வியாழன், 2 ஜனவரி, 2020

சீமானுக்கு ஒரு நீதி நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதியா? ராஜீவ் காந்தியை கொன்றோம் என்ற சீமான் இன்னும் கைதாகவில்லை ...

சீமான் கைது: காங்கிரஸ் - பாஜக கூட்டணி!மின்னம்பலம் : நெல்லை குடியுரிமை மாநாட்டில் பேசியதற்காக நெல்லை கண்ணன் தமிழக போலீஸாரால் நேற்று (ஜனவரி 1) பெரம்பலூரில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தி வந்த நிலையில், நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கருத்து தெரிவித்தார். “நெல்லை கண்ணன் பேசிய பேச்சு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அறச்சீற்றம்தான். அதை வேறு வகையில் பார்க்கக் கூடாது. நெல்லை கண்ணன் தனி நபரல்ல, அவர் தமிழர்களின் சொத்து” என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து ஹெச்.ராஜாவிடம் கருத்து கேட்கப்பட்டபோது, “நெல்லை கண்ணனோடு சேர்த்து சீமானையும் கைது செய்ய வேண்டும்” என்று காட்டமாகப் பேட்டியளித்தார். நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட நிலையிலும் அதற்கு சீமான் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையில் கருத்து தெரிவிப்பதில் நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லை கண்ணன் கைதுக்குப் பின் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சனம் செய்து பேசியதற்காக நெல்லை கண்ணனைக் கைது செய்திருக்கிறீர்கள்.
ஆனால் ராஜீவ் காந்தியைக் கொலை செய்து புதைத்தோம் என்று பேசிய சீமானை நீங்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?
சீமான் பேச்சு குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி, அமித் ஷாவுக்கு எதிராகப் பேசினால் உடனடியாக கைது செய்கிறீர்கள். ஆனால் ராஜீவ் காந்திக்கு எதிராகப் பேசினால் எந்த நடவடிக்கையும் இல்லை. நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி? சீமானுக்கு ஒரு நீதியா?” என்று கேட்டுள்ளார் அழகிரி.
நெல்லை கண்ணன் விவகாரத்தை மட்டுமே மையமாக வைத்து சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கோரிக்கை வைத்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை: