதம் மாநில அரசுகள்தான் செய்கின்றன. வரிகளை அதிகம் வசூலிக்கும் மத்திய அரசு, தங்களிடம் வரும் வரி வருவாயை சரியாக மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். அதிலும் மத்திய அரசு கை வைத்தால், கொஞ்சம் நஞ்சம் செயல்படும் பொருளாதாரமும் வீழ்ந்துவிடும்.
2019-20ல் மத்திய - மாநில வரிப் பகிர்வு என்பது 14வது நிதிக் கமிஷனின் பரிந்துரைகளின்படி செயல்படுத்தப்படுவது. அதில் 42 சதவீதம் பகிர்ந்தளிக்க வேண்டுமென இருக்கிறது. அதில் எப்படி கை வைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இதுபோக, மேலும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறையாக இருக்கிறது.
நிலைமை தொடர்ந்து மோசமாகிவருகிறது. பட்ஜெட்டிற்கு வெளியில் ரயில்வே, இந்திய உணவுக் கழகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை வெளியில் கடன் வாங்கிக்கொண்டிருக்கின்றன. வரி வருவாய் கடந்த நான்கு ஆண்டுகளாக குறைந்து வருகிறது. வரி - ஜிடிபிவிகிதமானது 11.2ல் இருந்து 10.6ஆக குறைந்திருக்கிறது. இது இன்னும் குறையும். ஆனால், அதனை அவர்கள் பட்ஜெட்டில் சரியாகக் காண்பிக்கவில்லை.
பணம் இல்லாததால், பல திட்டங்களுக்கான செலவுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. முதலில், உள்கட்டமைப்புத் திட்டங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாக சொன்னார்கள். ஆனால், இந்த பட்ஜெட்டில் முதலீட்டுச் செலவு என்பது வெறும் 3.4 லட்சம் கோடிதான். எப்படி ஐந்து வருடத்தில் 100 லட்சம் கோடி ரூபாயை செலவழிப்பார்கள்?
இதற்கு நடுவில் நிடி ஆயோகில் ஒரு ரிப்போர்ட் தயார் செய்திருக்கிறார்கள். அதில் இந்த 100 லட்சம் கோடி ரூபாயை யார், யார் முதலீடு செய்வார்கள் எனக் கூறுகிறார்கள். அதாவது அதில் மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசின் பங்கு என்ன, தனியாரின் பங்கு என்ன என்று அந்த ரிப்போர்ட்டை தயார் செய்கிறார்கள். மத்திய அரசு முன்வைக்கும் ஒரு திட்டத்திற்கு, மாநில அரசும் தனியாரும் எதற்கு முதலீடு செய்ய வேண்டும்?
மற்றொரு பக்கம் வங்கிகள் மூலம் 11 லட்சம் கோடி ரூபாயைக் கொடுக்கப்போவதாக சொல்கிறார்கள். இதை எப்படி மத்திய அரசு சொல்ல முடியும்? சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லவா சொல்ல வேண்டும்?
>திருத்தப்பட்ட மதிப்பீடுகளைப் பார்த்தால், கடந்த பட்ஜெட்டில் திட்டமிட்டதைவிடப் பல மடங்கு குறைவாக செலவழிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. மத்தியத் தொகுப்பில் வரும் திட்டங்களில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாயை குறைத்திருக்கிறார்கள். 2019-20ஆம் ஆண்டுக்கென அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இந்தக் குறைப்பு நடந்திருக்கிறது. உணவு மானியம் 75 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது.
பட்ஜெட்டில் 1 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய் உணவு மானியமாக ஒதுக்கப்பட்டது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடிதான் செலவழிந்திருக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களில் ஏதும் மானியம் கொடுக்காவிட்டால், இது இன்னமும் கீழே செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
விவசாய ஒதுக்கீடுகளில் 31 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத்தில் 1069 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சமூக நலத் திட்டங்களில் 2640 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வரி நிர்வாகத்திற்கான செலவு 20,000 கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. முக்கியமான துறைகளில் செலவு குறைந்திருக்கிறது. ஆனால், வரி நிர்வாகத்தில் செலவு வெகுவாக அதிகரித்திருக்கிறது, ஏன்?
விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்திற்கு 75,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 54 ஆயிரம் கோடி ரூபாய்தான் செலவழிக்கப்பட்டிருக்கிறது. 20,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வரும் 7 கோடி விவசாயிகளில் பல விவசாயிகளுக்கு 2000 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு 4,000 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். மீதிப் பணத்தை அமைச்சகம் திருப்பி அளித்துவிட்டது.
ஸ்வச் பாரத் திட்டத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 9 ஆயிரம் கோடிதான் செலவழித்திருக்கிறார்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு 6560 கோடி ஒதுக்கீடு செய்து, 3,300 கோடி ரூபாய்தான் செலவழித்திருக்கிறார்கள். ஸ்மார்ட் சிடி திட்டங்களுக்கு 13,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 9842 கோடி ரூபாய்தான் செலவழிக்கப்பட்டிருக்கிறது. திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு என 7260 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. செலவழிக்கப்பட்டது 5746 கோடிதான் செலவழிக்கப்பட்டது.
மதிய உணவுத் திட்டத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 9912 கோடி ரூபாய்தான் செலவழிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 27,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 24 ஆயிரம் கோடி ரூபாய்தான் செலவழிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பொதுக் கடன் என்பது கடந்த ஆண்டு ஜிடிபியில் 48 சதவீதம். அது இந்த ஆண்டு அது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு எவ்வளவு கடன் இருந்தது என்பதையே பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. வரும் ஆண்டில் (2021-2022ல்) இந்தக் கடனானது 48 சதவீதமாகக் குறையுமெனக் கணக்கிட்டு, அதை சாதனை போல குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு பொதுக் கடன் அவ்வளவுதானே இருந்தது? அதை 44 அல்லது 46 சதவீதமாக குறைப்போம் என்றவர்கள், இப்போது 50 சதவீதமானதைப் பற்றிப் பேசவில்லை.
பொதுக் கடன் அதிகரித்தால், வட்டியும் அதிகமாகும். ஆனால், பட்ஜெட்டில் நாம் செலுத்த வேண்டிய கடனைக் குறைத்துக் காட்டுகிறார்கள். பட்ஜெட்டில் செலுத்த வேண்டிய வட்டியானது 6.6 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் அது 6.25 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. கடன் அதிகரித்திருக்கும்போது வட்டி எப்படி குறையும்? இந்த பட்ஜெட்டை அதனால்தான் நம்ப முடியவில்லை.
கடனைக் குறைப்பதாகச் சொல்லிவிட்டு, பட்ஜெட்டிற்குள் 7.66 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். இதில் வட்டியாக மட்டும் சுமார் ஆறேகால் லட்சம் கோடி ரூபாய் போய்விடுகிறது.
Nominal GDP வளர்ச்சி 10 சதவீதம் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் Nominal GDP வளர்ச்சி 7.5 சதவீதம்தான் இருக்கிறது. ஜிடிபி வளர்ச்சி 4.5 சதவீதம்தான் இருக்கிறது. வளர்ச்சிக்கு முதலீட்டுச் செலவு செய்ய வேண்டும். அப்படி ஏதும் செய்யவில்லை. வளர்ச்சிக்கான செலவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த செலவே குறைந்திருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் செலவு செய்ய வேண்டும். ஆனால், அவற்றை குறைத்திருக்கிறார்கள்.
இதனால், பிரச்சனை இன்னும் தீவிரமாகும். நிதி நிலைமையை சரிசெய்யக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பையும் தவறவிட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு பட்ஜெட் முதல் வாய்ப்பு. அதில் நிறைய தவறுகள் இருந்தன. இதனால், நிலைமை மோசமானது. இந்த முறை பெரிய தவறுகள் இல்லை. ஆனால், செலவுகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், சந்தையில் எந்த நம்பிக்கையும் வராது.
மத்திய அரசால் செலவைச் சமாளிக்க முடியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. பெரிய திட்டங்களுக்கான நிதியைக் குறைக்கிறார்கள். வரி வசூலை அதிகரிக்க முடியவில்லை. கடன் அதிகரித்து வருகிறது. 4 ஆண்டுகளாக இது நடக்கிறது. இம்மாதிரி சூழலில் பொருளாதாரம் எப்படி முன்னோக்கி செல்லும்?

கருத்துகள் இல்லை: