வியாழன், 13 டிசம்பர், 2018

கமல் நாத் மத்திய பிரதேச முதலமைச்சர்! அசோக் கெலாட் ராஜஸ்தான் முதலமைச்சர்.. சதீஸ்கார் முடிவாகவில்லை!

ராஜஸ்தான் அசோக் கெலாட் - மத்தியபிரதேசம்  கமல் நாத்
பெரும் இழுபறிக்கு பின்பு பழைய தலைமுறையை சேர்ந்த கமல்நாத் மத்திய பிரதேச முதலமைச்சராக பதவி ஏற்கிறார். இதே போல ராஜஸ்தானிலும் அசோக் கெலாட் முதல்வர் பதவிக்கு தெரிவாகி உள்ளார். சதீஸ்கார் மாநில முதல்வர் பதவி இன்னும் தீர்மானிக்க படவில்லை.
NDTV :ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் முதலமைச்சர் யார் என தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியில் கடும் குழப்பம் நிலவுகிறது. அந்த கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பல மணி நேரமாக ஆலோசித்து வரும் நிலையில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் பதவிக்கு மூத்த தலைவர் அசோக் கெலாட்டும், இளம் தலைவர் சச்சின் பைலட்டும் முட்டி மோதுகின்றனர். இதனால் இருவரையும் டெல்லிக்கு அழைத்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதன் பின்னர் அசோக் கெலாட் ராஜஸ்தான் திரும்பினார்.   அவர் முதலமைச்சராகவும், பைலட் துணை முதலமைச்சராகவும் பொறுப்பு ஏற்பார்கள் என்றும் தகவல் வெளியானது.

இதனால் ஆத்திரமடைந்த சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் ஜெய்ப்பூர் நகரில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் முன்பும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று ஜெய்ப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தொண்டர்கள் அமைதி காக்குமாறு சச்சின் பைலட் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க ராகுல் விரும்புவதாகவும், சோனியா, பிரியங்கா உள்ளிட்ட மற்றவர்கள் அசோக் கெலட்டை முன்னிறுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் டெல்லியில் தமது வீட்டில் நடைபெற்ற ஆலோசனையின் போதே மூன்று முறை ராகுல் வெளிநடப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் கமல்நாத்திற்கு முதலமைச்சர் பதவியும், ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு துணை முதலமைச்சர் பதவியுமென தீர்மானிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் திரண்ட சிந்தியாவின் ஆதரவாளர்கள் மாநில காங்கிரஸ் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல சத்தீஷ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் பதவிக்கு மாநில கட்சித் தலைவர் பூபேஷ் பாகேல், டி.எஸ். சிங் டியோ இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் பூபேஷ் பாகேலை முதலமைச்சர் பதவிக்கு மேலிட பார்வையாளர் மல்லிகார்ஜூன கார்கே பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து ராய்ப்பூரில் உள்ள பூபேஷ் பாகேலின் வீட்டிற்கு சென்ற சிங் டியோவின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை: