திங்கள், 3 டிசம்பர், 2018

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை! உச்ச நீதிமன்றம்.


மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை!

மின்னம்பலம் :   சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி தர முடியாது என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
சென்னை மெரினா கடற்கரையில் 2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைநகரங்களில் இத்தகைய போராட்டம் நடத்தப்பட்ட போதும், மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர். 24 மணி நேரமும் மக்கள் போராட்ட முழக்கங்களை எழுப்பியபடியே இருந்தனர். இந்த நிகழ்வு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்டது. மெரினா போராட்டம் வன்முறையில் முடிந்ததையடுத்து, அங்கு போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என்று தடை விதித்தது தமிழக அரசு.

இந்த நிலையில், மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. தமிழக அரசு இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார்.
இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று இந்த வழக்கில் நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது என்று கூறி, தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இதற்கான அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தது தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கம்.
இந்த மனு மீதான விசாரணை, இன்று (டிசம்பர் 3) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்த தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்தது உச்ச நீதிமன்றம். அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலமாக, சென்னை மெரினா கடற்கரையில் யாரும் போராட்டம் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்த மெரினா கடற்கரைக்குப் பதிலாக வள்ளுவர் கோட்டம், மாநில விருந்தினர் மாளிகை போன்றவற்றை ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது தமிழக அரசு.

கருத்துகள் இல்லை: