வெள்ளி, 14 டிசம்பர், 2018

சென்னை ஐஐடியில் நவீன தீண்டாம.. சைவ அசைவ உணவு விடுதிகளுக்கு தனிதனி வாயில் ..

சென்னை ஐஐடியில் நவீன தீண்டாமையா?மின்னம்பலம் : சென்னை ஐஐடியில் சைவ, அசைவ உணவுகளுக்கென தனித்தனி நுழைவு வாயிலும், கை கழுவும் இடங்களும் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) தனியார் உணவு விடுதி ஒன்றில் சைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கும், அசைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கும் தனித்தனியே கை கழுவும் இடங்களும், நுழைவு வாயில்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் புகைப்படங்களை மாணவ அமைப்பான அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் பகிர்ந்துள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் வாயிலாக ஐஐடியில் நவீன முறையில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகவும் மாணவர்களும், கல்வியாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கெனவே நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைத் தடை செய்தது போன்ற சர்ச்சைகளில் சிக்கிய சென்னை ஐஐடி மேலும் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. சென்னை ஐஐடியின் உணவு விடுதி கண்காணிப்புக் குழுவின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே உணவு விடுதியில் சைவ, அசைவ பிரிவு உண்டாக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். இவ்விவகாரம் குறித்து ஐஐடி முதல்வரான பாஸ்கர ராமமூர்த்தி, மாணவர்களின் வசதிக்காக செய்யப்பட்டதை நவீன தீண்டாமை என்பது சரியல்ல எனவும், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சைவ, அசைவ உணவுகளுக்கெனத் தனித்தனி உணவக வசதி உள்ளது எனவும் விளக்கமளித்துள்ளார்

கருத்துகள் இல்லை: