சவிதா - அண்ணல் அம்பேத்கார் |
06.12.1956 அன்று டில்லி அலிப்பூர் சாலையிலுள்ள இல்லத்தில் மறைவுற்று, 07.12.1956 அன்று பம்பாய் தாதரில் உள்ள இராஜகிருகா இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, தாதர் மயான பூமியில் புத்த பிக்குகள் பவுத்த முறைபடி திரிசரணங் கூறிட இலட்சோபலட்சம் மக்கள் கதறியழுதிட பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் உடல் எரியூட்டப்பட்டபோது எழும்பிய தீச்சுவாலையினோடு மக்கள் மனதில் காட்டுத் தீயெனக் கிளம்பிய கேள்வியிது... "டாக்டர் அம்பேத்கர் மரணம் இயற்கையா? செயற்கையா?
தந்தை பெரியார் விடுதலையில் எழுதினார். "இந்த உலகில் மூவாயிரம் ஆண்டுகளில் நான்கு உத்தமச் சீலர்கள் தோன்றினார்கள்; அவர்கள் புத்தர், ஏசு, முகம்மது நபி, டாக்டர் அம்பேத்கர். பாவிகள் அவரைக் கொன்றுவிட்டார்கள்" என்று உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டினார். உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் பேசும் பெரியார் ஈ.வெ. ராமசாமி.
அம்பேத்கர் இறந்த பதினோராம் நாள் அம்பேத்கரின் தொண்டர்கள் தில்லியில் கூட்டிய மாபெரும் கூட்டத்தின் வாயிலாக அம்பேத்கர் எத்தகைய சூழ்நிலையில் இறந்தார் என்பது குறித்து அரசு முழுமையாகப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று கோரினார்கள். அவர்கள் ஒரு தூதுக் குழுவாகச் சென்று பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் பந்த், குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் ஆகியோரைச் சந்தித்து, அம்பேத்கரின் இறப்பு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கோரினர்.
அம்பேத்கரின் மகன் தில்லியில் காவல்துறையிடம் தன் தந்தையின் இறப்பு குறித்து ஒரு புகார் கொடுத்தார். ஆகவே மத்திய அரசு, அம்பேத்கர் இறந்த சூழ்நிலை குறித்து விசாரணை செய்ய ஓர் ஆணை பிறப்பித்தது. 1957 நவம்பர் 27ஆம் நாள் உள்துறை அமைச்சர் பந்த், "தில்லியின் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் நடத்திய விசாரணையின்படி, டாக்டர் அம்பேத்கரின் மரணம் இயற்கையானதாகும்" என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப் பயணம் - பக்கம் 784
காவல்துறையும் விசாரணைக் கமிஷனும் ஆட்சியாளரின், அரசியலாரின் கைகளில் கட்டுண்டிருந்தது; இன்றும் அப்படியே இருக்கின்றது. அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் இந்துத்துவாவாதிகளின் இரும்புப் பிடிகளில் அடிமைகளாக இருந்தனர், இருக்கின்றனர். இதனால் விசாரணைக் கமிஷன் முடிவுகளும், அறிக்கைகளும் முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் முயற்சியாகத்தான் இருந்தன, இருக்கின்றன.
புத்தர் பற்றியும் பெளத்தம் குறித்தும் அம்பேத்கர் எழுதிய நூல் இறுதியில் தனிச் சுற்றுக்கெனப் புத்தரும் அவருடைய தம்மமும் (The Buddha and His Gospel) என்ற தலைப்பின் கீழ் அச்சிடப்பட்டது. இந்நூலைப் பற்றிய கருத்தை அறிவதற்காக இந்நூலின் படிகள் சுமார் அய்ம்பது பேர்களுக்கு அனுப்பப்பட்டன. 1956 பிப்ரவரியில் ‘கடவுள் என்பது இல்லை’, ‘ஆத்மா என்பது இல்லை’ என்ற இரு அத்தியாயங்கள் இந்நூலில் இணைக்கப்பட்டன.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு-பெளத்த மறுமலர்ச்சி-பக்கம் 734
கடவுளையும் ஆத்மாவையும் கற்பனையில் உருவாக்கி, கட்டுக்கதைகளையும், புராணக் கதைகளையும் எழுதி, கோயில்களையும் வர்ணாஸ்ரம சதுர்வர்ணக் கோட்பாடுகளையும் ஏற்படுத்தி இந்திய மக்களின் மூளைகளைச் சாக்கடையாக்கி பூசை புணஸ்காரங்கள், வேள்விகள், யாகங்கள், பலிகள் என இந்திய பொருளாதாரத்தை முடக்கி விரயமாக்கிக் கொண்டிருக்கும் உழைக்காமல் உண்டு கொழுக்கும் புரோகிதப் பார்ப்பனர்களும், இந்துத்துவாவாதிகளும் கடவுள் இல்லை, ஆத்மா இல்லை என்று டாக்டர் அம்பேத்கர் எழுதிய நூலால் இடியோசைக் கேட்ட நாகமாயினர். சதி சூழ்ச்சியென வலைகள் பின்னும் வேதியர்கள், வேதவிற்பன்னர்கள், மனுநீதிக்கு மாற்றான இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதிய சட்டப்பிதா டாக்டர் அம்பேத்கரை அழிப்பதற்குச் சதிதிட்டம் தீட்டினார்கள்.
......பெளத்த சமயம் நல்லொழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பெளத்தம் நன்னெறிகளை அடித்தளமாகக் கொண்டது. புத்தர் தன்னைக் கடவுளாகக் கருதாமல் ஒரு வழிகாட்டியாகவே வாழ்ந்து காட்டினார். ஆனால் கிருஷ்ணனோ கடவுள்களுக்கெல்லாம் கடவுள் நானே என்றார். ஏசு கிறிஸ்து தன்னைக் கடவுளின் மகன் என்று கூறிக்கொண்டார். கடவுளின் கடைசித் தூதன் என்று முகம்மது பைகாம்பர் (நபி) சொல்லிக்கொண்டார். புத்தர் தவிர மற்ற மதங்களின் நிறுவனர்களெல்லோரும் தங்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் தூதுவர்களாகவே கருதினார்கள். புத்தர் மட்டும் தன்னை நன்நெறியைக் காட்டுபவர் என்று கூறிக்கொள்வதுடன் மனநிறைவடைந்தார். நல்லொழுக்க நெறியே புத்தரின் சமயமாகும். பெளத்தத்தில் கடவுள் என்கிற இடத்திற்குப் பதிலாக நல்லொழுக்க நெறியே இடம் பெற்றுள்ளது. தருமம் என்ற சொல்லுக்குப் புத்தர்தான் மிகவும் புரட்சிகரமான பொருளைக் கண்டார். பார்ப்பனர்களுக்குத் தருமம் என்பது வேள்விகள் செய்வதும் கடவுளுக்குப் பலியிடுவதுமே ஆகும். தருமம் என்பதற்குப் பதிலாக நல்லொழுக்க நெறியையே தருமத்தின் சாரமாகப் புத்தர் இடம் பெறச் செய்தார். இந்து சமயத்தின் சமூகக் கோட்பாடு சமத்துவமின்மையைப் போற்றுகிறது. ஆனால் பெளத்தமோ சமத்துவத்தைப் பேணுகிறது. பகவத் கீதை நால் வருணத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என அம்பேத்கர் அக்கூட்டத்தில் விளக்கினார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு பெளத்தத்தை நேரக்கி: பக்கம் 625-626
இந்தக் கருத்துகள் இந்துத்துவாவாதிகளின் இதயத்தில் சம்மட்டி அடியாக - இடியாக விழுந்தது. சாம-பேத-தான-தண்டத்தில் கைதேர்ந்த சாணக்கியக் கூட்டத்தாரின் மனதில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியதைப் போலாயிற்று.
1951 மே மாதம் புது தில்லியில் நடைபெற்ற புத்தர் பிறந்தநாள் விழாவின்போது அம்பேத்கர் இந்து மதத்தின் மீது மீண்டும் ஒரு வெடிகுண்டை வீசினார். இந்துக்களிடம் காணப்படும் வன்முறை, ஒழுக்கக்கேடு மற்றும் அரசாங்க ஊழியர்களிடம் உள்ள இலஞ்ச ஊழல் போன்ற இழிவுகளுக்குக் காரணம் இந்து மதத்தின் சீரழிவுகளே என்று அம்பேத்கர் அவருடைய உரையில் கூறினார். மக்கள் பெளத்த மதத்தைத் தழுவினால்தான் இந்தியாவிற்கு உண்மையான விடுதலை கிடைக்கும் என்றார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - அமைச்சர் பதவியைத் துறந்தார்: பக்கம் 641
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் (குறள்: 664)
வாய்ச்சொல் வீரர்கள் நம் நாட்டில் கோடானு கோடி; வானை வில்லாக வளைப்பேன், மணலைக் கயிறாகத் திரிப்பேன், வறுமையை ஒழிப்பேன் என்றெல்லாம் மேடைக்கு மேடை பேசி தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி வாக்கு சேகரித்து தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் அரசியல்வாதிகள் பல கோடி. அண்ணல் அம்பேத்கர் அத்தகையவர் அல்லர். என்னைவிட என் நாடு பெரிது. என் நாட்டை விட என் சமுதாயமே பெரிது எனக் கூறி வாழ்ந்தவர். தன் சமுதாய மக்களுக்கு வாழ்வளித்தவர்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின் (குறள்: 666)
என்னும் தமிழ்மறைக்கேற்ப உலக மாமேதை டாக்டர் அம்பேத்கர், தம்மின மக்களின் இழிநிலையை இலண்டன் வட்ட மேசை மாநாடுகளில் பேசியும், எழுதியும் உரிமைகளைப் பெற்றுத் தந்தவர். பார்ப்பனர்களைவிட ஆச்சாரம் மிக்கவரான வைசியர்-பனியா-காந்தியார் வர்ணாஸ்ரம நால்வருண படிமுறைகள் கடவுளால் படைக்கப்பட்டது, அதை மாற்ற முயலக்கூடாது. மனுநீதிப்படி அவரவர் தொழிலை அவரவர் செய்வதே மோட்சத்திற்கு போகும் வழி எனக் கூறி தீண்டப்படாத மக்களுக்கு வெள்ளையன் வழங்கிய ஒதுக்கீடு முறையை எதிர்த்து பூனா எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது காந்தியின் உயிரைக் காப்பாற்ற பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இரட்டை வாக்குரிமையை விட்டுக்கொடுத்த மனித தெய்வம் அம்பேத்கர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதி இந்திய மக்களுக்கு வாழ்வுரிமையை வழங்கியவர். மிட்டா மிராசுகளுக்கு மட்டுமே இருந்த உரிமைகளை தோட்டத் தொழிலாளர் கூலிகளுக்கும், துப்புரவாளர்களுக்கும் தந்தவர். இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமமே, பெண்களும் சமஉரிமை பெற்றவர்களே என இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பதிவு செய்தவர். நாயினும் பன்றியினும் கீழாக நடத்தப்பட்ட தீண்டத்தகாதவர் எனப்பட்ட பழங்குடியினரை - மண்ணின் பூர்வீகக் குடிகளை செட்யூல்ட் இனம் எனப் பட்டியலிட்டு கல்வியிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் உயர்த்திட ஒதுக்கீடு உரிமைகளை சட்டத்தில் விதிகளாக்கி உயர வைத்தவர். அவர்களை இழித்துப் பழித்துப் பேசினாலோ நடத்தினாலோ சிறை தண்டனைக்குள்ளாவர் என விதிவகுத்து தலைநிமிர்ந்து வாழவைத்தவர்.
எண்ணிய எண்ணியாங்கு எய்திய அண்ணன் அம்பேத்கர் தான் சொல்லியவண்ணம் பெளத்தம் தழுவினார். அக்டோபர் திங்கள் பதினான்கு, ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறில், தன் வாழ்க்கைத் துணையாய் வாய்த்த சவீதா கபீர் என்னும் பார்ப்பன மனைவியோடும், ஆறேழு லட்சம் மக்களோடும்! 22 உறுதிமொழிகளைப் படித்து அதைப் பின்பற்றுவோரே நவயாண பெளத்தர்கள் என உறுதிமொழிப் பெற்றார். ஒரே நாளில் ஆறேழு லட்சம் மக்கள் அம்பேத்கரைத் தொடர்ந்து பவுத்தம் தழுவியது உலக வரலாற்றில் வேறெங்கும் என்றும் நடத்திராத மாபெரும் மதப் புரட்சியாகும். பவுத்த மறுமலர்ச்சியாகும்.
இதைத் தொடர்ந்து பர்மா, ரங்கூன் சென்று பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்து மத மாற்றத்துக்கு வழிகோலப் போவதாக அறிவித்தார். ஆட்சியாளர்களும், இந்துத்துவா வாதிகளும் அதிர்ச்சிக்குள்ளாயினர். இந்திய நாடே பவுத்த நாடாகி விடுமோ என அய்யுற்றனர். தமிழ்நாட்டில் பண்டிதமணி அயோத்திதாசர் போன்றவர்களால் பெளத்த நெறியும், பெரியார் போன்றவர்களால் பகுத்தறிவுக் கொள்கையும் விரவிப் பரவியிருந்தது. அவரைத் தமிழ்நாட்டுக்கு வரவிடாமலே இறப்புலகுக்கு அனுப்பிவிட்டார்கள்?!
இவ்விஷயத்தில் வேலியே பயிரை மேய்ந்துள்ளது, தோட்டக்காரியே துணையாய் இருந்துள்ளார்.
அவருடைய முதன்மையான தளபதியாக இருந்த பாவ்ராவ் கெய்க்வாடுக்குத் தான் திருமணம் செய்துகொள்ளவிருப்பது பற்றித் தெரிவித்தார். முதல் மனைவி இறந்த பின் மறுமணம் செய்து கொள்வதில்லை என்று அம்பேத்கர் உறுதிபூண்டிருந்தார். ஆனால் இப்போது மறுமணம் செய்துகொள்வதென முடிவு செய்தார். சமைக்கத் தெரிந்த - மருத்துவம் படித்த ஒரு பெண்ணைத் தேடினார். தீண்டப்படாத சாதிகளில் இத்தகைய பெண் கிடைக்க வாய்ப்பேயில்லை. அதனால் சரஸ்வத் பார்ப்பனப் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு-அரசியல் அமைப்பின் தந்தை: பக்கம்: 599
தந்தை ராம்ஜி சக்பாலின் விருப்பப்படி மெட்ரிகுலேசனில் தேர்வு பெற்ற பீம்ராம் அம்பேத்கருக்கும், சுமை தூக்கும் கூலியான பிக்கு வலங்கரின் மகளான இராமி என்கிற இராமாபாய்க்கும், பம்பாய் பாய்குளா மீன் மார்க்கெட் மேடையில் இரவோடிரவாக திருமணம் நடைபெற்றது. அப்போது அம்பேத்கருக்கு வயது பதினேழு. இராமாபாய்க்கு வயது ஒன்பது. படிப்பறிவு இல்லாத இராமாபாய் மனைமாட்சி மிக்கவராய்த் திகழ்ந்தார். அம்பேத்கரின் உயர் படிப்புக்குத் தடையாக இல்லாமல் புகழ்புரிந்த இல்லாளாய் வாழ்ந்தார். மங்கல வாழ்வில் நன்மக்களைப் பெற்று வளர்த்தார். இல்லற வாழ்வில் இருபத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்த அன்னை இராமாபாய் 27.5.1935-ல் இயற்கையெய்தினார். டாக்டர் அம்பேத்கருக்கு எல்லாமுமாய் வாழ்ந்த இராமாபாயின் மறைவு மனதளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மறுமணமே செய்துக்கொள்ளக் கூடாது என மனஉறுதியோடு வாழ்ந்த அவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை தனியொருவராக - குழுவினர் ஒருவரும் ஒத்துழைக்காத நிலையில், தன் செயலர் துணையுடன் அல்லும் பகலும் அயராதுழைத்து எழுதியமையால் பல நோய்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொண்டார். இந்திய அரசின் சட்ட அமைச்சரும், இந்திய அரசமைப்புச் சட்டச் சிற்பியுமான டாக்டர் அம்பேத்கரை சாரதா கபீர் என்னும் மருத்துவர் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். டாக்டர் அம்பேத்கர் உடல்நலம் பெற்றிட இராப்பகலாக உடனிருந்து மருந்து மாத்திரைகளைக் கொடுத்தும், இதமாகப் பேசி ஊசிகளைப் போட்டும் நோய்களை குணப்படுத்தினார். இதனால் டாக்டர் அம்பேத்கர் சாரதா கபீர் மீது பற்றும் பாசமும் மதிப்பும் மரியாதையும் மிகக் கொண்டார்.
டாக்டர் அம்பேத்கர் மருத்துவமனையிலிருந்து இல்லம் ஏகும்முன் மூத்த மருத்துவர்கள் சில ஆலோசனைகளைக் கூறினார்கள். "நாட்டு மக்களின் நலனுக்காக நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும். அதற்கு உங்கள் உடலுக்கேற்ற உணவு வகைகளை மட்டுமே நேரம் தவறாமல் உண்ணவேண்டும். உங்கள் உடல் நோய்களை வலிகளைக் கட்டுப்படுத்த உணவுக்கு முன்னும் பின்னும் வேளை தவறாமல் மருந்து மாத்திரை ஊசிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். ஓய்வும் உறக்கமும் அவசியம் மேற்கொள்ளவேண்டும். இவற்றையெல்லாம் உங்கள் உடனிருந்து கவனித்துக்கொள்ள மருத்துவம் தெரிந்த ஒரு செவிலியரோ - மருத்துவரோ 24 மணி நேரமும் உங்கள் உடனிருக்க வேண்டும்" என்றனர். நண்பர்களும் இதனை வலியுறுத்தினர்.
டாக்டர் அம்பேத்கரின் அறிவாற்றலின் மீது அதீத பற்று கொண்டு பணிவிடைகள் செய்த மருத்துவர் செல்வி சாரதா கபீர் தானே டாக்டர் அம்பேத்கர் உடனிருந்து கவனித்துக்கொள்வதாக உறுதியளித்தார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மனைவியை இழந்து பதின்மூன்று ஆண்டுகள் தனிமையில் நோய்களால் துன்புற்ற டாக்டர் அம்பேத்கர் செல்வி சாரதா கபீரை திருமணம் செய்துகொள்ள மனமிசைந்தார்.
திருமணம் உறுதிசெய்யப்பட்டது. டாக்டர் செல்வி சாரதா கபீர் பம்பாயிலிருந்து தில்லிக்கு விமானத்தில் வந்தார். 1948 ஏப்ரல் 15ஆம் நாள் அம்பேத்கரின் அய்ம்பத்தாறாவது அகவையின் இரண்டாவது நாளில் சருசத் பார்ப்பனப் பெண்ணான டாக்டர் செல்வி சாரதா கபீரைப் புதுதில்லியில் ஹார்டிஞ் அவின்யூ எண். 1-ல் இருந்த அவருடைய இல்லத்தில் மணந்துகொண்டார். தில்லியின் துணை ஆணையர் இத்திருமணத்தைச் சிவில் திருமணச் சட்டத்தின்படி நடத்திவைத்தார். இத்திருமணத்தில் அம்பேத்கரின் நண்பர்கள் சிலர் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்தபின் அவர்களுக்கு அம்பேத்கர் விருந்தளித்தார். "சாதாரணமான ஒரு குடிமகன் ஒரு மன்னனின் மகளை மணந்து கொள்ளுவதைவிடச் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது அம்பேத்கரின் திருமணம்" என்று நியூயார்க் டைம்ஸ் நாளேடு எழுதியது.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - அரசியல் அமைப்பின் தந்தை: பக்கம் 600
நியூயார்க் டைம்சின் கோணல் புத்தியை கூர்ந்து நோக்குங்கள். அமெரிக்காவிலும், லண்டனிலும், ஜெர்மனியிலும் கல்வி கற்று பட்டங்கள் பெற்று அறிவுலகக் கோமானாகி இந்திய அரசியல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை இயற்றும் சிற்பியாகவும் உள்ள டாக்டர் அம்பேத்கரை ஒரு சாதாரண குடிமகனாகவும், எம்.பி.பி.எஸ். பட்டம் மட்டும் பெற்று மருத்துவராகப் பணியாற்றும் சாரதா கபீரை மன்னன் மகளாகவும் ஒப்பிட்டிருப்பது சாதி ஏற்றத்தாழ்வை உள்மனதில் கொண்டு எழுதப்பட்ட குள்ளநரித்தனமாகும். எது எப்படியோ...
முதல் திருமணம் இல்லற வாழ்க்கையில் இணைந்து இன்புறுவதற்காக பெற்றோரும் உற்றோரும் பம்பாய் பாய்குளா மீன் மார்க்கட்டில் இரவோடிரவாக அச்சத்துடன் நடத்தி முடித்தத் திருமணம். இரண்டாவது திருமணம் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதிடும் அரசியல் மாமேதையின் இன்னுயிரைப் பாதுகாக்கும் நோக்கில், டெல்லியில் உள்ள தன் வீட்டில் நண்பர்கள் சூழ, தில்லியின் துணை ஆணையரே நேரில் வந்து திருமண ஒப்பந்தத்தைப் பதிவு செய்திட இந்திய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கருக்கும் மருத்துவர் செல்வி சாரதா கபீருக்கும் நடந்தேறியது.
டாக்டர் சாரதா கபீர் சவீதா கபீராகி டாக்டர் அம்பேத்கருடன் தங்கி வேளாவேளைக்கு மருந்தும் மாத்திரைகளும் உணவுக்கு முன்னும் பின்னும் வழங்கி மிகமிக அக்கறையோடு கவனித்துக் கொண்டார். டாக்டர் அம்பேத்கரும் உடல் உபத்திரவம் குறைந்து சட்டத்தை சளைக்காமல் எழுதி முடித்து 4.11.1948 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து முன்மொழிந்தார். பலகட்ட விவாதங்கள் விளக்கங்களுக்குப் பிறகு 26.11.1949 அன்று அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்து மதத்திலுள்ள சீர்கேடுகளைக் களைந்திட, பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கிடும் இந்துச் சட்டத்திருத்த மசோதாவை அரசின் சார்பில் 5.2.1951-ல் டாக்டர் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இந்தச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று உறுதியாகக் கூறிய நேரு, ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல் போன்றவர்களின் எதிர்ப்பால் 10.8.1951-ல் தன் பிரதமர் பதவியை பாதுகாத்துக்கொள்ள சட்டத்தை ஆதரிக்காமல் கைவிட்டுவிட்டார். பெண்களுக்கு உரிமைகள் வழங்கிடும் இந்தச் சட்டத்தை பெண்களே எதிர்த்தனர். இந்து மதவாதிகளும் எதிர்த்தனர். இந்து மதத்தைச் சீர்திருத்தவே டாக்டர் அம்பேத்கர் விரும்பினார். அது முடியாமல் போகவே டாக்டர் அம்பேத்கர் அமைச்சர் பதவியிலிருந்தும் விலகினார். இந்து மதத்தை விட்டே வெளியேறவும் முடிவு மேற்கொண்டார். பெளத்தம் தழுவினார் பல லட்சம் மக்களோடு நாக்பூரில். அப்போதே அண்ணல் அம்பேத்கரை ஒழித்துவிட சதிதிட்டம் தீட்டினார்கள் இந்துத்துவாவாதிகளும் இந்து மத ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும். அதற்கு அவர் மனைவி சரசத் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த சவீதா கபீரை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்வதும் கொலைதான், மூச்சுத்திணற முகத்தை அழுத்திக் கொள்வதும் கொலைதான், விஷ ஊசிப் போட்டு உடலை மரத்துப்போகச் செய்துக் கொல்வதும் கொலைதான். மருந்துகளை அளவுக்கு அதிகமாகக் கொடுத்துக் கொல்வதும் கொலைதான். கொடுக்க வேண்டிய மருந்துகளைக் கொடுக்காமல் கொல்வதும் கொலைதான். இந்த இறுதி வகைக் கொலையைதான் இந்துத்துவாவாதிகள் தேர்ந்தெடுத்தனர்.
ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் பார்ப்பனன். அவனுக்கு துப்பாக்கியும், சுடும் பயிற்சியும் வழங்கியவர் வ.வே.சு. அய்யர். தேசப்பிதா காந்தியைச் சுட்டுக் கொன்றவன் விநாயக் நாதுராம் கோட்சே எனும் பார்ப்பனன். அவனைத் தயார் செய்து அனுப்பியவர்கள் இந்துத்துவா பார்ப்பனர்கள். இங்கு டாக்டர் அம்பேத்கரை கொல்லாமல் கொன்றவர்கள் சரசத் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த சவீதா கபீரின் உறவினர்கள்?!
1956 டிசம்பர் 3ஆம் நாள் மாலை உடல் சோர்வுற்றிருப்பதாக உணர்ந்தார்; அவருடைய மனைவி சவீதா அம்பேத்கரின் சகோதரர் பாலு கபீர் நிழற்படம் எடுக்க விரும்பியதால், அதற்குத் தேவையான நாற்காலிகளைக் கொண்டு சென்று புல்வெளியில் போடுமாறு அவருடைய பணியாளர்களிடம் கூறினார். ஒரு குழுவினராக நிற்கவைத்துப் பாலு கபீர் எடுத்த அந்நிழற்படத்தில் திருமதி சவீதா அம்பேத்கர், டாக்டர் அம்பேத்கர், சவீதா அம்பேத்கரின் தந்தை கே.பி. கபீர், டாக்டர் மெளலங்கர் முதலானோர் இருந்தனர்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப்பயணம்: பக்கம் 768-769
டாக்டர் அம்பேத்கரை கொல்லும் சதிதிட்டம் அவர் வீட்டிலேயே உருவாகியது. அதன் ஒரு பகுதிதான் இப்படப்பிடிப்பு. டாக்டர் அம்பேத்கர் இறக்கும் முன் - இருக்கும்போதே குடும்பப் படம் எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டனர். குடும்பச் சொத்துகளுக்கு - வாரிசு உரிமை ஆதாரமாக படம் எடுக்கப்பட்டது... டிசம்பர் 3ஆம் நாள் மாலை! அன்று இரவெல்லாம் சவீதா அம்பேத்கர் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார் தந்தை கபீர், தம்பி பாலு, டாக்டர் மெளலங்கரால்.
1956 டிசம்பர் 4ஆம் நாள் அம்பேத்கர் மாநிலங்கள் அவையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்; மாநிலங்கள் அவையின் வராந்தாவில் (Lobby) அமர்ந்து அம்பேத்கர் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். இதுதான், நாடாளுமன்றத்திற்கு, அம்பேத்கரின் கடைசி வருகையாக இருக்கும் என்று எவரும் நினைத்துப் பார்க்கவுமில்லை.
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப் பயணம்: பக்கம் 770
4ஆம் தேதி அன்றுகூட டாக்டர் அம்பேத்கர் தெம்புடனும், திடகாத்திரமாகவும் இருந்துள்ளார் என்பது இதிலிருந்து தெரிகிறது. அன்று மாலை ஆச்சாரியா பி.கே. அட்ரேவுக்கும், எஸ்.எம். ஜோஷிக்கும் அவர் சொல்லச் சொல்ல இரண்டு முக்கியக் கடிதங்களை ராட்டு எழுதியுள்ளார்...!
... திருமதி சவீதா அம்பேத்கரின் தந்தை, சகோதரர் மற்றும் ஜாதவ் முதலானோர் டிசம்பர் 4ஆம் நாள் மாலை தொடர்வண்டியில் பம்பாய்க்குப் புறப்பட்டுச் சென்றனர்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப் பயணம்: பக்கம் 770
குடும்ப டாக்டரான மெளலங்கர் அவர்களுடன் செல்லவில்லை. 3ஆம் நாள் இரவும், 4ஆம் பகலும் அம்பேத்கரைச் சாகடிக்கும் சதி திட்டங்கள் வகுக்கப்பட்டு அதை
Dr. சவீதா அம்பேத்கரும், Dr. மெளலங்கரும் நிறைவேற்ற வேண்டும் எனப் பொறுப்பும் ஒப்படைத்துவிட்டு சவீதாவின் தந்தையும், தம்பியும் பம்பாய்க்குப் புறப்பட்டு சென்றுவிட்டனர். 1956 டிசம்பர் 5ஆம் நாள் திட்டமிட்டபடி சதிசெயல்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சவீதா கபீரும், மெளலங்கரும் டாக்டர்கள் என்பதால் என்னென்ன செய்தால் ஒரு நோயாளியின் உயிரை பாதுகாக்க முடியும், என்னென்ன செய்தால் ஒரு நோயாளியின் உயிரைப் போக்க முடியும் என்பதை நன்கறிந்தவர்கள். நோயாளியை மன உளைச்சல் ஏற்படாமல் அமைதிப்படுத்த வேண்டும். வேளை தவறாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிடக் கொடுக்கவேண்டும். ஆபத்து என்றால் அவசர சிகிச்சைக்கு ஆயத்தப்படுத்தவேண்டும். இவை அனைத்துக்கும் நேர்மாறாக டாக்டர் சவீதா கபீரும், டாக்டர் மெளலங்கரும் 5ஆம் நாள் நடந்துகொண்டுள்ளனர்.
1956 டிசம்பர் 5ஆம் நாள் பகல் ஒன்றரை மணிக்கு, கடையில் சில பொருட்களை வாங்குவதற்காக, குடும்ப மருத்துவரான டாக்டர் மெளலங்கருடன் சவீதா அம்பேத்கர் வெளியே சென்றார். அவர்கள் போனபிறகு நீண்ட நேரங் கழித்து, அம்பேத்கர் அழைப்பு மணியடித்து அவருடைய மனைவி வீட்டிற்கு வந்துவிட்டாரா என்று இரண்டு மூன்று தடவை கேட்டார். ஆனால் அவர் அதுவரை திரும்பவில்லை. சமையல்காரர் வீட்டின் மின்விளக்குகளைப் போட்டார். அம்பேத்கரை குளியல் அறைக்கு அழைத்துச் சென்றார். பிறகு அம்பேத்கர் தேநீர் அருந்தினார். மீண்டும் அம்பேத்கர் அழைப்பு மணியை அடித்தார். அவருடைய முகம் திடீரென்று சிவந்து காணப்பட்டது. ராட்டு மாலை 5.30 மணிக்கு அம்பேத்கரின் வீட்டிற்கு வந்தார்; அச்சமயம் அம்பேத்கர் பெரிதும் மனங்குலைந்திருப்பதைக் கண்டார். தட்டச்சு செய்வதற்கெனச் சிலவற்றை அம்பேத்கர் ராட்டுவிடம் கொடுத்தார். அப்போதுதான் சவீதா அம்பேத்கர் டாக்டர் மெளலங்கருடன் வீட்டிற்குள் நுழைந்தார். சவீதா அம்பேத்கர், அம்பேத்கரின் அறைக்குள் மெல்ல எட்டிப் பார்த்தார். சினமுடன் இருந்த அம்பேத்கர் அவரைக் கூரிய கடுஞ்சொற்களால் கடிந்தார். அம்பேத்கரைச் சமாதானப்படுத்துமாறு ராட்டுவிடம் சவீதா அம்பேத்கர் கேட்டுக்கொண்டார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப் பயணம்: பக்கம் 771
பகல் ஒன்றரை மணிக்கு டாக்டர் மெளலங்கருடன் சென்று விட்டு மாலை 6.00 மணியளவில் இருவரும் இல்லம் திரும்பி இருக்கிறார்கள். மேட்னி ஷோ சினிமா பார்த்துவிட்டு வந்திருப்பார்களோ?! டாக்டர் சவீதா, டாக்டர் அம்பேத்கருக்கு மனைவியானதே மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதற்காகவே. டிசம்பர் 5ஆம் தேதி டாக்டர் அம்பேத்கருக்கு மருந்து மாத்திரைகள் எதுவும் கொடுக்காமல் இன்னொருவருடன் வெளியில் சென்று சுற்றிவிட்டு வீட்டுக்கு வருகிறார். வந்த பின்னரேனும் மருத்துவர் என்ற முறையில் அவர் கடமைகளை - மருந்து மாத்திரைகளைக் கொடுத்திருக்க வேண்டும். கணவர் கடிந்துகொண்டாலும் மனைவி என்ற முறையில் அவரைச் சமாதானப்படுத்தியிருக்க வேண்டும். டாக்டர் அம்பேத்கர் கல்நெஞ்சர் அல்லர். தான் வளர்த்த நாய் இறந்துவிட்டது என்றபோது குழந்தைபோல் தேம்பி தேம்பி அழுதவர். தன் வீட்டுத் தோட்டக்காரன் நோய்வாய்ப்பட்டபோது அவனைத் தேடிச் சென்று ஆறுதல் கூறி உதவிகள் செய்தவர். அம்பேத்கரை உணர்ச்சிவயப்படுத்தி உள்ள உளைச்சலை உண்டாக்கி ஒழித்துவிட வேண்டும் என்னும் உள்ள உறுதியுடன் சவீதா இருந்தமையாலேயே மெளலங்கருடன் கூட்டுச் சேர்ந்து மனிதாபிமானமற்று நடந்து கொண்டார்.
அன்றிரவு எட்டு மணியளவில் அம்பேத்கரின் சினம் ஓரளவு தணிந்தது. முன்னரே சந்திக்க வருவதற்கான ஏற்பாட்டைச் செய்துகொண்டிருந்தவாறு சமண சமயத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் அப்போது அம்பேத்கரை காண வந்தனர்............. அம்பேத்கர் சமணத் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது - அவர் வீட்டில் தங்கிய கடைசி விருந்தாளியான டாக்டர் மெளலங்கர் அம்பேத்கரின் இல்லத்திலிருந்து புறப்பட்டு அன்றிரவு விமானம் மூலம் பம்பாய்க்குச் சென்றார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப் பயணம்: பக்கம் 770
எங்கே மனைவி என்ற மன உந்துதலில் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து டாக்டர் அம்பேத்கரை சவீதா காப்பாற்றி விடுவாரோ என்ற எண்ணத்தினாலேயே இரண்டு மூன்று நாட்கள் சவீதாவுடனிருந்து எல்லாம் திட்டப்படி நடந்தேறிவருவதை உறுதிப்படுத்திக் கொண்டே டாக்டர் மெளலங்கர் பம்பாய்க்குப் பயணமானார். டாக்டர் அம்பேத்கரை மர்மமாகக் கொல்லவேண்டும் என்பதற்காகவே டாக்டர் அம்பேத்கரை சவீதா நெருங்க விடாமல் தடுத்துவிட்டு, அவர் இறப்பது உறுதி என உணர்ந்த பின்னரே - அவர் மரணிக்கும்போது தான் அங்கு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க அன்றிரவே வெளியேறி விமானம் ஏறிவிட்டார்.
டாக்டர் அம்பேத்கரை அன்றிரவு முழுக்க டாக்டர் சவீதா சந்திக்கவேயில்லை. மருந்து மாத்திரை ஊசி எதுவும் போடவில்லை. மனைவி என்ற முறையிலோ, மருத்துவர் என்ற முறையிலோ அம்பேத்கரை அவர் அணுகவேயில்லை.
1956 டிசம்பர் 6ஆம் நாள் காலை சவீதா அம்பேத்கர் வழக்கம் போல் எழுந்தார். 6.30 மணியளவில் அம்பேத்கரின் படுக்கை மீது தன் பார்வையைச் செலுத்தினார். அம்பேத்கரின் கால் திண்டுமீது இருப்பதைக் கண்டார். வழக்கம்போல் தோட்டத்தைச் சுற்றிவிட்டு வந்தபிறகு எப்போதும் போல் அம்பேத்கரை எழுப்புவதற்காகச் சென்றார். அம்பேத்கரை எழுப்பிட முயன்றார். ஆனால் அவருடைய கணவர் இவ்வுலக வாழ்வை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதைக் கண்டு பேரதிர்ச்சியடைந்தார். ராட்டுவை அழைத்து வருமாறு தன் காரை அனுப்பினார்; ராட்டுவும் வந்து சேர்ந்தார்; ராட்டுவைக் கண்டதும் சவீதா அம்பேத்கர் "பாபாசாகிப் இவ்வுலகத்தை விட்டுப் போய்விட்டாரே! என்று கதறிக்கொண்டு நிலைகுலைந்து சோபாவில் வீழ்ந்தார்.
- டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - இறுதிப் பயணம்: பக்கம் 774-775
நாடகத்தை நடத்தி முடித்த சவிதா சோபாவில் சாய்ந்து மயங்கினாரா? கண்விழித்தால் உண்மைகள் வெளிபட்டுவிடுமோ என்ற அச்சத்தால்!? நடித்தாரா?
அம்பேத்கர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதைப் போல் அருமையான ஒரு நாடகத்தை நடத்திவிட்டார்கள் அம்பேத்கரின் மனைவி டாக்டர் சவீதாவும், அவருடைய நண்பர் டாக்டர் மெளலங்கரும், சவீதாவின் தந்தை மற்றும் தம்பி பாலுவும். ஆக மநுநீதிக்கு நேர்மாறான மனிதநேயம்மிக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கர் இந்து மசோதா சட்டத்தை நிறைவேற்ற முடியாமையினால் அமைச்சரவையிலிருந்து விலகியதோடு, இந்து மதத்திலிருந்தால் சதுர்வர்ணக் கோட்பாடுகளை வர்ணாஸ்ரம தர்மங்களை ஏற்றாக வேண்டும். சதுர்வர்ணத்துக்கு உட்படாத அவர்ணாஸ் (Outcaste) ஐந்தாம் வருணத்தாராகிய பஞ்சமர்கள் - பஞ்சசீலம் கற்ற பெளத்தர்கள் மீண்டும் தாய் மதமாகிய பெளத்தத்தில் இணைய வேண்டும் என ஆறேழு லட்சம் மக்களோடு ஒரே நாளில் பவுத்தம் தழுவிய மாபெரும் மதப்புரட்சியாளரை - அரசியல் மாமேதையை - அறிவுலகக் கோமானை இந்துத்துவாவாதிகள் இல்லாமல் செய்துவிட்டனர்!
இது கற்பனை கட்டுக்கதையல்ல, மூன்று, நான்கு, ஐந்தாம் நாட்களில் நடைபெற்றச் சம்பவங்களை தில்லியின் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் இந்தக் கோணத்தில் அல்லவா புலன் விசாரணை செய்திருக்க வேண்டும்!
- தமிழ்மறையான்
புத்தர் அறிவுலகம்
நிறுவனர்: கடவுள் அம்பேத்கர் அறக்கோயில்
1 கருத்து:
பார்ப்பனர்கள் அம்பேத்கரின் சொந்த வாழ்க்கையிலும் சதி செய்திருக்கிறார்கள்.
கருத்துரையிடுக