சனி, 8 டிசம்பர், 2018

புலந்த்ஷெஹரில் ஆய்வாளரை சுட்டது ( RSS ) ராணுவ வீரர் - கைது செய்ய ஜம்மு விரைந்தது உ.பி போலீஸ் படை

கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங்
 tamil.thehindu.com :ஆர்.ஷபிமுன்னா புலந்த்ஷெரில் கலவரத்தில் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கை சுட்டது ஒரு ராணுவ வீரர் எனத் தெரியவந்துள்ளது. இவரை விசாரிக்க உ.பி போலீஸாரின் சிறப்பு படை இன்று ஜம்மு விரைந்துள்ளது.
பசுவதையை காரணமாக வைத்து உ.பி.யின் புலந்த்ஷெஹரின் மஹாவ் கிராமத்தில் திங்கள்கிழமை கலவரம் நடைபெற்றது. இந்துத்துவா அமைப்புகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கலவரத்தில் சயானா காவல் நிலைய ஆய்வாளர் சுபோத்(47) மற்றும் கல்லூரி மாணவர் சுனித் குமார்(20) ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவாகி உள்ளது. இத்துடன் இருவர் கொல்லப்பட்ட வழக்கிலும் சேர்த்து முதல் குற்றவாளியாக பஜ்ரங் தளத்தின் மாவட்ட அமைப்பாளர் யோகேஷ் ராஜ் பெயர் உள்ளது.

தமக்கு இந்த வழக்குகளில் எந்த சம்மந்தமும் இல்லை என தலைமறைவாக இருக்கும் யோகேஷ், ஒரு செல்பி பதிவாக்கி வெளியிட்டுள்ளார். மற்றொரு தலைமறைவு குற்றவாளியான பாரதிய யுவ மோர்ச்சாவின் தலைவர் ஷிக்கார் அகர்வாலும் தாம் நிரபராதி என செல்பி பதிவை சுற்றுக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில், சுபோத் வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வரும் உ.பி படைக்கு ஒரு முக்கிய வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. அதில், ஆய்வாளர் சுபோத்தை ஒரு நபர் சுடுவது போல் பதிவாகி உள்ளது.
சுடும் இந்த நபர் விடுப்பில் தன் கிராமத்திற்கு வந்த ராணுவ வீரர் ஜீத்து என போலீஸ் நம்புகிறது. கலவரம் மீது 26 பேர் பெயர்களுடன் பதிவான வழக்கில் இந்த ஜீத்துவும் இடம் பெற்றிருந்தார். இவர் கலவரத்திற்கு பின் ஜம்முவின் ராணுவப் பணிக்கு திரும்பி விட்டதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உ.பி போலீஸ் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘கலவரத்தில் பலரது கைப்பேசிகளில் எடுக்கப்பட்ட 203 வீடியோ பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. போலீஸாராலும் கலவரத்தை வீடியோக்களில் செய்த பதிவுகள் 20 உள்ளன. இவை அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்ததில் ராணுவ வீரர் ஜீத்து சிக்கியுள்ளார்.’’ எனத் தெரிவித்தனர்.
இந்த வழக்குகளை உ.பி.யின் சிறப்பு படைகளான எஸ்.ஐ.டி மற்றும் எஸ்.டி.எப் ஆகியவற்றின் குழுக்கள் விசாரித்து வருகின்றனர். ஜீத்துவை புலந்த்ஷெஹர் அழைத்து வந்து நடத்தப்படும் விசாரணையில் முழு விவரம் தெரிய வரும்.

கருத்துகள் இல்லை: