செவ்வாய், 22 அக்டோபர், 2019

புலம் பெயர் ஈழத்தமிழர்களும் தமிழக அரசியலும்!

Kathir RS : 30-35 வருடங்களுக்கு முன்னால் கையிலிருந்த பணம் தங்கம் வீடு வாசல் என இருந்ததையெல்லாம் கொட்டிக் கொடுத்து பல இடைத்தரகர்களிடம் சட்ட விரோத ப்ரோக்கர்களிடம் ஏமாந்து சரக்கு கப்பல்களில் கன்டெய்னர்களுக்குள்ளும் படகுகளிலும் விமானங்களின் சக்கரப்பகுதிகளிலும் ஒளிந்துகொண்டு ஐரோப்பாவிற்கும் சிங்கப்பூர் மலேசியாவிற்கும் இன்னும் பிற நாடுகளுக்கும் வெறும் மனிதனாக போய் இறங்கி அகதி வாழ்க்கை வாழ்ந்து கிடைத்த வேலையை செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து குடியுரிமை பெற்று பெரும்பாடு பட்டு குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு வாழ்வில் நிமிர்ந்து வளமாக வாழும் பல புலம்பெயர் ஈழத் தமிழர்களில் பலர் இன்று சில பைத்தியக்காரர்களுக்கு பணம் அனுப்புகிறார்கள்.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் நிமிர்ந்த காலகட்டமாக 1990 களைச் சொல்லலாம்.
1980 களில் அதிக அளவில் புலம் பெயரத் தொடங்கி 1990 களில் செட்டிலாக தொடங்கிவிட்டனர்.
போராளிகளுக்கு அதிக அளவில் நிதி உதவி அளிக்கத்தொடங்கிய கால கட்டம் 1995 க்கு பிறகான காலகட்டம்.
சினிமா குழுவினர் அதிக அளவில் கலை நிகழ்ச்சிகளுக்காக டூர் அடித்த காலகட்டம்.
தமிழ் சினிமா வெளி நாட்டு சந்தையில் அதிகமாக விலை போன கால கட்டம்.
அதிகமாக சினிமா படப்படிப்புகள் நடந்த கால கட்டமும் கூட.
இவையெல்லாம் நடந்தது புலம் பெயர் ஈழத் தமிழர்களின் பொருளாதார எழுச்சியால்தான்.
இதே காலத்தில்தான் ராஜீவ் படுகொலை
தேர்தல் தோல்வி அதன் பின்னான திமுக பிளவு இவற்றால் திமுகவினர் உடைந்திருந்தனர்.
எம்ஜிஆர் இல்லாத அதிமுக ஈழத் தமிழர் விவகாரத்தில் எதிர் நிலையை எடுத்திருந்தது. அதற்கு காரணம் யார் என்பதை சொல்லத் தேவையில்லை.
திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே இலங்கை பிரச்சனையை உணர்வு ரீதியாக அணுகுவதை தவிர்த்து அரசியல் ரீதியாக மட்டுமே அணுகிய நிலையில் திடீரென பல ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புகள் தமிழகத்தில் முளைக்கத்தொடங்கின.

அவர்களில் பலர் ஈழத்தமிழர்களை ஐரோப்பாவில் சந்தித்து அவர்கள் படும் துயரை கண்டு கசிந்துருகி இவர்கள் வீட்டில் சாப்பிட்டு தூங்கி பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தவர்கள்.
இதில் அதிகப்படியாக சினிமாக்காரர்களும் சில தொழிலதிபர்களும் இருந்தனர்.
இவர்களில் பலர் ஐரோப்பா கனடாவில் வசூல் செய்து இந்தியா மூலம் இலங்கைக்கு பணம் கொடுக்கும் ஹவாலா என்ற பணப்பறிமாற்ற முதலைகளாக உருவாகினர்.
கோடிக்காணக்கான ரூபாய்கள் இவர்களிடம் எப்போதும் இருந்த காரணத்தால் இவர்கள் மிகவும் செழிப்பாக இருந்தார்கள்.தொடங்கிய சப்ளை நிற்கும் வரை இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..நின்றாலும் லாபம்தான்.
இப்படி ஒரு நூதனமான பணப்பரிமாற்றம் பலரை கோடிஸ்வரர்கள் ஆக்கியது.இது 1990 களின் இறுதியில் மிக வேகமாக வளர்ந்தது.
2000க்கு பிறகு இணையப்பயன்பாடு நெட் பேங்கிங் போன்றவை உலகில் அதிகரிக்கத் தொடங்கிய பிறகு இது கொஞ்சம் சுனக்கமடைந்தது.அதே நேரம் பல மோசடிகள் அம்பலமாயின.ஆனால் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை.
அமைதிப் பேச்சு வார்த்தை நடந்த காலத்தில்
கிளிநொச்சி ஈழத்தின் தலைநகராக பரிணமித்து விட்டதாலும் 2002 -2006 வரையிலான போரற்ற சூழலில் அனைவரும் அமைதிகாத்ததாலும் இந்த நெட்வொர்க் சைலன்ட் மோடில் இருந்தது.
தொழில் நுட்பம் பெரிதாக வளர்ந்து விட்ட சூழலில் தமிழ்நாட்டு புள்ளிகளின் ஆதரவும் அவசியமும் அதன்பின் புலம் பெயர் தமிழர்களுக்கு அதிகம் தேவைப்படமால் போனது.
2008ல் இறுதிப் போர் தொடங்கிய போது இந்த நெட்ஒர்க் மீண்டும் திடீரென ஆக்டிவேட் ஆனது.
போர் உச்சத்திலிருந்த போது இந்த நெட்ஒர்க்கில் ஒரு சுனாமி அடித்தது என்றே சொல்ல வேண்டும்.
இந்த முறை பல புதிய கட்சிகள் போராளிகள் பிறந்தார்கள்.அவர்கள் தமிழகத்தின் ஈழ அரசியல் வியாபரத்தின் லாபத்தை பல மடங்கு உயர்த்தினார்கள்.
ஈழப்பிரச்சனைதான் தமிழகத்தின் முன்மைப் பிரச்சனை என்பதாவே அவர்கள் பேசினர்.
திமுகவை மட்டுமே கரித்து கொட்டிய இந்த கூட்டம் விபு தலைவர் கொல்லப்பட்டதாக அறிவித்த பிறகு கலைஞர்தான் ராஜபக்‌ஷேவின் கமான்டர் என்று கண்டுபிடித்துவிட்டார்கள்.
அளவற்ற வெறுப்பை காழ்ப்பை அருவருக்கத்தக்க சொற்களை உமிழத்தொடங்கினர்.அது இன்றும் தொடர்கிறது.திமுகவை கலைஞரை திட்டும் இந்த ஒற்றை அரசியலை தொடர்ந்து செய்யும் ஒரே காரணத்திற்காக புலம் பெயர் தமிழர்கள் இவர்களுக்கு தொடர்ந்து பணம் அனுப்பி வருகிறார்கள்.
அனுப்பட்டும்..அனுப்பட்டும்..
அவர்கள் ஆசைப்படியே தமிழகத்தில் திமுக வீழ்ந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று வாக்கு சேர்த்து உருவாக்கிய அதிமுக ஆட்சிதான் இன்றும் நடக்கிறது.
ஆனால் ஈழம் ஏன் இன்னும் மலரவில்லை என்று தெரியவில்லை.
மேடைகளில் திமுக எதிர்ப்பு மந்திரத்தை உச்சரிக்கும் விதத்தில் தற்போது ஏதோ சுணக்கம் ஏற்பட்டு விட்டது போலத் தெரிகிறது.
இன்னும் சில மில்லியன் டாலர்கள் கிடைத்தால் ஈசிஆர் பங்களாவில் உரு போட்டு உச்சாடனம் செய்து இன்னும் தீவிரமாக முழங்க ஏதுவாக இருக்கும்.
ஈழத்தமிழர்கள் உண்மையிலேயே வாழ்வற்று நின்றபோது உதவிய கட்சிகள் திமுகவும் அதிமுகவும்.அதிக அளவில் பண உதவி செய்த கட்சி அதிமுக என்றே வைத்துக் கொள்வோம்.ஆனால் நன்கொடையாக வசூல் செய்து கொடுத்த பணத்தை கணக் கிட்டால் திமுகவினரின் தொகையே கூடுதலாக இருக்கும்.
பெரும் பணம் கொடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு போக முடியாத ஏழை அகதிகளின் புகலிடமாக இருந்த தமிழ்நாட்டில் தன்னால் முடிந்த வரை உதவிகளை செய்த கட்சி திமுக.
ஆனால் கிட்டிய பலன் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்.
இன்று புலம் பெயர் தமிழர்கள் வாழ்வில் உயர்ந்த பின் வெறும் வெற்றுக் கூச்சல் போட்டு ஈழம் பெற்றுத்தருகிறோம் என்று கட்டை உருட்டி அவர்கள் பொருளாதாரத்தை சுரண்டும் கட்சிகளாக இருப்பவை எவையென்று சுட்டத்தேவையில்லை.
இப்படியாக...
புலம் பெயர் ஈழத்தமிழர்களும் தமிழக அரசியலும்!
***
Kathir RS
21/10/19

கருத்துகள் இல்லை: