வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

7 பேர் விடுதலையில் முடிவு எடுக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது- மத்திய அரசு

மாலைமலர் : சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதன் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கவர்னர் அமைதியாக உள்ளார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் நளினி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக அமைச்சரவை எங்களை (7பேரை) முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்து தீர்மானம் இயற்றி பல மாதங்களாகியும், அதன் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இதனால், நாங்கள சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எங்களை முன் கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை நீதிபதிகள் தாமாக முன்வந்து ஒரு எதிர்மனுதாரராக சேர்த்தனர்.
இந்த வழக்கிற்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது மத்திய உள்துறை துணை செயலாளர் முகமது நஷீம்கான் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ம் ஆண்டு நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உள்பட 17 பேர் இறந்தனர். இந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மனுதாரர் நளினி உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தடா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தான் இவர்கள் தண்டனை பெற்றுள்ளனர். அப்படி இருக்கும்போது, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது.

தற்போது தமிழக அரசு நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்து தீர்மானம் இயற்றி உள்ளது. அந்த தீர்மானம் ஒப்புதலுக்காக கவர்னரிடம் உள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் பதவியை வகிக்கும் கவர்னருக்கு, இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை: