செவ்வாய், 11 டிசம்பர், 2018

ஸ்டாலின் உத்தரவை மீறி டெல்லியில் சபரீசன்...

ஸ்டாலின் உத்தரவை மீறிய சபரீசன்மின்னம்பலம் : பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 11) சென்னை திரும்பினார். எதிர்க்கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் குறைந்த பட்ச செயல்திட்டம் அடிப்படையில் செயல்பட வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தபோது, ஸ்டாலினோடு டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் இருந்தனர். இவர்களோடு ஸ்டாலின் மருமகன் சபரீசனும் அங்கே இருந்தது திமுகவினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவரை கட்சியில் பல நடவடிக்கைகளின் பின்னணியில் சபரீசன் இருப்பதாகப் பேசப்பட்டு வந்த நிலையில், அவற்றை மெய்ப்பிக்கும் வகையில் சோனியாவுடனான சந்திப்பில் சபரீசனும் இருந்தார். திமுகவின் முக்கியஸ்தர்களோடு சோனியாவை ஸ்டாலின் சந்திக்கிறபோது சபரீசன் எந்த அடிப்படையில் இந்த சந்திப்பில் இடம்பெற்றார் என்ற கேள்வியும் கட்சிக்குள் எழுந்துகொண்டிருக்கிறது.
இதுபற்றி டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம்.
“ஸ்டாலின் டெல்லி பயணம் திட்டமிடப்பட்ட உடனேயே டெல்லி அப்பாயின் ட்மென்ட்டுகள் பற்றி கனிமொழியிடம் பேசினார் ஸ்டாலின். அதன்படி சோனியா காந்தி சந்திப்பு முதல் சரத்பவார், அரவிந்த் கேஜ்ரிவால் சந்திப்பு வரை ஸ்டாலினுடைய அனைத்து சந்திப்புகளையும் கனிமொழியே ஏற்பாடு செய்தார். அதேநேரம் சபரீசன் டெல்லியில் தனி வீடு எடுத்து தங்கி தனது அரசியல் தொடர்புகளை வளர்த்துவருகிறார்.
இந்த நிலையில் சோனியாவை சந்திக்க வரும்போது ஸ்டாலினுடன் சபரீசனும் வந்ததைப் பார்த்து கனிமொழிக்கு அதிர்ச்சிதான். ஸ்டாலின் சோனியா காந்தியை சந்தித்தபோது கலைஞர் சிலை திறப்பு விழா அழைப்பிதழைக் கொடுத்தார். அப்போது விழா நடக்கும் நேரம் பற்றி ஸ்டாலினிடம் சோனியா சில சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் சபரீசன் திடீரென, ‘நான் ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா?’ என்று ஸ்டாலினிடம் கேட்டுள்ளார். அதற்கு ஸ்டாலினும் சம்மதிக்க சோனியா காந்தி, ராகுல் காந்தியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார் சபரீசன்.
சபரீசனின் வருகை கனிமொழிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதைப் புரிந்துகொண்டோ என்னவோ, சந்தித்துவிட்டு வெளியே வரும்போது சபரீசனிடம், ‘அந்த போட்டோவை வெளியிட வேணாம்’ என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின். அப்போது சரியென தலையாட்டினார் சபரீசன். ஆனால் அன்றே சபரீசன் இருக்கும் புகைப்படம் வெளியானது”என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.
சோனியா சந்திப்பு பற்றி தனது ட்விட்டரில் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களில் சபரீசன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருக்கவில்லை.

கருத்துகள் இல்லை: