வெள்ளி, 7 டிசம்பர், 2018

தஞ்சை ஸ்ரீ ரவிசங்கரின் இந்துத்வா பிரசார நிகழ்வுக்கு நீதிமன்றம தடை .. தஞ்சை பெரிய கோவிலில்


tamilthehindu :தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பு நடத்விருந்த ஆன்மிக
நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும் அதற்காக கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மேடை, கூடாரங்களை அகற்ற காவல்துறை உதவ வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பந்தல், மேடை களை அகற்றுவதை ஆட்சியர், எஸ்பி உறுதி செய்ய வேண்டும். திங்கள் கிழமை ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் தரப்பில் வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு ," தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில், இரண்டு நாட்கள் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக கோயில் அருகே பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில் பழமையும், பாரம்பரியமும் மிக்க கோவில். யுனெஸ்கோவால் சோழர்களின் சிறப்பான கோவில் என்ற சிறப்பை பெற்றது. ஆனால்  இது போன்ற தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது கோவிலின் சிறப்பை பாதுகாக்க தவறும் நடவடிக்கையாக உள்ளது.
மேலும், நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 2017ல் யமுனை நதிக்கரையில் மாசு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர்.
ஆகவே, தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும்" என முறையிட்டார்.
வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கான பந்தல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்தும் இந்நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: