சனி, 8 பிப்ரவரி, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு : சந்தேகத்திற்கிடமானவர்களை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்க சீனா உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு : சந்தேகத்திற்கிடமானவர்களை  தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்க  சீனா அதிரடி உத்தரவு தினத்தந்தி : சீனாவின் வுகான் நகரில் சந்தேகத்திற்கிடமான அனைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளையும் சுற்றி வளைத்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்க சீனா உத்தரவிட்டு உள்ளது. வுகான்< கொரோனா வைரஸ் சீனாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தின் தலைநகரமான வுகான், தமிழக தலைநகர் சென்னையை விட பெரிய நகரம். கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் வுகான் நகரை விட்டு இப்பொது யாரும் வெளியே வரவோ அல்லது உள்ளே செல்லவோ முடியாத நிலை உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுகான் நகரத்தில், சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில், இப்படி அறிவிக்கப்படும் 6-வது முறை என்கிற தகவல்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
மத்திய சீனாவில் உள்ள அழகான நகரங்களில் ஒன்றுதான் வுகான். இது ஹூபே மாகாணத்தின் தலைநகரம்.  இந்த நகரத்தில்  இருந்துதான் முதன் முதலில் கொரோனோ வைரஸ்  கண்டறியப்பட்டது.  இங்கிருந்துதான் உலகம் முழுவதும் பரவியது என்பதால் இந்த நகரத்தை இப்போது மக்கள் வெறுக்கத் தொடங்கி உள்ளனர்.


உலகின் 3-வது மிகப்பெரிய நதியான யாங்சே நதியின் கரையில், அமைந்துள்ளதால், அழகான ஏரிகள், மனதை மயக்கும் பூங்கா என ரம்மியமான நகரம் என்றால் மிகையில்லை. 

ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுவதால், விவசாயமும்,  தொழிலும் செழித்து நிற்கும் இந்த நகரம் இன்று உலக அபாயத்தின் குறியீடாக அச்சுறுத்தி வருகிறது.


தற்போது நகரத்தின் அனைத்து போக்குவரத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நகரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 6 முறை உலக சுகாதார அவசர நிலை அமல்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் அனைத்து நோயாளிகளையும், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்கவும் அவர்களின் நெருங்கிய தொடர்புடையவர்களையும்  சுற்றி வளைக்கவும்  சீனாவின் மத்திய அரசு வுகான் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சீன அரசு இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க துவங்கும் முன்பே, வுகான் நகரை விட்டு அண்டை மாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களால் தான் சீனாவில் கொரோனா பரவ துவங்கியது.வுகான் நகரில் நான்கு வகையாக மக்களை கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்று துணை ஜனாதிபதி  சன் சுன்லான் கோரியுள்ளார்.

வேகமாக பரவி வரும் தொற்றுநோய்க்கு எதிராக நாட்டின் துணைப் பிரதமர் சன் சுன்லான் 'மக்கள் யுத்தத்திற்கு' தயாராகுமாறு அழைப்பு விடுத்து உள்ளார்.

இந்த 'போர்க்கால நடவடிக்கையில் ' அனைத்து மட்டங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தீவிரமாக முன்னிலை வகித்து பணியாற்ற  வேண்டும், அல்லது தேச துரோகி ஆகிவிடுவீர்கள்  என்று அவர் எச்சரித்து உள்ளார்.

இந்த நகரத்தில் சுமார் 14  லட்சம் குடியிருப்புகள் உள்ளன. ஆனால் எத்தனை பேர் தனிமைப்படுத்தப்படுவார்கள் அல்லது அவர்கள் எங்கு வைக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.


தனிமைப்படுத்தப்பட வேண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேக நபர்களை  அடையாளம் காண வுகான் அதிகாரிகள் இப்போது வீட்டுக்கு வீடு சுகாதார சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, 2009 ஆம் ஆண்டில் பன்றி காய்ச்சல் என்கிற ஸ்வைன் புளூ,  2014 ஆம் ஆண்டில் போலியோ, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் எபோலா, 2016 ஆம் ஆண்டில் ஸிகா வைரஸ், 2020 ஆம் ஆண்டில் கோரோனா வைரஸ் தாக்குதல்களால் நகரம் நிலை குலைந்துள்ளது.

எபோலா வைரஸ் 9  நாடுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், ஸிகா 29 நாடுகள், பன்றிக் காய்ச்சல் 214 நாடுகளில் கடும் அழிவுகளை கொண்டு வந்துள்ளது.  அந்த வரிசையில் தற்போது கொரோனா 28 நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை கொண்டு வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். ஸிகா வைரஸ் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 774 ஆக உள்ளது. 


கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளவர்களில் 99 சதவீதம் பேர் சீனர்கள். தற்போது கொரோனாவால் சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை, கடந்த 2003ம் ஆண்டு அந்நாட்டில் பரவிய சார்ஸ் வைரசுடன் ஒப்பிடலாம். அப்போது சுமார் 800-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதில் ஹாங்காங்கில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது சார்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் உயிரிழந்தார்கள். அதே போல கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மெர்ஸ் என்ற வைரஸ் பாதிப்பு வந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் உயிரிழந்தனர்.

இவற்றோடு ஒப்பிடும் போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் பேர் வரை தான் மரணமடைவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மரணமடையும் விகிதம் குறைவாக இருந்தாலும் பாதிப்பின் வீச்சு அதிகமாக இருக்கிறது. ஒருவரிடமிருந்து 3 பேருக்கு பரவும் வேகமாக தன்மையை கொண்டிருக்கிறது கொரோனா.

எபோலா பாதிப்பு கண்டறியப்பட்ட நாளில் இருந்து , 13 ஆயிரத்து 562 பேரும், தற்போதைய கொரோனா வைரஸ் தாக்குதலில் 712 க்கு மேற்பட்ட பேர்  மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில்,ஹூபே மாகாணத்தில் மட்டும் 550 பேர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனாவால் சீன பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக குறையும் என வல்லுநர்கள் கூறியுள்ளார். உலகினுடைய முக்கிய தொழிற்சாலையாக உள்ள சீனா, பொருளாதார ரீதியாக இயங்கி கொண்டே இருக்க வேண்டும். ஆனால் தற்போது மக்களின் உயிரை காக்கும் முயற்சியில் சீன அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அதுவும் சீன புத்தாண்டு துவங்கிய நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மிக அதிக மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் பயணம் என்பதும் தடைபட்டுள்ளது. ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.அதே போல சுற்றுலா வர்த்தகம் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை: