வியாழன், 24 அக்டோபர், 2019

காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !


கலைமதிஅடக்குமுறையின் புதிய வடிவங்களாக முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவதையும், கைதுசெய்யப்பட்டவர்களை பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவிப்பதையும்  பாஜக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் ஜம்மு – காஷ்மீரின் சிறந்து அந்தஸ்து வழங்கிய 370 பிரிவை நீக்கியது மோடி அரசாங்கம். போராட்டங்களுக்குப் பயந்து அரசியல் தலைவர்கள், கிளர்ச்சியாளர்கள், போராட்டக்காரர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில் சில தலைவர்களை பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய நிகழ்வுகள் குறித்து கருத்து சொல்லக்கூடாது, பேசக்கூடாது என பத்திரத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிக்கொண்டு தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு தந்திருக்கும் அடிப்படை உரிமையான பேச்சு சுதந்திரத்தை இது மீறுகிறது என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் இரண்டு பெண்கள் விடுவிக்கப்பட்டபோது, மாற்றியமைக்கப்பட்ட பிரிவு 107-ன் கீழ் கையெழுத்து வாங்கியுள்ளனர். இந்தப் பிரிவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதான ஒருவரை பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவிக்க மாவட்ட நீதிபதிக்கு அதிகாரம் வழங்குகிறது.
வழக்கமாக இந்தப் பத்திரத்தில் உள்ள வார்த்தைகளான பிரச்சினைக்குரியவர்கள், எந்தவித அமைதி மீறலிலும் ஈடுபடக்கூடாது அல்லது அவருடைய செயல் அமைதியை குலைக்கும் வகையில் இருக்கக்கூடாது  என்றும் அப்படி மீறுகிறவர்கள் குறிப்பிட்ட தொகையை மாநில அரசாங்கத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“பிரிவு 370 நீக்கத்துக்கு எதிராக ஜம்மு – காஷ்மீரில் எந்த கருத்தையும் சொல்லக்கூடாது; அறிக்கை வெளியிடக்கூடாது; பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது; இதுதொடர்பான பொது நிகழ்வுகளில் பங்கேற்கக்கூடாது. சமீப காலத்தில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் சட்டம் – ஒழுங்கை கருத்தில் கொண்டு ஒராண்டு காலத்துக்கு இந்த நிலை தொடரும்” எனவும் பிணைத்தொகையாக ரூ. 10,000 டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், பத்திரத்தை மீறி நடந்தால் ரூ. 40,000 வழங்க வேண்டும் எனவும் பத்திரம் கூறுகிறது. இதை மீறினால் கைதாகவும் வாய்ப்புள்ளது.
இத்தகைய பத்திரங்கள் பிரச்சினைக்குரியவை மட்டுமல்லாது அரசியலமைப்புக்கு எதிரானவை என சட்ட நிபுணர்களும் உரிமை செயல்பாட்டாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
“அரசியலமைப்பின் பிரிவு 19 (2)-ன் கீழ், உடனடியாக வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்தால்தான் பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியும். வன்முறைத் தூண்டுதல் இல்லாத வரை, புரட்சிகர கருத்துக்கள்கூட அனுமதிக்கப்படலாம் என உச்சநீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. எனவே, பிரிவு 107-ன் படி, ஒரு தனி நபரின் சுதந்திரத்தை நிபந்தனையுள்ள வகையில் பயன்படுத்த முடியாது. இது அவர்களின் சுதந்திர பேச்சுரிமைக்கு அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட கட்டுப்பாடு” என்கிறார் வழக்கறிஞரும் அரசியலமைப்பு குறித்து எழுதிவருபவருமான கவுதம் பாட்டியா.
இந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பல பேர் விடுதலை செய்யப்பட்டதாகவும் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட சில தலைவர்கள் நிராகரித்துவிட்டதாகவும் டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் நிலையில் பிரிவு 107-ன் படி இத்தகைய பிரிவின் கீழ் பத்திரத்தை கையெழுத்து வாங்குவது வழக்கமான நடவடிக்கைதான் என்கிறார் மாநில அரசின் வழக்கறிஞர்.
மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ், கடந்த இரண்டு மாதங்களாக 6000-க்கும் அதிகமானவர்கள் கைதான நிலையில், பலர் இந்த மாற்றியமைக்கப்பட்ட பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வெளியே விடப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக தேசிய பொது செயலாளர் ராம் மாதவ், உள்ளூர் தலைவர்கள் மக்களிடம் ஆயுதங்களை எடுத்து, தங்களை தியாகம் செய்ய வரும்படி அழைப்பதாக கூறியிருந்தார். அதனால்தான் அமைதியை நிலைநிறுத்த மத்திய அரசாங்கம் தடுப்பு நடவடிக்கையாக பலரைக் கைது செய்வதாகவும் அவர் பேசினார்.

“அமைதியை காப்பாற்ற 200 – 300 பேர் வரை கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து நாங்கள் செய்வோம்” எனவும் அவர் கூறியிருந்தார்.
வன்முறையைத் தூண்டினால் கைது செய்ய சட்டங்கள் இருக்கும்போது, அடக்குமுறையின் புதிய வடிவங்களாக முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவதையும், கைதுசெய்யப்பட்டவர்களை பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவிப்பதையும்  பாஜக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: