வெள்ளி, 7 டிசம்பர், 2018

புழுங்கல் அரிசியை புறந்தள்ளும் இல்லத்தரசிகள் .. ஸ்டீம்' அரிசியால் நலிந்து வரும் தமிழக அரிசி ஆலைகள்

tamil.thehindu.com - ந.முருகவேல் : தமிழகத்தில் அரிசி உற்பத்தியில் முன்னணியில் திகழும் மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று. இங்குள்ள சின்னசேலம், கள்ளக்குறிச்சி, விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளில் உள்ள நவீன அரிசி ஆலைகள் மூலம் அரிசி உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. சின்னசேலத்தில் மட்டும் 60 நவீன அரிசி ஆலைகள் இயங்குகின்றன.
சம்பா பருவத்தில் மட்டும் ஒரு லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு, சென்னை, புதுச்சேரி, கடலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கள்ளக்குறிச்சியில் 20 ஆலைகளும், விக்கிரவாண்டியில் 13 ஆலைகளும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதி அரிசி உற்பத்தியில் பெரும் தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும், அந்தத் தொழிலையே நம்பியிருப்போர் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சின்னசேலம் அரிசி உற்பத்தி ஆலை சங்க நிர்வாக தேவசேனாதிபதி கூறும்போது, "ஒவ்வொரு ஆண்டும் சம்பா, குறுவை ஆகிய பருவங்களில் நெல் வரத்தைக் கொண்டு தரமான அரிசிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தோம். அண்மைக் காலமாக நீராவியினால் அவிக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் அரிசிகள் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அரிசியினால் உடல் உபாதை ஏற்படும் என்பது மக்களுக்கு புரியவில்லை.

நெல்லை முறையாக ஊற வைத்து, இரு முறை வேக வைத்து, காய வைத்து பின்னர்தான் அரவைக்கு உட்படுத்தப்படும். அந்த புழுங்கல் அரிசிதான் உடலுக்கு எவ்வித கெடுதலையும் ஏற்படுத்தாது. ஆனால் 'ஸ்டீம்' எனும் நீராவியினால் அவிக்கப்படும் நெல், விரைவான முறையில் வேக வைக்கப்படுவதால், அதன் நேரம் குறைவதோடு, குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தி செய்யப்படும். இதனால் வயிற்றுவலி ஏற்படுகிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. நீராவி அரவை ஆலைகளில் பணி ஆட்கள் குறைவு. எல்லாமே இயந்திரம்தான். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஆலைகளிலும் தலா 100 பேர் பணியாற்றுகின்றனர். சின்னசேலம் பகுதியில் மட்டும் இத்தொழிலில் 6 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்'' என்கிறார்.
விருத்தாசலத்தில் அரிசி வியாபாரி முகமது ரபீக் கூறும்போது, "என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையோர் அரிசி மெல்லியதாக, வெள்ளையாக இருக்க வேண்டும் என கர்நாடக பொன்னி கொடுங்கள் என்று 'ஸ்டீம்' அரிசியைத்தான் வாங்குகின்றனர். 'ஸ்டீம்' அரிசி விலையும் குறைவாக இருப்பதோடு, பார்வைக்கும் வெள்ளையாக இருப்பதால் அதைத்தான் விரும்புகின்றனர்.
'ஸ்டீம்' அரிசி 25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1,140. ஆனால் இருமுறை வேக வைத்த நாட்டுப் பொன்னி அரிசி ஒரு சிப்பம் ரூ.1,250. மக்கள் தங்களுடைய உடல்நலனைக் கருத்தில் கொள்வதில்லை. பெரும்பாலானோர் கண்களால்தான் உணவுகளை உட்கொள்கின்றனர்'' என்றார்.
விருத்தாசலத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி பானுமதி என்பவர், "வேக வைச்ச அரிசி சாதம் வெள்ளையாக இருப்பதில்லை. வீட்டில் இருப்பவர்கள் வெண்மையாக மெல்லியதான அரிசி சாதத்தைத் தான் விரும்பி உண்கின்றனர். அதனால் 'ஸ்டீம்' அரிசி வாங்குகிறோம்'' என்றார்.
'ஸ்டீம்' அரிசியின் பாதிப்புகள் குறித்து விழுப்புரம் மாவட்ட அரசு சித்த மருத்துவர் ராஜேந்திரனிடம் கேட்டோம். 'ஸ்டீம்' அரிசி உடல்நலத்துக்கு உகந்தது அல்ல. நெல்லை நீராவியினால் வேக வைக்கும்போது, நெல்லில் தெளிக்கப்படும் பூச்சி மருந்துகள் வெளியேறாமல், அவை அரிசியின் உள்ளேயே தங்கி விடுகின்றன. இதனால் வயிற்றுவலி போன்ற உடல் உபாதைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இப்படியாக உருவாக்கப்படும் ஆந்திர, கர்நாடக பொன்னி ரகங்கள் சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு வழி வகுக்கும்.
நமது பாரம்பரிய முறையில் நெல்லை ஊற வைத்து, வேக வைத்து அரைக்கும்போது, பூச்சிக்கொல்லி மருந்துகள் வெளியேறுவதுடன், நெல்லில் உள்ள உமியின் மூலம் கிடைக்கும் சத்துகள் அரிசியில் ஓரளவு தங்கும். இதனால் அரிசி பார்ப்பதற்கு குண்டுமணி போன்று தெரியும். இவற்றில் சத்துகள் அதிகம். நோய் எதிர்ப்புத் தன்மையும் உண்டு'' என்றார்.

கருத்துகள் இல்லை: