புதன், 23 அக்டோபர், 2019

யாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா... பகீர் புகார்

maha-villagers-claim-every-vote-cast-went-in-bjp-s-favour
.hindutamil.in :புனே, பிடிஐ
மகாராஷ்ட்ரா மாநில லோக்சபா இடைத்தேர்தலில் திங்களன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாலும் அந்த வாக்கு பாஜகவுக்குச் செல்கிறது என்று பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்.
மேற்கு மகாராஷ்டிராவின் கோரேகான் சட்டப்பேரவை பிரிவில் இந்த கிராமம் உள்ளது, அந்த வாக்குச்சாவடி அதிகாரி கீர்த்தி நலவாதே ஈவிஎம் எந்திரம் மாற்றப்பட்டு விட்டது என்றும் மக்களின் இந்தப் புகார் குறித்து கூறுவதற்கொன்றுமில்லை என்றும் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் பாட்டீலுக்கு அளித்த வாக்குகள் பாஜக வேட்பாளர் உதயன்ரஜே போஸலே என்பவரின் கணக்கிற்குச் சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர்
இது தொடர்பாக முன்னாள் கிராம துணைத்தலைவர் சாயாஜி நிகம் கூறும்போது, “தீபக் ரகுநாத் பவார் என்பவர் வாக்களித்தபோது இதேதான் நடந்தது” என்றார். அதாவது என்சிபிக்கு போட்ட வாக்கு பாஜகவுக்குப் பதிவாகியுள்ளது.

நிகம் கூறுவதை கிராமத்தினர்களான ரோஹிணி பவார், ஆனந்த பவார், பிரஹ்லாத் ஜாதவ், திலிப் வாக் ஆகியோரும் எதிரொலித்தனர்.
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷஷிகந்த் ஷிண்டே கூறும்போதும் கோரேகானில் நவ்லேவாதி கிராமத்தின் வாக்குச் சாவடிக்குத் தான் சென்ற போதும் இதே போன்ற புகார்கள் அங்கு எழுந்தன என்று கூறுகிறார்.
அவர் மேலும் கூறும்போது தேர்தல் ஆணையம் இதனை சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றார்.
மேலும் அவர் வாக்குச்சாவடியை அடைந்து இந்த விவகாரத்தை தேர்தல் அதிகாரிகளிடம் எழுப்பிய போது அவர்கள் அவசரம் அவசரமாக ஈவிஎம் எந்திரத்தை மாற்றியதாக தெரிவித்தார்.
அக்டோபர் 21ம் தேதி மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுடன் சதாரா லோக்சபா இடத்துக்கும் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது
தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷிண்டே மேலும் கூறும்போது, “சில வாக்காளர்களிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, என்சிபி வேட்பாளருக்கு போடும் ஓட்டுக்கள் பாஜக பெயரில் செல்கிறது என்று புகார் எழுப்பினர். நான் வாக்குச்சாவடிக்கு செல்லும் நேரத்தில் 270 வாக்குகள் இதுபோன்று பதிவாகியிருந்தது.
இதற்கிடையே ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார், அவர் பொத்தானை அழுத்தும் முன்பே பாஜகவின் தாமரை சின்னத்தில் ஒளி பளிச்சிட்டுள்ளது. அவரும் இதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். அதன் பிறகு அதிகாரிகள் எந்திரத்தில் பிரச்சினை இருப்பதாக வாய்மொழியாக ஒப்புக் கொண்டனர்” என்றார் ஷிண்டே.
இதற்கு தீர்வளித்த ஷிண்டே, “வாக்குச் சாவடி அதிகாரி முன்னிலையில் ஒருவர் வாக்களிக்க வேண்டும், அப்படிச் செய்தால் சரியாக போகிறதா என்பதைக் கண்டுபிடிக்கலாம்” என்று நான் ஆலோசனை வழங்கினேன். மற்றுமொருவர் வாக்களிக்க எந்திரத்தின் அருகில் சென்ற போது மெஷின் வேலை செய்வதை நிறுத்தி விட்டது.
உடனே சில அதிகாரிகள் எந்திரத்தை சரிபார்த்து எங்களிடம் மெஷினில் பிரச்சினை உள்ளது என்று தெரிவித்தனர். அதன் பிறகு மெஷின் மாற்றப்பட்டது என்கிறார் ஷிண்டே.
தேர்தல் அதிகாரி நலவாதே கூறும்போது, இதனை பரிசோதிக்க வாக்காளர்கள் படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்தால் அவ்வாறு வாக்கு மாறி விழுகிறதா என்பதைச் சரிபார்த்து விடலாம் என்று கூற மக்கள் அதற்கு தயாராக இல்லை.
“நாங்கள் எந்திரத்தை மாற்றினோம் ஆனால் அது பொத்தானை அழுத்துவதில் இருந்த சிறு பிரச்சினைக்காகத்தானே தவிர, இவர்களது கோரிக்கையை, புகார்களை அடுத்து மாற்றவில்லை, அவர்கள் புகாருக்கும் எந்திரம் மாற்றப்பட்டதற்கும் தொடர்பில்லை” என்றார் நலவாதே

கருத்துகள் இல்லை: