சனி, 8 டிசம்பர், 2018

36 பேரை அந்த ஆலை நிர்வாகம் கொன்றது... அவர் லண்டனில் மோடியை சந்தித்தார்...” - முகிலன்


nakkheeran.in - felix": சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன் தொடர்ந்து சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருபவர். கூடங்குளம் அணு உலை, மேகதாது பிரச்சனை, நெடுவாசல், ஸ்டெர்லைட் ஆலை என பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி 377 நாட்கள் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது நியாயமற்றது, அந்நிறுவனத்திற்கு உரிய நேரம் வழங்கியிருக்க வேண்டுமென தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. அது தொடர்பாக முகிலனிடம் பேசினோம் அதற்கு அவர் அளித்த பதில்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பதிமூன்று உயிர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் அதனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் 'தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நியாயமற்ற ஒன்று, அவர்களுக்கு உரிய நேரம் வழங்கியிருக்க வேண்டும்’ என்று சொல்கிறார்கள் இதில் உங்களின் கருத்து என்ன ?
mm
இது எதிர்பாராத ஒன்று அல்ல, நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஏனென்றால் சூழலியல் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு இந்தியாவில் கிடையாது. உதாரணத்திற்கு 2005-ல் கேரளாவில் பிளாச்சிமடா எனும் ஓர் ஆலை இருந்தது. கேரள மக்கள் போராடியதால் கேரளா உயர் நீதிமன்றம் அந்த ஆலைக்கு தடை விதித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்திற்கு சென்றபோது இது இந்திய அரசின் கொள்கை முடிவு. அதனால் அந்த ஆலை இயங்குவதை தடுக்கக்கூடாது என்று தீர்ப்பு வந்தது. ஆனால், இன்றளவிலும் மக்கள் போராட்டத்தின் காரணத்தினால் அந்த ஆலையை இயக்கமுடியாமல்தான் இருக்கின்றது. இதுபோல் நீதிமன்றங்களை பொறுத்தவரை அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளின் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலையும் 2010-ம் ஆண்டில் நீதிபதி எமிலி தர்மராஜ் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'ஸ்டெர்லைட் ஆலை இயங்கக் கூடாது’ என தடைவிதித்தார். ஆனால், உச்சநீதிமன்றம் அந்த ஆலை இயங்கலாம் என்று சொன்னது. மீண்டும் 2013-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சு புகையால் அருகில் இருந்த நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டார்கள், செடி கொடிகளும் கருகியது. அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்தார் உடனடியாக ஒரு ஆய்வுக் குழுவை அமைத்து அந்த ஆலையை மூட உத்தரவிட்டார். உயர்நீதிமன்றம் அந்த ஆலையை மூட உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் சென்றபோது 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்துவிட்டு ஆலையை இயக்கலாமென அனுமதி கொடுத்தது. அதனால்தான் தமிழக அரசு, அரசாணை போட்டபோது இந்த அரசாணை என்பது எதற்கும் உதவாது, குறிப்பாக மலம் துடைக்கக்கூட உதவாத காகிதம் என்று நான் விமர்சித்தேன். காரணம், மதுரை உயர்நீதிமன்ற அமர்வுகூட 'இதற்கு சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும், கொள்கை முடிவெடுத்து இருக்கக்கூடாது’ என்றார்கள். ஜல்லிக்கட்டு, ஏழு பேர் விடுதலை என அனைத்திலும் அமைச்சரவை தீர்மானங்கள் போடப்பட்டிருக்கிறது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சொல்லியது  'இந்த அரசாணை என்பது சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும் உடைக்க முடியாது’ என்றார்கள். ஆனால், இன்று அதன் மாறுபட்ட தன்மையை அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பிரதமரையே இயக்கக்கூடியவர்கள்.

 தருண் அகர்வால் குழு ஏதோ கடமைக்காக இரண்டு மணி நேரம் இங்கே வந்து பார்த்துவிட்டு, சென்னையில் வைத்து மனு வாங்கினார்கள். தருண் அகர்வால் மீது ஏற்கனவே ஊழல் புகார்கள் இருக்கின்றது. மேலும் உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற அன்றே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அமர வைத்ததில் நாடு முழுக்க விமர்சனங்கள் இருக்கின்றது. இன்று தூத்துக்குடியில் காற்று மாசின் அளவு அதிகமாகியிருக்கிறது. அந்த ஆலையில் வேலைசெய்த பாதுகாப்பு அதிகாரியே கேன்சரினால் மரணித்து இருக்கிறார். 


அந்த ஆலைக்குள் வேலைசெய்த சல்ஃபரிக் இன்ஜினியர் முக்கேஷ் கேன்சரால் பாதிக்கப்பட்டு மரணிக்கிறார். நமக்கு வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவரும் அத்தனை திட்டங்களும் அழிவாகத்தான் இருக்கிறது. 1990-களுக்குப் பிறகு புதிய பொருளாதாரக் கொள்கை வந்ததற்குப்பிறகுதான் நொய்யல் எனும் ஆறு செத்துப் போய்விட்டது. தோல் தொழிற்சாலையினால் பாலாறு செத்துவிட்டது. எங்கள் பகுதியில் காலிங்கராயன் எனும் கால்வாய் செத்துவிட்டது. அதிலிருந்த பதினோரு வகையான மீன்களில் 10 வகையான மீன்கள் இல்லாமல் போய்விட்டது. காலம் காலமாக மஞ்சள் விவசாயம் நடைபெற்று கொண்டிருந்தது. ஆனால், இன்று ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் மலட்டுத்தன்மை உச்சத்தில் இருக்கின்றது. கர்ப்பப்பை புற்றுநோய், தோல் நோய், குழந்தைகளுக்கு மூச்சு திணறல் போன்ற பாதிப்புக்கள் அதிகாமாகியிருக்கிறது. மக்களின் வாழ்நாள் அளவு குறைந்துள்ளது. தூத்துக்குடி, உலகிலேயே மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 


ஸ்டெர்லைட் பிரச்சனையின்போது இணையதளத்தில் வைரலாக ’ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு தண்ணீரைவிட, அங்கிருக்கும் மற்ற அலைகளினால் வெளியேற்றப்படும் தண்ணீரில் இருக்கும் நச்சு தன்மை அதிகமாக இருக்கின்றது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை மட்டும் மூட சொல்வது ஏன்’ என்ற கேள்விகளை எழுப்பினார்கள்?

அங்கிருக்கும் அனல்மின் நிலையத்தையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். அதற்குப்பதிலாக மின்சாரம் எடுக்க இங்க மாற்றுவழிகள் நிறைய இருக்கின்றன. இங்க தாராளமாக சூரியமின்சக்தி முறையில் மின்சாரம் எடுக்க வழி இருக்கின்றது. வெறும் மூன்று மணி நேரம் மின்சாரம் பெறக்கூடிய ஜெர்மனியில் மின்சாரம் சூரியமின்சக்தி  முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 






மோடிக்கு மாற்று எரிசக்தி பற்றி பேசுகிறார் என்று பசுமை நாயகன் என்ற விருது கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இங்கே தமிழ்நாட்டில் எங்காவது மாற்று எரிசக்தி இருக்கின்றதா. இவர்கள் சூரியமின் சக்திக்காக புதிதாகக்கூட இடம் தேடவேண்டாம், அரசு அலுவலகங்கள், இவர்கள் போடும் தேசிய நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் வைத்தாலே போதும் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் தேவைக்கும் தாண்டி உலகத்தின் தேவைக்கு மின்சாரத்தை கொடுக்கமுடியும். ஆனால், எதற்காக அனல்மின் ஆலை அமைக்கிறார்கள். இதற்குள் அரசுக்கும், இங்கிருக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் இடையில் ஒரு பினைப்பு இருக்கின்றது. நாங்கள் ஸ்டெர்லைட்டை மட்டும் எதிர்க்கவில்லை மற்றவர்களையும் சேர்த்துதான் எதிர்க்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையால் உச்சபட்சமான பாதிப்பு அதனால் அதை முதலில் எதிர்க்கிறோம்.


இதே ஆலை ஏற்கனவே 2012-ல் ஆப்பிரிக்காவில் மாரிக்கானா எனும் இடத்தில் நடத்தினார்கள், அதை எதிர்த்து அங்கிருக்கும் அப்பாவி பழங்குடியின மக்கள் போராடினார்கள். அவர்கள் 36 பேரை அந்த ஆலை நிர்வாகம் கொன்றது. அங்கிருந்த நிர்வாக அதிகாரியைத்தான் இப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு மாற்றியிருக்கிறார்கள் ஏப்ரலில் அங்கிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்ட அவர் மோடியை லண்டனில் சந்தித்துவிட்டு இங்கே வருகிறார்.

நீங்கள் தொடர்ந்து அரசை விமர்சனம் செய்கிறீர்கள், முதலாளிகளை எதிர்த்து பேசுகிறீர்கள். மக்களை தூண்டுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டும் உங்கள் மீது வைக்கிறார்கள். மக்களை தூண்டியதால்தான் 13 பேர்களை நாம் இழந்திருக்கிறோம். உங்களை சமூகவிரோதி என்றும் சொல்லுகிறார்கள்?
மக்களை தூண்டியதால் 13 உயிர்களை இழக்கவில்லை அரசினுடைய பயங்கரவாதத்தினால் இழந்திருக்கின்றோம், முதலாளிகளின் கொடூரத்தினால் இழந்திருக்கின்றோம். மக்கள் யாராவது ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு வந்தார்களா, அவர்களெல்லாம் போராட்டத்திற்கு தண்ணீரையும், குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வந்தவர்கள். இன்றளவிலும் அவர்களை சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பதை இந்த அரசாங்கத்தினால் வெளியே சொல்ல முடியாவில்லை. இவர்களை எதிர்த்து மக்கள் போராட கூடாது என்பதற்காக முன்பெல்லாம் வழக்கை தொடுத்து அச்சுருத்தினார்கள். இப்போது துப்பாக்கி வைத்து அச்சுருத்துகிறார்கள். ஏற்கனவே 1995-ல் கருத்துக்கேட்பு கூட்டம் என கொண்டு வந்தார்கள் ஆனால் மோடி அரசு வந்த பின்னால் அதையும் காலி செய்துவிட்டார். அணு உலைக்கு எதிராக கருத்துக்கேட்பு கூட்டம் கூடாதென 2014-ல் ஒரு உத்தரவை போட்டுவிட்டார்கள். இந்த உரிமைகளைப் பற்றி யாரும் பேசவில்லை எங்களைப் போன்றவர்கள் பேசுகின்றோம். அதனால் நாங்களெல்லாம் சமூகவிரோதிகள், தேசவிரோதிகள், மக்களை தூண்டி விடுவோர்கள். 

1984-ல் தூத்துக்குடியில் வ.உ.சி வெள்ளையனை எதிர்த்து போராட்டம் நடத்தினார், வெள்ளைகாரனுக்கு சவரம் செய்ய மாட்டோம் என போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அன்று வெள்ளைக்காரன் வீட்டில் எடுப்பு மலம் தொட்டிதான் அதை யாரும் எடுக்க மாட்டோம் என்றார்கள், மளிகைக் கடையில் பொருள் தரமாட்டோம் என்றார்கள். கொழும்பிலிருந்து அவர்களுக்கு பொருள் வந்தது. இப்படியான வரலாறு படைத்த ஊர் தூத்துக்குடி, நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த வரலாறு திரும்புகின்றது. அன்று வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிர்த்தவர்கள் இன்று பன்னாட்டு முதலாளிகளை எதிர்த்து பண்ணுகிறார்கள்.

அரசு இதையெல்லாம் வளர்ச்சித் திட்டம் என்கிறார்கள்?

வளர்ச்சித் திட்டங்கள் என்று சொல்லும் இந்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்த இந்திய அரசு அவர்கள் ஊரில் இதை வைத்துக்கொள்ள வேண்டியதுதானே. 

இன்று ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யக்கூடியப் பொருளில் 40 சதவீதம்தான் இந்தியாவின் தேவை, மீதம் 60 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில் தமிழ்நாட்டின் தேவை என்பது நான்கு, ஐந்து பங்குதான் இருக்கும். இதற்காக நாங்களெல்லாம் அழிய வேண்டுமா. காசு கொடுத்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் இதை இறக்குமதி செய்துகொள்ளலாம். இவர்கள் எங்களுக்கு நல்லதைக் கொடுத்தால் பரவாயில்லை. உலகத்தால் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலைகளை எங்கள் தலையில் கட்டுகிறார்கள். நாற்று நடுவதற்கு தண்ணீரில் கையைவிட்டால் கை முழுக்க சிரங்குவருகிறது. நாற்று நடுவதற்கு முன்பாக கையில் தேங்காய் எண்ணெய் வைத்துக் கொண்டு வேலை செய்யும் பெண்களை நாங்கள் பார்க்கின்றோம். இதுதான் வளர்ச்சியா.

கருத்துகள் இல்லை: