புதன், 12 டிசம்பர், 2018

கபாலி, காலா, 2.O ஆகிய மூன்று படங்களிலும் லாபம் கிடைக்கவில்லை..விளம்பர செலவு அதிகமாகிவிட்டது

2.O வசூல்: நிஜமும் நிழலும்!இராமானுஜம் - மின்னம்பலம் : இந்திய சினிமா பிரமிப்புடன் பார்த்து வியந்த நிறுவனம் லைகா. அதிக பட்ஜெட், பிரமாண்ட கூட்டணி, அடிப்படையில் தமிழ்ப் படமாக தொடங்கப்பட்ட 2.O படத்துக்கான இசை வெளியீடு, ட்ரெய்லர் வெளியீட்டை மும்பையிலும், வெளிநாடுகளிலும் நடத்தி கெத்து காட்டியது.
2.O படத்தின் வியாபாரமும் வசூலும் பெருமைக்குரிய சாதனையாக இருக்கும் என்று லைகா நிறுவனம் எதிர்பார்த்தது. அப்படி ஓர் ஆச்சரியத்தை 2.O படத்தின் வியாபாரம் வசூல் நிகழ்த்தவில்லை.
கபாலி, காலா, 2.O இம்மூன்று படங்களும் ரஜினிக்கு இரு மடங்கு லாபகரமானவை. ஆனால் இந்தப் படங்களை தயாரித்த, விநியோகம் செய்த, திரையிட்ட திரையரங்குகளுக்கு இவை லாபத்தைக் கொடுத்ததில்லை.
கபாலி, காலா, 2.O ஆகிய மூன்று படங்களிலும் ரஜினியை முன்னிறுத்த அதிகம் செலவு செய்தனர் தயாரிப்பாளர்கள். ஆனால், லாபம் கிடைக்கவில்லை. அதே நிலைமைதான் 2.O படத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ப் படங்களுக்கு அதன் பட்ஜெட்டில் பெரும்பகுதியைத் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் வசூல் மூலம் எடுப்பது இயல்பு. 2.O அனைத்து இடங்களிலும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான வசூல் ஆகியுள்ளது. 11 நாட்களில் உலகம் முழுவதும் 2.O படத்தின் மொத்த வசூல், தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தருக்கு கிடைக்கக்கூடிய பங்குத் தொகை உங்கள் பார்வைக்கு:


விநியோக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது நான்கு நாட்களில் ரூ.400 கோடி இரண்டு வாரங்களில் ரூ.500 கோடி என தயாரிப்பு தரப்பு வெளியிட்ட தகவலின் உண்மைத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
2.O படம் 11 நாட்களில் தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூலம் 80.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இவற்றில் தயாரிப்பு தரப்பு அல்லது விநியோகஸ்தர்களுக்குக் கிடைத்திருப்பது 46.4 கோடி ரூபாய் ஆகும். இந்தியா முழுவதும் 404.3 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. தயாரிப்பு தரப்புக்கு 205.4 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் 11 நாட்களில் 530.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால், தயாரிப்பு தரப்புக்கு 264.1 கோடியே கிடைத்துள்ளது.
இந்தியில் மட்டும் குறிப்பிடும்படியாக இருப்பதாகவும் மற்ற இடங்களில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் சீனாவில் படத்தைத் திரையிடுவதற்கான முயற்சியை லைகா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

கருத்துகள் இல்லை: