புதன், 1 ஜனவரி, 2020

பிபின் ராவத் தலைமையில் செயல்படும் ராணுவ விவகாரங்கள் துறை புதிதாக உருவாக்கம் - மத்திய அரசு அறிவிப்பு


தினத்தந்தி : புதிதாக ராணுவ விவகாரங்கள் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இது, பிபின் ராவத் தலைமையில் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி, நமது நாட்டில் முதல்முறையாக முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு, ராணுவ தளபதி பதவி வகித்த பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் புதிதாக ராணுவ விவகாரங்கள் துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறை, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையில் செயல் படும் என மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய 3 படைகள் சார்ந்த பணிகளை ராணுவ விவகாரங்கள் துறை கவனிக்கும். முப்படைகளுக் கான ஆயுதங்கள், தளவாட கொள்முதல்களையும் சட்டவிதிகள், நடைமுறைகளின்படி கவனிக்கும்.

இனி பாதுகாப்பு அமைச்சகம், 5 துறைகளை கொண்டதாக இருக்கும். அவை, பாதுகாப்பு துறை, ராணுவ விவகாரங்கள் துறை, ராணுவ உற்பத்தி துறை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறை, ஓய்வுபெற்ற படைவீரர்கள் நலன் ஆகும்.

ராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதையொட்டி, வழியனுப்பும் விதமாக பிபின் ராவத்துக்கு நேற்று ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுடன் கலந்துரையாடியபோது கூறியதாவது:-

நாட்டை எதிர்கொண்டுள்ள சவால்களை சந்திப்பதற்கு நாம் சிறப்பான முறையில் தயாராக இருக்கிறோம்.

சவாலான சூழ்நிலைகளில் மன உறுதியுடன் தங்கள் கடமை களைச் செய்து, நமது படைகளின் பாரம்பரிய மரபுகளைக் கடைப்பிடிக்கிற அனைத்து வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடுமையான குளிர், பனிக்காற்றுக்கு மத்தியில் நமது நாட்டைக் காப்பதில் உறுதியுடன் உள்ள வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் உள்ள வீரர்களுக்கு எனது சிறப்பான பாராட்டுக்கள்.

இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு அதிகாரிக்கும் எனது வாழ்த்துக்கள்.

புதிய ராணுவ தளபதி நராவனேவுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் மிகவும் திறமையான, தகுதிவாய்ந்த அதிகாரி. அவர் தனது மிகுதியான திறமை மற்றும் தொழில்முறை மூலம் இந்திய ராணுவத்தை மாபெரும் உயரத்துக்கு கொண்டு செல்வார். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பிபின் ராவத் ஓய்வு பெற்றதையடுத்து அவரது இடத்துக்கு துணை தளபதியாக இருந்து வந்த மனோஜ் முகுந்த் நராவனே (வயது 59) நியமிக்கப்பட்டார். நேற்று அவர் இந்திய ராணுவத்தின் 28-வது தளபதியாக பதவி ஏற்றார். அவரிடம் பிபின் ராவத் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

துணை தளபதி பதவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் வருவதற்கு முன்பாக நராவனே, கிழக்கு பிராந்திய ராணுவ தளபதியாக பதவி வகித்தார். சீனாவுடனான 4 ஆயிரம் கி.மீ. நீள எல்லையை பாதுகாக்கும் பணியை கிழக்கு பிராந்தியம்தான் கவனிக்கிறது.

நராவனே, மராத்தி குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை விமானப்படையில் அதிகாரி பதவி வகித்தவர். தாயார் அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக இருந்தவர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் ராணுவ கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர், நராவனே என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத்தில் சிறப்பான சேவைக்காக சேனா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம், அதி விசிஷ்ட் சேவா பதக்கம் பெற்றுள்ளார்.

இவரது தலைமையில் இந்திய ராணுவம் மாபெரும் உயரங்களை எட்டும் என்று முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: