வியாழன், 2 ஜனவரி, 2020

திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி திருச்செங்கோடு ஒன்றிய குழு உறுப்பினர் ... வீடியோ


மின்னம்பலம் : திருச்செங்கோடு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றிபெற்றார்.
திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் தலைமையில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி நடந்த திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிலும் குறிப்பாக, திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, திருநங்கைகள் பலரும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இதனிடையே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 14 வார்டுகள் உள்ளன. அதில் இரண்டாவது வார்டு எஸ்.சி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. 2ஆவது வார்டில் திருநங்கை ரியா திமுக சார்பில் போட்டியிட்டார்.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருநங்கை ரியா இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை ஆவார். அவருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் , “மாற்றத்திற்கு வித்திடுவதில் எப்போதும் துவக்கப்புள்ளியாக திமுக உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 2ஆவது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள திருநங்கை ரியாவிற்கு வாழ்த்துக்கள் என்றும், இது போன்ற சமூக அங்கீகாரங்கள் தொடரட்டும்’ என்றும் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய திருநங்கை ரியா, "மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதற்கான பெருமை திமுகவையே சேரும். தனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்

கருத்துகள் இல்லை: