புதன், 5 டிசம்பர், 2018

வேளச்சேரி ஜோதிடர்தான் ஜெயலலிதாவின் மருத்துவ ஆலோசகராம் .. சிகிச்சை தவறுகளுக்கு இதுதான் முதல் காரணம்!

ஜெயலலிதாவுக்கு எந்த நேரத்தில் மருந்து கொடுக்கணும்... எந்த நேரத்தில் ஸ்கேன் எடுக்கணும்..’ என்பதில் தொடங்கி ஜெயலலிதா மருத்துவமனை நாட்களில் இந்த வேளச்சேரி ஜோதிடர் சொல்படிதான் நடந்து கொண்டாராம் சசிகலா. அந்த ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தில்தான் ஒவ்வொரு விஷயங்களையும் செய்ய வைத்திருக்கிறார் சசிகலா. அதுவே சில நேரங்களில் சிகிச்சை தாமதமாகியிருக்கிறது.
மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: ஜெ. மர்மம், முடித்து வைக்கும் வேளச்சேரி ஜோதிடர்!“நாளை டிசம்பர் 5-ம் தேதி. ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாள். ஜெயலலிதா மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுசாமி விசாரணை ஆணையத்தில் தொடர்ந்து சாட்சியங்கள் ஆஜராகி தகவல்களை சொல்லி வருகிறார்கள். இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானது முரளிதர் ராஜகோபால், பார்வதி பத்மநாபன் ஆகிய இருவரும்தான்.
இவர்கள் தோல் நோய் மருத்துவர்கள். இவர்களது சாட்சியம் என்பது கவனிக்கத்தக்கது. காரணம், முரளிதர் ராஜகோபால் கடந்த 98-ம் ஆண்டில் இருந்தே ஜெயலலிதாவுக்குத் தோல் தொடர்பான சிகிச்சைகளை தொடர்ந்து அளித்து வந்தவர். அவர் ஆணையத்தில் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என விசாரித்தோம்.
‘ஜெயலலிதா மேடத்துக்கு நான் தோல் நோய்கள் தொடர்பாக சிகிச்சை கொடுக்கத்தான் முதன் முதலாக 98-ம் வருடம் போயஸ் கார்டனுக்குப் போனேன். சாதாரணமாகப் பேப்பரை தொட்டாலே அவருக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்படும் அதுவும் அந்த 98 காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு அலர்ஜி அதிகமாகவே இருந்தது. பேப்பரில் மட்டுமல்ல... அவர் பயன்படுத்தும் பேனா இங்க் சில நேரங்களில் கையில் பட்டுவிடும். அதுவும் ஒருவிதமான அலர்ஜியை உண்டாக்கிவிடும். இதற்கெல்லாம்தான் நான் சிகிச்சை அளித்தேன். இப்படி ஸ்கின் அலர்ஜி வரும் போதெல்லாம் அவர் மன அழுத்தத்துக்கும் ஆளாகிவிடுவார். அந்த நேரத்தில் என்ன செய்கிறோம் என்பதை கூட உணர முடியாமல் கோபப்படுவார். அவரது மன அழுத்தத்துக்கும் நான் மருந்து கொடுத்திருக்கிறேன்.

கடைசியாக கடந்த 2016 மே மாதத்தில் போயஸ் கார்டனுக்கு ஜெயலிதா என்னை வரச் சொன்னதாக சொல்லி அனுப்பினார்கள் நானும் போயிருந்தேன். ஜெயலலிதாவுக்கு வலது கை ஆள்காட்டி விரலில் இங்க் பட்டதால் அலர்ஜி ஏற்பட்டிருந்தது. அதற்கு நான் அவருக்கு சிகிச்சை கொடுத்தேன். அப்போது சசிகலா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உடன் இருந்தார்கள். ஆனால், நான் சிகிச்சை அளிக்கும் போது அவர்கள் யாரும் குறுக்கிட்டதில்லை.’ என்று சொல்லியிருக்கிறார் மருத்துவர் முரளிதர் ராஜகோபால்.
அதாவது ஜெயலலிதா கார்டனில் இருந்த போது அவருக்கு அளித்து வந்த சிகிச்சையில் சசிகலாவின் தலையீடு இருந்தது என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது டாக்டர் முரளிதர் வாக்குமூலத்தில் ஜெயலலிதா சிகிச்சையில் தலையீடு இல்லை என்பதை சொல்லியிருக்கிறார். இந்த வாக்குமூலம் சசிகலா மீது எந்த தவறும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்வதாக இருப்பதாக பார்க்கிறது தினகரன் தரப்பு.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அந்த மெசேஜை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு, ஸ்டேட்டஸ் ஒன்றை போஸ்ட் செய்தது ஃபேஸ்புக்.
“எவ்வளவோ பேரை விசாரித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வேளச்சேரி ஜோதிடரை ஏன் விசாரிக்கவில்லை என்றும் சிலர் கேட்க ஆரம்பித்துள்ளனர். அந்த ஜோதிடரை அதிமுக வட்டாரத்தில் எல்லோரும் வேளச்சேரி ஜோதிடர் என்றே அழைக்கிறார்கள். சசிகலாவுக்கு ஆஸ்தான ஜோதிடர் இவர்தானாம். ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, மருத்துவமனைக்குள் நினைத்த நேரத்தில் எல்லாம் போய் வந்தவரும் இந்த வேளச்சேரி ஜோதிடர்தானாம்.
’அம்மாவுக்கு எந்த நேரத்தில் மருந்து கொடுக்கணும்... எந்த நேரத்தில் ஸ்கேன் எடுக்கணும்..’ என்பதில் தொடங்கி ஜெயலலிதா மருத்துவமனை நாட்களில் இந்த வேளச்சேரி ஜோதிடர் சொல்படிதான் நடந்து கொண்டாராம் சசிகலா. அந்த ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தில்தான் ஒவ்வொரு விஷயங்களையும் செய்ய வைத்திருக்கிறார் சசிகலா. அதுவே சில நேரங்களில் சிகிச்சை தாமதமாகியிருக்கிறது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் ஃபைனல் டச் ஆக அந்த ஜோதிடரை உள்ளே இழுத்து வருவார்கள். அவரை வைத்துதான் இந்த ஆணையத்தின் விசாரணை முடிவுக்கு வரும். அவர் ஆணையத்தில் பேசினால், அது சசிகலாவுக்கு சிக்கலில் முடியும் என்று சொல்பவர்களும் உண்டும்.” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.

கருத்துகள் இல்லை: