புதன், 5 டிசம்பர், 2018

ஜெ.வைக் காப்பாற்றி இருக்கலாம்.. ஜெ.வின் இதயம் ஒரு மணி நேரம் எக்மோ கருவியையும் மீறி சுயமாக இயங்கியுள்ளது!

jayalalithanakkheeran.in -தாமோதரன் பிரகாஷ்- பி.அசோக்குமார் : 
டிசம்பர் 4-ம் தேதி ஜெ.வுக்கு இதயத்தில் பிரச்சினை வந்தபோது அங்கிருந்த டாக்டர் ரமேஷ் வெங்கட்ராமன், அவருக்கு சிகிச்சையளித்தவுடன் அவரது இதயத்துடிப்பு வெகுவாக குறைய ஆரம்பித்தது. உடனே அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அவரது மார்பு பகுதியை திறந்தார்கள். எந்திரங்கள் மூலம் ஜெ.வின் இதயப் பகுதியை பிசைந்தார்கள். அதன்பிறகு அவருக்கு எக்மோ என்கிற கருவி பொருத்தப்பட்டது. 5-ம் தேதி அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 4-ம் தேதி மாலை 4 மணி முதல் 5-ம் தேதி ஜெ. இறந்ததாக டெல்லியை சேர்ந்த அகில இந்திய விஞ்ஞான பல்கலைக்கழகமான (எய்ம்ஸ்) மருத்துவர்கள் அறிவிக்கும் வரை ஜெ.வுக்கு சிகிச்சை அளித்தவர்கள் டாக்டர் மதன்குமார், டாக்டர் சுந்தர், டாக்டர் மினல்வோரா ஆகியோர். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் இவர்கள்.

இதில் டாக்டர் சுந்தர் ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளிக்கும் போது, ""4-ம் தேதி மாலை ஜெ.வுக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டது. 4-ம் தேதியே அவருக்கு இதயத்தில் சி.பி.ஆர். எனப்படும் இதயத்தை மசாஜ் செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் இதயம் மறுபடியும் இயங்கும் என எதிர்பார்த்தோம். அது இயங்கவில்லை. அதனால் அவரது இதயத்தையும் நுரையீரலையும் செயற்கை முறையில் இயங்கச் செய்யும் எக்மோ என்கிற எந்திரத்தில் பொருத்தினேன். அதன்பிறகும் இதயமோ உடல் உறுப்புகளோ இயங்கவில்லை'' என்றார். ஆனால் அப்பல்லோவின் மெடிக்கல் ரிக்கார்டுகளில் எக்மோ எந்திரத்தில் பொருத்தப்பட்ட பின்பும் அவர் உடலில் இயக்கம் இருந்தது என குறிப்பிடப்பட்டிருந்தது.


அப்பல்லோ மருத்துவமனை கொடுத்திருக்கும் மெடிக்கல் ரெக்கார்டுகளை ஆராய்ந்து ஆணையத்திற்கு விளக்க தனியாக டாக்டர்கள் குழு ஒன்று அமைக்கப்படவில்லை. ஆனால் நீதிபதி ஆறுமுகசாமி ஜெ.வுக்கு எக்மோ கருவியில் சிகிச்சை அளித்த டாக்டர் மதன்குமாரிடம் துருவித் துருவி கேள்வி எழுப்பினார். அப்பொழுது அவர் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை ஆணையத்தில் பதிவு செய்தார்.

apollo-letter

"ஜெ. அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டம்பர் 22-ம் தேதி அவரது இதயம் வெறும் 67 சதவிகிதம் இயங்கும் வலிமையோடு இருந்தது. நவம்பர் மாதத்தில் அவரது இதயம் 75 சதவிகிதம் இயங்கும் தன்மையுடன் இருந்தது. ஜெ.வுக்கு மரணம் என அறிவிக்கப்பட்ட 5-ம் தேதி அதிகாலை 3.20 மணி முதல் 4.20 மணி வரை ஒரு மணி நேரம் 60 சதவிகித வலுவுடன் இதயம் துடித்தது. அப்போது ஜெ. கண் திறந்து பார்த்தார்'' என்றார். ""அந்த நேரத்தில் அவரது இதயம் எக்மோ கருவிகளின் உதவியுடன்தான் இயங்கிக் கொண்டிருந்தது. எக்மோ கருவியை மீறி ஜெ.வின் இதயம் தானாக 60 சதவிகித வலுவுடன் இரத்தத்தை வெளியேற்றியது'' என டாக்டர் மதன்குமார் கூறினார். இது ஆணையத்தில் இருந்த அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியது. இந்த இதயத் துடிப்பை வைத்து அவரை காப்பாற்றியிருக்க முடியாதா? என்கிற கேள்வி நீதிபதி உட்பட அனைவரது மனதிலும் எழுந்தது.


நீதிபதி ஆறுமுகசாமி, ""60 சதவிகித பலத்துடன் ஒரு மணிநேரம் இயங்கிய ஜெ. இதயத்துடிப்பு நிறுத்தம் என்கிற அபாயத்தைத் தாண்டி வந்திருக்கிறார். அவரை காப்பாற்றியிருக்கலாமே?'' என கேட்டார். ""அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. அப்பல்லோ மருத்துவக் குழு ஜெ.வை காப்பாற்ற முடியாது என்றே முடிவெடுத்து விட்டது'' என டாக்டர் மதன்குமார் சாட்சியமளித்திருக்கிறார்.


டாக்டர் மதன்குமார் அளித்த சாட்சியத்தைத் தொடர்ந்து டாக்டர் மினல் வோரா என்பவர் சாட்சியமளித்தார். இவரும் ஜெ.வுக்கு கடைசியாக எக்மோ சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவில் இடம்பெற்றவர். ஜெ.வுக்கு டிராக்கியோஸ்டமி என்கிற நுரையீரலுடன் செயற்கை சுவாச கருவிகளை இணைக்கும் குழாய்களை பொருத்தும் போது அவருக்கு மயக்க மருந்து சிகிச்சையளித்தவர் மினல்வோரா. அவரிடமும் நீதிபதி 4-ம் தேதிக்கு பின் ஜெ.வின் உறுப்புகள், அசைவுகள் பற்றி கேட்டார். அவரும் மதன்குமார் சொன்ன தகவல்களை உறுதிப்படுத்தினார்.


இதுபற்றி நம்மிடம் பேசிய அப்பல்லோவின் வழக்கறிஞர் திருமதி மைடூன் அப்பாஸ், ""ஜெ. 4-ம் தேதிக்குப் பிறகு உயிரோடு இருந்தார் என அப்பல்லோவின் ரெக்கார்டுகளில் உள்ளது. அதைத்தான் டாக்டர் மதன்குமாரும் டாக்டர் மினல் வோராவும் உறுதி செய்தனர்'' என்றார். சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியும் இந்தத் தகவலை உறுதி செய்தார். ""இதற்கும் சசிகலாவிற்கும் தொடர்பு இல்லை என்பதால் அந்த சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவில்லை'' என்றார்.


இதுபற்றி நம்மிடம் பேசிய இருதய மருத்துவர்கள் ""பொதுவாக எக்மோ கருவியில் ஒருவரது இதயம் பொருத்தப்பட்டால் மீண்டு வருவது கடினம். ஜெ.வுக்கு இருதயத்துடிப்பு நின்று போனதால்தான் எக்மோ கருவிக்குள் இணைக்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு ஜெ.வின் இதயம் ஒரு மணி நேரம் எக்மோ கருவியையும் மீறி சுயமாக இயங்கியுள்ளது. இதை ஒரு நல் வாய்ப்பாக அப்பல்லோ மருத்துவர்கள் பயன்படுத்தி ஜெ.வை காப்பாற்றியிருக்கலாம்'' என்கிறார்கள்.


இதற்குப் பதில் சொல்ல வேண்டிய சசியும் அப்பல்லோவும் ஆணைய விவகாரத்தில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கமாக செயல்படுகிறார்கள். அதில் எந்தளவு நாணயம் உள்ளது என்பதை ஆணையத்தின் விசாரணை முடிவுதான் உறுதிப்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை: