செவ்வாய், 11 டிசம்பர், 2018

ஏரியை முழுங்கிய குறிஞ்சி மருத்துவமனை! எடப்பாடி உத்தரவால் அதிகாரிகள் 'கப்சிப்!!

ikunakkheeran.in- elayaraja" முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையீட்டால், சேலத்தில் ஏரிக்குச் செல்லும் கோடிவாய்க்கால் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியார் மருத்துவமனையின் கட்டடத்தை இடிக்காமல், அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்து கொண்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் ஐந்து ரோடு அருகே, குறிஞ்சி மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள இஸ்மாயில்கான் ஏரிக்குச் செல்லும் அரசு கோடிவாய்க்கால் நீர்வழிப் புறம்போக்கு நிலத்தில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமித்து, குறிஞ்சி மருத்துவமனை நிர்வாகம் கட்டடம் கட்டியுள்ளது.
ஏரி நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இம்மருத்துவமனையின் ஒரு பகுதியை இடித்து அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் சிலர், சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை அகற்றலாம் என உத்தரவிட்டது.



இதையடுத்து, சேலம் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் தரப்பிலிருந்து, ஏரி நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்துக் கட்டியுள்ள பகுதிகளை டிசம்பர் 10ம் தேதியன்று இடித்து அகற்றப்படும் என்று குறிஞ்சி மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக, மருத்துவமனையின் முன்பாக பொதுமக்களின் பார்வைக்கும் பிளக்ஸ் பேனர் மூலம் பகிரங்க அறிவிப்பும் செய்யப்பட்டு இருந்தது.

மேலும், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர், ஆக்கிரமிப்பு பகுதிகள் இடிக்கப்பட உள்ளதால், 5.12.2018ம் தேதி முதல் நோயாளிகள் யாரும் குறிஞ்சி மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றும் அறிவித்து இருந்தது. இதுமட்டுமின்றி, குறிஞ்சி மருத்துவமனையை ஒட்டி, ஏரி நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த சில வீடுகள், கடைகளும் இடிக்கப்படும்  என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமையன்று (டிச. 10) புல்டோசர் இயந்திரங்களுடன் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கே சென்றனர். அசம்பாவிதங்களைத் தடுக்க நூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். திமுக, பாமக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.

இதனால் அங்கே பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், 'திடீரென்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகச் சொல்லிவிட்டு, கட்டடங்களை இடிப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது,' என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.   இதற்கிடையே, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சிலர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதாகவும், அவர் தரப்பிலிருந்து அதிகாரிகளிடம் பேசுவதாகவும்,' தெரிவித்தனர்.

இந்த களேபரத்திற்கு இடையே, மாநகராட்சி ஊழியர்கள் திடீரென்று, 'முதல்வர் சொல்லிவிட்டார். குறிஞ்சி மருத்துவமனை மீது யாரும் கைவைக்க வேண்டாம்,' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றனர். பிறகு அதே பகுதியில் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகள், கட்டடங்களை இடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து குறிஞ்சி மருத்துவமனையின் நிர்வாகி இயக்குநர் மருத்துவர் ஜெயராமனின் மகனும், மருத்துவருமான மணிமாறனிடம் பேசினோம்.

d
''இஸ்மாயில்கான் ஏரிக்குச் செல்லும் நீர்வழிப்பாதைக்காக நாங்கள் பிரத்யேகமாக பூமிக்கடியில் வாய்க்கால் வெட்டி வழி ஏற்படுத்தியிருக்கிறோம். அந்த நீர்வழிப்பாதை பத்து அடி அகலம்தான். ஆனால் நாங்கள் 15 அடி அகலத்திற்கு நீர்வழிப்பாதையை அமைத்திருக்கிறோம். அதன்பிறகுதான், அதன் மீது கட்டடம் எழுப்பினோம்.

நீதிமன்ற உத்தரவுக்கு நாங்களும் கட்டுப்படுகிறோம். மற்ற இடங்களைப்போல் ஒரு நோட்டீஸ் கொடுத்தோம்; அதனால் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிப்போம் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? இங்கே பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுகிறோம். எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். எங்கள் கட்டடத்தை மட்டும் இடிப்பதில் எந்த பயனும் இல்லை. இந்த ஏரியின் நீர்வழிப்பாதையின் துவக்கம் முதல் கடைசி வரை உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

இது தொடர்பாக நீங்கள் முதல்வரிடம் பேசினீர்களா? என்று கேட்டதற்கு, ''நான் பேசவில்லை. எங்கள் தரப்பில் யாராவது பேசியிருப்பார்கள். முதல்வர் தரப்பிலிருந்து ஹெல்ப் பண்ணுவதாக சொன்னதாகவும் சொன்னார்கள்,'' என்றார் மருத்துவர் மணிமாறன்.

குறிஞ்சி மருத்துவமனை மீது நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு மட்டுமின்றி, இஸ்மாயில்கான் ஏரியின் மற்றொரு புறத்தில் இருந்து பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடத்தையும் மறித்து சுவர் எழுப்பி விட்டதாகவும் ஒரு புகார் சொல்லப்பட்டது. இப்போது, அந்த சுவரையும் இடித்துவிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழித்தடத்தை திறந்துவிடவும் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, குறிஞ்சி மருத்துவமனையின் கேண்டீன் அருகே, கோடிவாய்க்கால் அரசு நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டை புல்டோசர் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

அந்த வீட்டின் உரிமையாளர் பார்த்திபராஜா கூறுகையில், ''இந்த இடத்தில்தான் நாங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். மருத்துவமனையும்தான் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்துக் கட்டியிருக்கிறது. அந்த கட்டடத்தை இடிக்காமல் எங்கள் வீட்டை மட்டும் இடித்துவிட்டனர். மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் இருப்பவர் இல்லாதவர் என்ற பாரபட்சத்துடன் செயல்படுகிறது. இந்த ஏரியின் வழித்தடத்தில் உள்ள எல்லா ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்,''  என்றார்.

குடிமராமத்து பணிகளில் ஆர்வம் காட்டும் முதல்வரே, குறிஞ்சி மருத்துவமனையின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக செயல்படுவது பலத்த சர்ச்சைகளையம் சலசலப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: