வெள்ளி, 25 அக்டோபர், 2019

பிகில் படம் தாமதம் : வன்முறையில் ரசிகர்கள்... ஊசிப்போன பட்டாசுக்கு ஒன்பது வத்திகுச்சி


மின்னம்பலம் :கிருஷ்ணகிரியில் பிகில் படத்தின் சிறப்புக் காட்சி வெளியிடுவதில் தாமதமானதால் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு சர்ச்சைகளையும், தடைகளையும் தாண்டி நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம் இன்று (அக்டோபர் 25) வெளியானது. முதலில் சிறப்பு காட்சிகளை வெளியிட அனுமதி மறுத்த தமிழக அரசு, இறுதியாக நேற்று மாலை சிறப்பு காட்சிகளை வெளியிட அனுமதி வழங்கியது.
இந்த அனுமதியைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் நள்ளிரவு முதல் படத்தைப் பார்க்க ஆர்வமுடன் காத்திருந்தனர். கிருஷ்ணகிரியில் உள்ள தியேட்டர்களில் படம் பார்க்க தியேட்டர்கள் வெளியில் ரசிகர்கள் குவிந்தனர். முதலில் பட்டாசு வெடித்து, மேளதாளங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், 5 ரோடு ரவுண்டானா அருகே உள்ள தியேட்டர்களில் படம் வெளியிட தாமதமாகியுள்ளது. 3 மணிக்கு வெளியிடப்பட வேண்டிய சிறப்புக் காட்சி ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள், வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில், பொதுமக்களை கண்காணிப்பதற்காக போலீசார் சார்பில் வைக்கப்பட்டிருந்த உயர் கண்காணிப்பு மேடை, ஒலிப்பெருக்கிகள், 5 ரோட்டில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சாலையோர வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த பூ, பழம் ஆகியவற்றை சாலையில் தூக்கி எறிந்து தீயிட்டு எரித்துள்ளனர்.
விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிந்தனர். தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைத்தனர். இந்த சம்பவத்தால் சாந்தி தியேட்டர் மற்றும் ராஜா தியேட்டர் பகுதிகள் கலவர பகுதியாக சிறிது நேரம் மாறியது. இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்டதாக 30க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: