வெள்ளி, 25 அக்டோபர், 2019

விக்கிரவாண்டி: திமுக வீழ்ந்தது எப்படி? விரிவான flashback

விக்கிரவாண்டி: திமுக வீழ்ந்தது எப்படி?அக்டோபர் 21 ஆம் தேதி நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24 ஆம் தேதி வெளிவந்திருக்கின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியைக் கைப்பற்றிய திமுக, இந்த இடைத்தேர்தலில் அதை அதிமுகவிடம் இழந்திருக்கிறது.
விக்கிரவாண்டி ரிசல்ட் விவரம்
அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 766 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி 68 ஆயிரத்து 842 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியிருக்கிறார். பதிவான வாக்குகளில் அதிமுக வேட்பாளர் 60% பெற்றிருக்கிற நிலையில் திமுக வேட்பாளர் புகழேந்தி 36.48 சதவிகிதத்தை ஈட்டியுள்ளார். இந்த இருவரைத் தாண்டி நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமி 2 ஆயிரத்து 921 வாக்குகளைப் பெற்று வெகுதூரத்தில் மூன்றாம் இடத்தோடு நிற்கிறார்.
2016-2019 ஒப்பீடு!
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாமக ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன. தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி அமைத்து அதன் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி விக்கிரவாண்டியில் போட்டியிட்டது.


அதிமுக வேட்பாளர் அப்போது 56 ஆயிரத்து 845 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பெற்றார். திமுக 63 ஆயிரத்து 757 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. மார்க்சிஸ்ட் தனியாக நின்று 9 ஆயிரத்து 981 வாக்குகளும், பாமக தனியாக நின்று 41 428 வாக்குகளும் பெற்றது. பாஜகவும் போட்டியிட்டு 1291 வாக்குகள் பெற்றது.
2016 தேர்தல் என்பது ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக சந்தித்த தேர்தல். ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் என்பது ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரது ஒருங்கிணைப்பில் சந்தித்த தேர்தல். 2016 இல் தோல்வியை சந்தித்த அதிமுக 2019 இல் விக்கிரவாண்டியில் வெற்றிபெற்றிருக்கிறது. அந்தத் தேர்தலில் தனித்து நின்ற அதிமுக, பாமக, பாஜக ஆகியவை இன்று ஒரே அணியாக நின்று தேர்தலை சந்தித்தன. மக்கள் நலக் கூட்டணியில் இருந்த தேமுதிக அதிமுக அணிக்கு வந்திருக்கிறது. அதன்படி 2016 தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக ஆகியவை பெற்ற வாக்குகளை ‘பிளைண்ட் கால்குலேட்’ என்ற வகையில் கணக்கிட்டால் கூட மொத்தம் 99 ஆயிரத்து 564 வாக்குகள்தான் அதிமுக அணிக்கு கிடைத்திருக்க வேண்டும். இந்தக் கணக்கு மிஞ்சிப் போனால் ஒரு லட்சம் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்திருக்கவேண்டும். ஆனால் இந்தத் தேர்தலில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 745 வாக்குகளைப் பெற்றிருக்கிறார் அதிமுக வேட்பாளர்.
அதேநேரம் கடந்த முறை மக்கள் நலக் கூட்டணி பெற்ற 9,981 வாக்குகளோடு திமுக வேட்பாளர் பெற்ற 63ஆயிரத்து 757 வாக்குகளை சேர்த்தால் 73 ஆயிரத்து 738 வாக்குகள் வந்திருக்க வேண்டும். ஆனால் இம்முறை திமுக பெற்ற வாக்குகள் 68 ஆயிரத்து 828 வாக்குகள்தான்.ஆக திமுக கூட்டணி தனக்கே உரிய வாக்குகளில் கூட 5 ஆயிரம் வாக்குகளை இழந்திருக்கிறது என்பதுதான் புள்ளிவிவரம் சொல்லும் உண்மை. தேமுதிகவின் ஓட்டுகள் அதிமுகவுக்குப் போய்விட்டன என்று வைத்துக் கொண்டால் கூட திமுக தனது பழைய கணக்கில் இருந்து முன்னே செல்லவில்லை என்பது தெளிவாகிறது. அதாவது ஆட்சிக்கு எதிரான வாக்குகளை திமுக ஈர்க்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

வாக்கு பலம் மாறாமல் இருக்குமா?
2016 தேர்தல் கட்சிகள் தனித்தனியே நின்றதற்கும், இப்போது கூட்டணி அமைத்து நின்றதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே அதே வாக்குகளை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்ற கருத்து ஒருபுறம் எழுந்தாலும் அந்தந்த கட்சிகளுக்குரிய வாக்குகள் இந்த மூன்று வருடங்களில் மிக அதிக அளவு மாற்றம் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்பதும் உண்மையே. அதன்படி பார்த்தால் திமுக தன் வாக்குகளையும், தன் கூட்டணி வாக்குகளையும் தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டது என்ற விமர்சனம் எழுகிறது. அதேபோல அதிமுக கடந்த முறை எதிர்த்து நின்ற கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அந்த கூட்டணிக் கட்சியின் உழைப்பை முழுமையாகப் பயன்படுத்தி வாக்குகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்க்கிறது என்பதும் இந்தக் கணக்கு சொல்லும் சங்கதியாக இருக்கிறது.
முதல் கோணல் முற்றிலும் கோணல்
தேர்தல் முடிந்ததும் விக்கிரவாண்டி தொகுதியின் பொறுப்பாளர்களை நேரில் சந்தித்த ஸ்டாலின், ரிசல்ட் எப்படி இருக்கும் என்று ஆலோசித்திருக்கிறார். அப்போது அவர்கள் ஜெயித்துவிடுவோம். ஆனாலும் வாக்கு வித்தியாசம் மூவாயிரத்தைத் தாண்டாது என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் சுமார் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக பெற்ற வெற்றி என்பது விக்கிரவாண்டியில் வேலை செய்த திமுக பொறுப்பாளர்கள் அத்தனை பேருக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் இப்படி அதிர்ச்சி அளிக்கக் காரணமே, தேர்தலின் போது நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட அதிருப்தியை திமுக தலைமை கண்டுகொள்ளாமல் விட்டதுதான் என்கிறார்கள் விக்கிரவாண்டி திமுக நிர்வாகிகள்.
தேர்தல் பணியைத் தொடங்கியபோதே பொன்முடி தனது ஆதரவாளர்களிடமும், கட்சியின் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடமும், ‘இடைத் தேர்தல் முடிஞ்சவுடனே தலைவர் எனக்கு தலைமயில் பொறுப்பு தருவதாக சொல்லிட்டாரு. அதுக்கப்புறம் கௌதம சிகாமணிதான் மாவட்டச் செயலாளராக வருவாப்ல’ என்று சொல்லியிருக்கிறார். அப்போதே பல நிர்வாகிகள் விரக்தியடைந்துவிட்டனர்.
’89 இல் இருந்து விழுப்புரம் திமுகவை இவரே கட்டியாள்வாரு. இவருக்குப் பிறகு இவர் மகன் வருவாரு. அப்புறம் நாமெல்லாம் எதுக்கு கட்சி வேலை பார்க்கணும்’ என்று பல நிர்வாகிகள் குமுறலாக வெடித்தனர். அந்த முதல் கோணல்தான் தேர்தல் முடிவை புரட்டிப் போடும் அளவு முற்றிலும் கோணலாகிப் போனது.
வெளிமாவட்ட நிர்வாகிகளை வெறுப்பேற்றிய பொன்முடி
இடைத்தேர்தல் என்றாலே வெளிமாவட்ட நிர்வாகிகள் எல்லாரும் வந்து தேர்தல் பணியாற்றுவது இயல்பாகிவிட்டது. ஆனால் விக்கிரவாண்டி தொகுதியில் ஏன் தான் வந்தோம் என்று பல வெளிமாவட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள், உட்பட பல நிர்வாகிகள் அலுத்துக் கொண்டுவிட்டனர். இதற்குக் காரணமாக அவர்கள் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடியையே சுட்டிக் காட்டுகிறார்கள். தொகுதிக்குள் பிரச்சாரம் செய்யும்போது சில பகுதிகளில், ‘ஏஜி சம்பத்தை கூட்டி வந்திருந்தா இந்த ஏரியாவுல நல்லா இருக்குமே’ என்று சிலர் சொல்ல, வெளிமாவட்ட நிர்வாகிகள் இதை பொன்முடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்போது பொன்முடி, ‘யார் வந்தா வரலைன்னா உங்களுக்கென்ன? கொடுத்த பூத்துல வேலையப் பாருங்க’ என்று நோஸ்கட் பண்ணிவிட்டார். இது ஒன்றுதான். இதுபோல் பல வெளிமாவட்ட நிர்வாகிகள் பொன்முடி மீது மிகுந்த அதிருப்தியில் இருந்தபோதும் கட்சிக்காக கடமையே என்று வேலை செய்து முடித்தார்கள். திமுக ஓட்டுகள் திமுகவுக்கு முழுதாய் கிடைக்காமல் போனதற்குக் காரணங்களில் இது முக்கியமானது என்கிறார்கள் வெளி மாவட்ட திமுக நிர்வாகிகள்.
எ.வ. வேலு- பொன்முடி இடைவெளி!
இடைத்தேர்தலை ஒட்டி மாசெக்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் கட்டாய வசூல் நடத்தியது திமுக தலைமை. அந்தப் பணமெல்லாம் பொன்முடியிடம்தான் முதலில் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் பணம் திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்கிற புகார் திமுக தலைவர் ஸ்டாலினின் காதுகளுக்கு நேரடியாகச் சென்றது. இதனால் அவர் பாதியிலேயே நிதியைக் கையாளும் பொறுப்பை எ.வ. வேலுவிடம் கொடுத்தார். ஆனாலும் வேலுவிடம் முழுமையான பணம் வந்து சேரவில்லை என்கிறார்கள். இந்த நிதிச் சிக்கல்தான் திமுக கூட்டணியில் பயங்கர பிரச்சினைகளுக்கு விதையாகிப் போனது. தனக்குரிய முக்கியத்துவத்தில் தலையிடுகிறார் எ.வ.வேலு என்று பொன்முடி கோபமாகி தனது ஆதரவாளர்களிடம் மனம் புழுங்கிப் பேசியிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு உரிய நிதியோ, அழைப்போ சென்று சேராத நிலையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் நேரடியாக ஸ்டாலினுக்கு நெருக்கமான விஐபியிடம் பேசி, தகவலை ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அதன் பிறகும் விடுதலைச் சிறுத்தைகளுக்கான உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை. இதைக் கேள்விப்பட்டுதான் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் விடுதலைச் சிறுத்தைகள் அடிமட்ட நிர்வாகிகள் பலரையும் அரவணைத்துவிட்டார்.
வன்னியர்களுக்கு ஆதரவான அறிக்கை!
அக்டோபர் 7 ஆம் தேதி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பதாகவும், திமுக வன்னியர்களுக்கு செய்த சாதனைகள் குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் ஓர் அறிக்கை வெளியிட்டார். இதுதான் விக்கிரவாண்டி தேர்தலை சாதிக் களமாக மாற்றிவிட்டது என்று திமுகவின் அபிமானிகள் பலரும் கவலைப்படுகிறார்கள்.
வன்னிய சமுதாய எண்ணிக்கைக்கு சற்றே குறைவாக தலித் சமுதாயத்தினர் இருக்கும் நிலையில், தனது கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருந்தபோதும் வன்னியர்களுக்கு திமுக செய்திருக்கும் நன்மைகள் குறித்து தொடர்ந்து ஸ்டாலின் விவாதித்ததை விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல தொகுதியில் உள்ள தலித் மக்களும் ரசிக்கவில்லை. கூட தலித் அல்லாத, வன்னியர் அல்லாத மக்களும் ரசிக்கவில்லை. தவிர திமுகவின் ஜெகத்ரட்சகன், செல்வகணபதி உள்ளிட்டோர் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது ராமதாஸுக்கு பதில் சொல்வதையே முக்கிய கடமையாக கருதினார்கள். ‘ ஐயா ராமதாஸ் இல்லாமல் என் வீட்டுல ஒரு கல்யாணம் கூட நடந்ததில்ல’ என்றெல்லாம் செல்வகணபதி பேசியதை வன்னியர்களும் நம்பவில்லை, வன்னியர்கள் அல்லாதோர்
ரசிக்கவில்லை.
இதுபற்றி தனது ஆதரவாளர்களிடம் பேசிய பொன்முடி, ‘தலைவருக்கு இந்த அறிக்கை விடச் சொல்லி ஐடியா கொடுத்ததே வேலுதான்’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

பாமகவின் பஞ்சமி பாலிடிக்ஸ்
வன்னியர்கள் பற்றி திமுக அறிக்கை விட்டு வாலண்டியராக வண்டியில் ஏறியதால்தான் பிரச்சாரத் திட்டமே இல்லாத பாமக நிறுவனர் ராமதாஸ் விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய களமிறங்கினார்.
இது அதிமுகவுக்கு எதிர்பாராத பாசிடிவ் டிவிஸ்ட் ஆக மாறியது. இதோடு இல்லாமல் அசுரன் படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலம் பற்றி ஒரு ட்விட் போட, அதை சிக்கெனப் பிடித்துக் கொண்ட ராமதாஸ், ‘முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம்தான்’ என்று ஒரு தகவலை வெளியிட்டார். ஏற்கனவே இது அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்ட பழைய தகவல்தான் என்றாலும் விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் தலித்துகளின் வாக்குகளை திமுகவுக்கு எதிராகத் திருப்புவதற்கு இந்த, ராமதாஸின் இந்த பஞ்சமி பாலிடிக்ஸை அதிமுக அருமையாகப் பயன்படுத்திக் கொண்டது.
திமுக தலைமை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
இவ்வாறு உட்கட்சி அதிகாரச் சண்டைகளும், திமுக முன்னெடுத்த தேர்தல் விவகாரங்களை எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு எதிராகவே பூமராங்காக திருப்பியதாலும் விக்கிரவாண்டியில் தனது சொந்த பலத்தையே பெற முடியாத அளவுக்கு போய்விட்டது திமுக. இதையெல்லாம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த சுய பரிசோதனையில் சில களையெடுப்புகளையும் கறாராக செய்ய வேண்டும். இல்லையென்றால் எதிரிகளின் வியூகத்துக்கு திமுக தொண்டர்களின் உழைப்பு தொடர்ந்து பலியாகிக் கொண்டேதான் இருக்கும் என்கிறார்கள் திமுகவின் விழுப்புரம் மாவட்டத் தொண்டர்கள்.

கருத்துகள் இல்லை: