சனி, 8 பிப்ரவரி, 2020

காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை


தினகரன் : சென்னை: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தபின்னர், காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவர்கள், பிரிவினைவாத தலைவா்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.  இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனமும் கவலையும் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை அடக்குமுறை சட்டமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல்- எந்தக் கேள்வியும் கேட்காமல் முன்னாள் முதல்வர்களையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பது, ஜனநாயகத்திற்கு கைவிலங்கும் கால்விலங்கும் போடும் கொடுமையான நிகழ்வு ஆகும்.


இந்தியாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுள்ள அரசியல் தலைவர்களையும், முன்னாள் முதல்வர்களையும் சிறையில் தொடர்ந்து அடைத்து வைத்திருப்பது - தனி மனித சுதந்திரத்திற்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானது. ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எள்ளி நகையாடுவது போல் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. இது போன்ற மிருகத்தனமான சட்டங்கள்- எந்த மாநிலத்திலும் பயன்படுத்தப்படலாம்- எந்த அரசியல்வாதி மீதும் போடப்படலாம் என்பது நாட்டிற்கும், மத்திய - மாநில உறவுகளுக்கும் ஏற்றதுமல்ல. காஷ்மீரை தொடர்ந்து பதற்றமுள்ள பகுதியாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு ஆசைப்படுகிறதோ என்ற சந்தேகம் இப்போது மக்கள் மனதில் எழுகிறது.

ஆகவே ஆறு மாத சிறைக்காவல் முடிவடைந்த நிலையில், திடீரென்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மூத்த தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும்; அடைக்கப் பட்டிருக்கும் ஜனநாயகத்தின் கதவுகளைத் திறந்துவிட வேண்டும் என்றும்; பிரதமர் நரேந்திரமோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இனியும் காலதாமதம் செய்யாமல்- புதிய புதிய காரணங்களை செயற்கையாகக் கண்டுபிடித்து காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிடுமாறும், காஷ்மீரில் ஜனநாயகக் காற்றை அனைத்துத் தரப்பு மக்களும், எந்தவிதத் தடையுமின்றிச் சுவாசிக்க இடமளிக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: