புதன், 1 ஜனவரி, 2020

டி.டி.நாயுடு அறக்கட்டளையின் நிலத்தை ரூ.5.61 லட்சம் கோடிக்கு பதிவு செய்த சார்பதிவாளர்

T.D. Naidu

hindutamil.in : அரசால் முடக்கப்பட்ட டி.டி.நாயுடு அறக்கட்டளையின் நிலத்தை
ரூ.5.61 லட்சம் கோடிக்கு பதிவு செய்த திருத்தணி சார்பதிவாளர் இடைநீக்கம்: பதிவுத் துறை தலைவர் நடவடிக்கை
அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட டி.டி.நாயுடு அறக்கட்டளையின் 50 ஏக்கர் நிலம் ரூ.5.61 லட்சம் கோடிக்கு மேல் செட்டில்மென்ட் பதிவு செய்யப்பட்டிருப் பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சொத்தைஆவணப் பதிவு செய்தது தொடர்பாக திருத்தணி சார்பதிவாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் குன்னவலம் கிராமத்தில் தீனதயாள் (டி.டி.) மருத்துவக் கல்லூரி இயங்கி வந்தது. இங்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் எம்பிபிஎஸ் வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகி தீனதயாள் கடந்த 2013-ல் கைது செய்யப்பட்டார்.
அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினரும் அவர் மீது வழக்கு பதிவு செய்து, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான நிலங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட நிலம், முறைகேடான வகையில் செட்டில்மென்ட் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பது பதிவுத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த நவ.29-ல் நடந்த 3 செட்டில்மென்ட் ஆவணங்கள் மூலம் இந்த முறைகேடு தெரிய வந்துள்ளது.

அதன்படி ராமஞ்சேரி கிராமத்தில் 21.5 ஏக்கர், பெரியகாடாம்பூரில் 12 சென்ட் என 21.69 ஏக்கர் நிலம் ரூ.2 லட்சத்து 43 ஆயிரம் கோடிக்கு மதிப்பிடப்பட்டு டாடாஜி என்பவருக்கு தீனதயாள் செட்டில்மென்ட் செய்துள்ளார்.
அதேபோல, ராமஞ்சேரியில் 6.12 ஏக்கர், பெரியகாடாம்பூரில் 10 சென்ட் என 6.22 ஏக்கர் நிலம் ரூ.72 ஆயிரத்து 900 கோடி மதிப்பிடப்பட்டு செட்டில்மென்ட் நடந்துள்ளது. மேலும், ராமஞ்சேரியில் 22.17 ஏக்கர், பெரியகாடாம்பூரில் 10 சென்ட் என 22.27 ஏக்கர் நிலம் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 700 கோடிக்கு மதிப்பிடப்பட்டு டாடாஜி என்பவருக்கு தீனதயாள் செட்டில்மென்ட் செய்துள்ளார்.
சதுரஅடி ரூ.25.67 லட்சம்
இந்த செட்டில்மென்ட் பதிவின்படி அனைத்து சொத்துகளும் டி.டி. கல்வி, சுகாதார அறக்கட்டளையில் இருந்து டி.டி. மருத்துவம், கல்விஅறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த பதிவு ஆவணங்களின்படி ஒரு ஏக்கர் ரூ.11,192 கோடி, அதாவது ஒரு சதுர அடி ரூ.25 லட்சத்து 67 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பதிவுத்துறை கண்டறிந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு அதிக சொத்து மதிப்பில் செட்டில்மென்ட் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது பதிவுத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
செட்டில்மென்ட்டை பொறுத்தவரை, குடும்ப உறுப்பினருக்குள் பதிவு நடந்தால் 1 சதவீதமும், வெளி நபர்கள் இடையே பதிவு நடந்தால் 7 சதவீதமும் பதிவுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் குடும்ப உறுப்பினர் என்ற அடிப்படையில் 1 சதவீதம் கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நிலங்கள் உள்ள பகுதியில் பல சர்வே எண்களில் சொத்தின் வழிகாட்டி மதிப்பு ரூ.24 லட்சத்து 79 ஆயிரம் என்ற அளவே உள்ளது. எனவே, வங்கிக் கடன் பெறுவதற்காக இவ்வளவு அதிக மதிப்பில் பதிவு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
அதேநேரம், அமலாக்கத் துறையால் இந்த சொத்துகள் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2015 ஆகஸ்ட்6-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வில்லங்கச் சான்றில் இதுதொடர்பான பற்றுகை ஆணைஇன்னும் உள்ளது. அதையும் மீறி ஆவணப் பதிவு நடந்திருப்பதால், திருத்தணி சார்பதிவாளர் செல்வக்குமரனை பணி இடைநீக்கம் செய்து பதிவுத் துறை தலைவர்ஜோதிநிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். செட்டில்மென்ட் பதிவு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: