ஞாயிறு, 20 அக்டோபர், 2019

அலிபாபாவும் 40 திருடர்களும்: சீமான் மீது மீண்டும் வழக்கு!

அலிபாபாவும் 40 திருடர்களும்: சீமான் மீது மீண்டும் வழக்கு!மின்னம்பலம் : அமைச்சர்களை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதற்காக கடந்த 16ஆம் தேதி தூத்துக்குடி சென்ற சீமான், செய்தியாளர்களிடம் பேசும்போது, “என்னைப் பொறுத்தவரை அலிபாபாவும் 40 திருடர்களும் போலத்தான் ஜெயலலிதாவும் 40 அமைச்சர்களும். அவர்கள் சொல்லும் ஜெயலலிதா தற்போது இல்லை. ஆனால், நாற்பது திருடர்கள் மட்டும் அப்படியேதான் உள்ளனர்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் எதிர்வினையாற்றி இருந்தனர்.

இந்த நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சுயம்பு என்பவர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “அமைச்சர்களை திருடர்களுடன் ஒப்பிட்டு சீமான் கருத்து தெரிவித்துள்ளார். எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். அதன் பேரில் சீமான் மீது 153 (ஏ), 505(1)(பி) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் தென்பாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த வாரம் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சீமான், “ஆமாம்.. நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்” என பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. சீமானின் இப்பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், அவருக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். விழுப்புரம் எஸ்.பி அலுவலகம், டிஜிபி அலுவலகம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் மீது விக்கிரவாண்டி காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சர்ச்சைக்கு பதில் சொல்லிய சமயத்தில்தான் அமைச்சர்களையும் சீமான் விமர்சித்தார். சீமான் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அவருக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது

கருத்துகள் இல்லை: