vikatan.com = ந.பொன்குமரகுருபரன் :
ஆயுதப்படை எஸ்.ஐ.
சித்தாண்டியை 8 நாள்களுக்கு முன்னரே சி.பி.சி.ஐ.டி கைது செய்துவிட்டதாக
போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரகசிய விசாரணையில் என்ன சொன்னார்
சித்தாண்டி?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில், இராமநாதபுரம்
மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேர் முறைகேடாகத்
தேர்வாகியிருப்பது தொடர்பான பிரச்னை சமீபத்தில் பூதாகரமாக வெடித்தது.
இதுதொடர்பாக விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார், திருநெல்வேலி,
சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 பேரை கைது
செய்தனர். போலீசார் விசாரணையைத் தொடங்கியபோதே, இம்முறைகேட்டில் முக்கிய
இடைத்தரகர்களாகச் செயல்பட்ட முகப்பேர் ஜெயக்குமார், ஆயுதப்படை எஸ்.ஐ.
சித்தாண்டி இருவரும் தலைமறைவாகி இருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த காவலரான சித்தாண்டி,
தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வேறு பலருக்கும் டி.என்.பி.எஸ்.சி
தேர்வுகளில் வினாத்தாள்களை முன்கூட்டியே ரகசியமாக வெளியிட்டும்
விடைத்தாள்களை மாற்றியும் அதிக மதிப்பெண் பெற்றுத் தந்துள்ளது விசாரணையில்
தெரியவந்தது. இதற்காக லட்சக்கணக்கில் அவர் பணம் பெற்றிருப்பதையும் போலீசார்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
சித்தாண்டி, ஜெயக்குமாருடன் தொடர்புடைய நபர்கள், பணி நியமனம்
பெற்றவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஒவ்வொருவராக விசாரிக்கப்பட்டு
வருகின்றனர். இந்நிலையில், இராமநாதபுரத்தில் பதுங்கியிருந்த சித்தாண்டியை
சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், எட்டு நாள்களுக்கு
முன்னரே சித்தாண்டியை சி.பி.சி.ஐ.டி கைது செய்துவிட்டதாக போலீஸ்
வட்டாரங்கள் கூறுகின்றன.
டி.என்.பி.எஸ்.சி விவகாரம் பற்றிஅறிந்தவர்கள் சிலர் நம்மிடம்
பேசுகையில், “இப்பிரச்னை வெடிக்கத் தொடங்கிய போதே சித்தாண்டி தலைமறைவாகி
விட்டார். பத்து நாள்களுக்கு முன்னர், சென்னை போரூரிலுள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் சித்தாண்டி மாறுவேடத்தில் சிகிச்சை பெறுவதாக
சி.பி.சி.ஐ.டிக்குத் தகவல் கிடைத்தது. அந்த மருத்துவமனையை ரகசியமாகக்
கண்காணிக்க 13 போலீசாரைக் களமிறக்கினார்கள். அந்த போலீசார் சித்தாண்டியின்
பேட்ச்சை சேர்ந்தவர்களா, அவர் சமூகத்தைச் சார்ந்தவர்களா என்கிற விவரங்களைச்
சேகரித்து விட்டுத்தான் கண்காணிக்க உத்தரவிடப்பட்டனர்.
டி.என்.பி.எஸ்.சி ஆணையத் தலைவராக நட்ராஜ் இருந்தபோது, அவருக்கு கார்
டிரைவராக இருந்த சித்தாண்டி, எப்படியெல்லாம் முறைகேடுகளில் ஈடுபட்டார்,
அவருக்கு உதவியவர்கள், அவரால் பலனடைந்து இப்போது அதிகாரிகளாக இருப்பவர்கள்
யார் என்கிற விவரங்களைச் சேகரித்துள்ளனர். இதனடிப்படையில், சித்தாண்டியால்
பலன் பெற்ற சுமார் 726 அதிகாரிகளின் பட்டியல் மாவட்ட வாரியாகத்
தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அரசுக்கும் அறிக்கையாக
அனுப்ப உள்ளனர். சித்தாண்டியிடம் பணம் கொடுத்து, முறைகேடாக அரசுப் பணி
பெற்ற 726 அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யவும் பரிந்துரைக்க இருக்கிறார்கள்.
மோசடி புரிந்த அந்த அதிகாரிகள் மீது தனியாக வழக்குப் பதியப்பட்டு விசாரணை
மேற்கொள்ளப்பட இருக்கிறது” என்றவர்களிடம், “எட்டு நாள்களுக்கு முன்னரே கைது
செய்துவிட்டதாகக் கூறுகிறீர்கள். அவரை ஏன் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தவில்லை?” என்றோம்.
இரண்டு நாள்கள் சித்தாண்டியைக் கண்காணித்த சி.பி.சி.ஐ.டி., எட்டு
நாள்களுக்கு முன்னர் அதிரடியாக மருத்துவமனைக்குள் நுழைந்து சித்தாண்டியைக்
கைது செய்தது. கிண்டியிலுள்ள போலீஸ் ரகசிய கெஸ்ட் ஹவுஸ்க்கு சித்தாண்டி
கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும்
தகவல்களைக் கக்கியுள்ளார். குரூப் 4 தேர்வின் போது, தஞ்சாவூர்
கருவூலத்திற்குக் கொண்டுவரப்பட்ட கேள்வித்தாள்களில் ஒருபண்டல் குறைவாக
இருந்துள்ளது.
அப்போது டி.ஆர்.ஓ.வாக இருந்த ஒருவர், இந்தக் கேள்வித்தாளை எடுத்துச்
சென்று மேலூரிலுள்ள சித்தாண்டியின் உறவினர் ஒருவரின் கடையில் ஜெராக்ஸ்
எடுத்துள்ளார். பின்னர் அந்தக் கேள்வித்தாள் பண்டலை கருவூலத்தில்
ஒப்படைத்துள்ளார். இந்த விவரங்களைக் கருவூலத்தின் பெண் அதிகாரி தன்னுடைய
நோட் புக்கில் ஆவணப்படுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட டி.ஆர்.ஓ அதிகாரி
இப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று வலம் வருகிறார். அவரைப்
பற்றிய விவரங்களை சித்தாண்டியிடம் சி.பி.சி.ஐ.டி கேட்டுப் பெற்றுள்ளது.
“பொதுவாக போலீசார் நீதிமன்றத்தில்
ஒரு குற்றவாளியை ஆஜர் செய்வதற்கு முன்னதாக, வழக்குக்குத் தகுந்தாற்போல
ஆஜர்படுத்துவதற்குச் சில நாள்களுக்கு முன்னரே கைது செய்து ரகசிய இடத்தில்
வைத்து விசாரிப்பார்கள். குற்றவாளியிடமிருந்து தகவலைப் பெற்று மேலும் சிலரை
கைது செய்வது, அதிரடி சோதனை மேற்கொள்வது போன்ற விஷயங்களை மேற்கொள்வார்கள்.
சித்தாண்டி விவகாரத்திலும் இதுதான் நடந்துள்ளது. நீதிமன்றத்தில் அவரை
ஆஜர்படுத்தி, முறைப்படி போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரிக்கும்போதுதான்,
இந்த வழக்கின் பிடி இறுகும்” என்றனர்.
இதற்கிடையே சித்தாண்டி, அவரது மனைவி பிரியாவின் வங்கிக் கணக்குகளை
சி.பி.சி.ஐ.டி முடக்கியுள்ளது. மற்றொரு இடைத்தரகரான ஜெயக்குமார் குறித்து
தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி
அறிவித்துள்ளது. சித்தாண்டியை 8 நாள்களுக்கு முன்னரே கைது
செய்துவிட்டதால்தான், அவரை தேடப்படும் குற்றவாளியாக சி.பி.சி.ஐ.டி
அறிவிக்கவில்லையாம். டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம் வெறும்
சித்தாண்டி, முகப்பேர் ஜெயக்குமாரோடு முடிந்துவிடுமா அல்லது பெரிய மீன்கள்
சிக்குமா என்பது சி.பி.சி.ஐ.டி அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கையைப்
பொறுத்தே அமையும்.
vikatan.com
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக