புதன், 1 ஜனவரி, 2020

கமல்ஹாசனுக்கு எதிராக கவுதமியை களம் இறக்குகிறது பா.ஜனதா

மாலைமலர் :  மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் கமலுக்கு எதிராக அரசியலில் நடிகை கவுதமியை பா.ஜ.க. களம் இறக்கியுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
 கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்தவர் கவுதமி. பத்து வருடங்களுக்கும் மேலாக துணைவியாகவும் இருந்தார். சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கமலிடம் இருந்து கவுதமி பிரிந்தார். பிறகு சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கினார். அதில் கவுதமிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பினார். பிரதமர் மோடியை கவுதமி சந்தித்து பேசினார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கையோடு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பேட்டியளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

கடந்த மாதம் சென்னையில் பா.ஜனதா சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உள்ளாட்சி தேர்தல் தொடர் பாக பா.ஜனதா வேட்பாளர் தேர்விலும் கவுதமிக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக கவுதமி களம் இறங்கி உள்ளார். இது குறித்து பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் சிலர் எதிர்ப்பதாக கூறியுள்ளார். கவுதமி கூறிய அந்த சிலரில் நடிகர் கமல்ஹாசனும் அடங்குவார். அந்த சட்டத்திற்கு எதிராக கமலின் மக்கள் நீதி மய்யம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில் தான் கமலுக்கு எதிராகவே கவுதமி பேசியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியல் விமர்சகர்களும் கூட கவுதமி பேசிய வி‌ஷயம் பொதுவாக இருந்தாலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் கமலை சீண்டக்கூடிய வகையில் இருக்கிறது என்கிறார்கள். பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சிக்கும் கமலை விமர்சிக்க கவுதமியை அந்த கட்சி களம் இறக்கியுள்ளதாக சொல்கிறார்கள். விரைவில் கவுதமிக்கு பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: