வியாழன், 24 அக்டோபர், 2019

விஜயகுமார் ( கல்கி சாமியார்) பார்களில் தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வர நேரமாகிவிடும்

சாவித்திரி கண்ணன் : விஜயகுமாரைப் பற்றி( கல்கி சாமியார்) நான் விசாரிக்க
களமிறங்கிய காலகட்டத்தில் அவர் விஸ்வரூப வளர்ச்சி காண தொடங்கிய ஆரம்ப நிலை!
இப்போது இருப்பது போல தேஜஸான உடல்வாகிலோ,பட்டு வேட்டி,பட்டு சட்டையிலோ அந்த காலத்தில் அவர் தோற்றம் காட்டவில்லை!
மெலிந்த தேகம்,காவி உடையில் அவர் நின்றபடி இருக்கும் ஒரே போட்டோ மட்டும் தான் அன்று!
சுமார் 25 வருடங்கள் கடந்துவிட்டதால், எல்லாம் நினைவில் இல்லை!
ஆனால்,ஒரே ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் வாழ்ந்த பெரம்பூர் இல்லத் தெருவாசிகள் சொன்னது மட்டும் மறக்க முடியாதது.
விஜயகுமாருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமும்,பாரில் அளவோடு தண்ணி அடிக்கும் பழக்கமும் இருந்தது. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மீது ஈடுபாடு இருந்தது. கொஞ்சம் அறிவுத்தேடல் உள்ள இயல்பான மனிதர் தான் என்பதை நாம் யூகிக்கலாம்!
ஆகவே அவர் இரவு நேரம் கடந்து தான் வீட்டுக்கு வருவாராம்! அப்போது அவரது மனைவி நன்கு தூங்கிவிடுவாராம்.
அவர் மனைவிக்கு ஒரு சின்ன பலஹீனம் இருந்தது. அவர் தூங்கிவிட்டால் அவரை யாரும் சுலபத்தில் எழுப்ப முடியாது!

ஆகவே நேரம் கடந்து வீட்டுக்கு வரும் விஜயகுமாருக்கு இது ஒரு பெரிய சவாலாகிப் போனது. அவர் ரொம்ப நேரம் கதவைத் தட்டுவதும்,குரலெடுத்து கத்துவதும் அடிக்கடி நடக்குமாம்! சில சமயங்களில் பொறுமை இழந்து, கீழிருந்து மாடியில் உள்ள சன்னலுக்குள் கல்லை வீசி மனைவியை எழுப்பும் நிலையும் ஏற்படுமாம்!
அந்தச் சமயம் இருவருக்கும் வாக்குவாதமும் ,சண்டையும் நடு நசியில் நடக்குமாம்! இதை அந்த தெருவில் உள்ளவர்கள் நினைவு கூர்ந்து சொன்னார்கள்!
இதை ஒரு அவமானகரமான விஷயம் எனக் கருதுவதற்கில்லை!
ஆனால், தன்னைக் கடவுள் என்று லட்சக்கணக்கான மக்களை நம்ப வைத்தவர்,இன்று வருமான வரி அதிகாரிகளைக் காண பயந்து ஒளிவதும், தன்னை நேர்பட வெளிப்படுத்திக் கொள்ளாமல் வீடியோவில் பேசி அறிக்கை தருவதும் தான் அவமானமாகத் தெரிகிறது எனக்கு!
ஒருவர் கடவுள் என்று தன்னை கருதும் பட்சத்தில் இந்த உலகமே அவருடையதாகிவிடுகிறது. ஏனெனில்,அவரையே மக்கள் தங்கள் உடைமையாக்கி,அதற்கு மேல் எதுவுமில்லை என நினைக்கும் நிலையில்! அதாவது அவரே மக்கள் உடைமையாகிவிடுவது என்பது எவ்வளவு உன்னதமானது!
பிறகுஎப்படிஇவ்வளவுஉடைமைகளை,தங்கம்,வைரம், நிலபுலன்களை அவருக்கு தனதாக்கிக் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது என்பது தான் நமது அடிப்படை கேள்வியாகிறது. இன்றைய இந்த கபடதாரியை விட அன்று தன் மனைவியிடம் சண்டையிட்ட சராசரி விஜயகுமார் எவ்வளவோ மேல் என்பது தான் என் நிலைபாடாகும்!

கருத்துகள் இல்லை: