சனி, 4 ஜனவரி, 2020

சேலம்: நள்ளிரவில் அதிமுகவின் கோட்டையானது எப்படி?

சேலம்: நள்ளிரவில் அதிமுகவின் கோட்டையானது எப்படி?மின்னம்பலம்: சேலம் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் மொத்தமுள்ள 29 மாவட்ட வார்டுகளில் 18 இல் அதிமுகவும், 6 இல் திமுக, 4 இடங்களில் பாமக, ஒரு வார்டில் தேமுதிக என்று வெற்றி பெற்றிருக்கின்றன. ஆக மொத்தமுள்ள 29 மாவட்ட வார்டுகளில் 23 இடங்களை அதிமுக வென்றிருக்கிறது. இதேபோல 288 ஒன்றிய வார்டுகளில் அதிமுக 131, திமுக 76 ஆகிய இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.
இந்த தேர்தல் முடிவுகள் ஜனவரி 2 ஆம் தேதி இரவுக்குப் பின் மாற்றப்பட்டவை என்றும், இதுகுறித்து திமுக தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் தலைமைக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
நாம் அவர்களிடம் இதுபற்றிப் பேசியபோது புகார் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் பெயர், பதவி வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு பேசினார்கள்.

“வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த ஜனவரி 2 தொடங்கி அன்று இரவு வரை பல மாவட்ட வார்டுகளில் திமுக முன்னிலை பெறத் தொடங்கியிருந்தது. ஆனால் திமுக முன்னிலையில் இருக்கும் விவரம் தேர்தல் அதிகாரிகள் மூலம் ஜனவரி 2 பிற்பகலிலேயே அதிமுக மேலிடத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன்படி பல மாவட்டங்களில் முன்னிலை நிலவரத்தை வெளியிட்ட தேர்தல் அதிகாரிகள் சேலம் மாவட்டத்தில் மட்டும் யார் முன்னிலை என்பதை வெளியிட தயங்கினார்கள். இந்தத் தகவல் திமுகவினரிடையே பரவியதை அடுத்து மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ராஜா டூவிலரை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையமாக கிளம்பினார். பல இடங்களில் திமுகவினர் அவரிடம், வாக்கு எண்ணிக்கையை அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும், சில இடங்களில் கேமராக்கள் தெளிவில்லாமல் இருப்பதால் வாக்குப் பெட்டிகளை அப்புறப்படுத்த முயற்சி நடப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையெல்லாம் உடனே திமுக தலைவருக்கும் தெரியப்படுத்தினார்கள். அதன் பிறகுதான் திமுக தலைவர் கோயம்பேட்டிலுள்ள மாநிலத் தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டார். அவர் புறப்படும்போது அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘எடப்பாடியின் சொந்த மாவட்டம் என்பதால் சேலத்தில் முடிவுகளை அறிவிக்க தாமதப்படுத்துகிறார்கள். சேலத்தில் பல இடங்களில் திமுக முன்னிலையில் இருக்கிறது. இது அங்கே இருக்கும் பழனிசாமிக்கு கௌரவக் குறைச்சல் என்பதால் இங்கே இருக்கும் பழனிசாமி அதற்கு ஒத்து ஊதுகிறார். நாங்கள் புகார் கொடுப்போம். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தேர்தல் ஆணையர் அலுவலகம் முன்பே போராட்டத்திலும் ஈடுபடுவோம்” என்று கூறினார் ஸ்டாலின்.
இதேநேரம் சென்னையில் எடப்பாடி பழனிசாமி சேலத்தைப் பற்றி கவலையோடு விவாதித்துக் கொண்டிருந்தார். கடந்த வாரம் திடீரென ஒரு நாள் சேலத்துக்குப் பயணம் மேற்கொண்ட எடப்பாடி சேலம் மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றுவதற்கான அத்தனை வியூகங்களையும் வகுத்துக் கொடுத்துவிட்டு வந்தார். ஆனாலும் களத்தில் அதிமுக சோர்ந்து விட்ட தகவல் அவர் காதுகளை எட்டியபோது சற்று கோபமும் அடைந்தார்.

இந்த நிலையில்தான் சேலத்தில் முன்னிலை நிலவரம் மற்ற மாவட்டங்களைப் போல அறிவிக்கப்படவில்லை. ஜனவரி 2 ஆம் தேதி இரவு நேரம் ஆக திமுகவினரின் போராட்டம் விரக்தியாக மாறியது. சில இடங்களில் கடுப்பாகி வெளியேறினர். அப்போதுதான் சேலத்தில் முதல்வரின் நிழலாக இருக்கும் அந்தப் பிரமுகர் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையமாக சென்று பார்வையிடத் தொடங்கினார். அவர் வந்து சென்ற பிறகு நிலைமை மாற ஆரம்பித்தது. மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக பெரும்பான்மை பெறும் என்ற நிலையே ஜனவரி 2 ஆம் தேதி இரவு வரை இருந்தது. ஆனால் முதல்வரின் வலது கரமான அந்த நிழல் வந்து சென்ற பிறகு வாக்கு எண்ணிக்கையின் நிலை மாறியது.
கெங்கவள்ளி 50 ஆயிரம் ( மாவட்ட ) கவுன்சிலில் திமுக ஜெயித்துவிட்டது. ஆனால் இரவு 1 மணிக்கு அதிமுக ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது. இதுபோல பல இடங்களில் மாற்றப்பட்டு முதல்வரின் கௌரவம் காக்கப்பட்டது. இதுகுறித்து விரிவான புகார் மனு தயார் செய்து வருகிறோம். விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுப்போம்” என்கிறார்கள் திமுகவினர்.
இதனால் சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: