செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கொரோனா - பல நாடுகளின் சுற்றுலா பயணிகள் இந்தியா வர தடை !

Samayam Tamil : கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம் என்ன? தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மானேசர் முகாமில் 5 பேருக்கு வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

* வரும் 8ஆம் தேதியில் இருந்து டெல்லி - ஹாங்காங் விமானங்களை ரத்து செய்யப் போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் வசதிகள் விரைவில் செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

* மலேசியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் 10 பேர் வரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். விடுதிகள் முன்பதிவு பெரும் சரிவை கண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


* சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து கொரோனா வைரஸிற்கு எதிராக போராட வேண்டும் என்று உலக வங்கி அழைப்பு விடுத்துள்ளது.

* சீனா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது.

 
* கொரோனா வைரஸ் பாதிப்பு வைர வியாபாரிகளையும் விட்டு வைக்கவில்லை. வைரத்தை அறுத்து பாலிஷ் போடும் நாடுகளில் உலகின் மிகப்பெரிய மையமாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தங்கள் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

* வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 4 பேரின் மாதிரிகள் புனே வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதில் 4 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. சீனாவில் இருந்து திரும்பிய 820 பேர் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்று உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: