திங்கள், 4 செப்டம்பர், 2017

தகுதியற்ற நிர்மலா சீதராமனுக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி... மூத்த அமைச்சர்கள் அதிருப்தி!

உத்தரப்பிரதேச முதலமைச்சர், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சர் என முக்கிய பதவிகள் வகித்த ராஜ்நாத் சிங்...
1970களிலேயே ஹரியானா மாநில அமைச்சர், பின் டெல்லி முதலமைச்சர், மத்திய அமைச்சர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்துவரும் சுஷ்மா ஸ்வராஜ்...
வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சர், மூத்த வழக்கறிஞர் அருண் ஜெட்லி!
இந்த மூவரும்தான் இப்போது பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில்... பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டி என்ற முக்கியமான குழுவின் உறுப்பினர்கள். நாடு தழுவிய முக்கிய பிரச்னைகளில் பிரதமர் முடிவெடுக்கும் முன் இந்த கமிட்டியுடன் கலந்து ஆலோசிப்பது வழக்கம். கொஞ்சம் கூட தகுதியற்ற பிரதமர் கொஞ்சம் கூட தகுதியற்ற பாதுகாப்பு அமைச்சர்,...இனி எதிரிகள் பாகிஸ்தானோ சீனாவோஅல்ல ...

இப்பேர்ப்பட்ட குழுவில் இப்போது புதிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இடம்பெற்றிருப்பது பாஜகவில் பலருக்கு அதிர்ச்சியையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை உற்று நோக்குபவர்களுக்கு வியப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆம்... 2006ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு, 2010ஆம் ஆண்டு நிதின் கட்கரி பாஜக தலைவராக இருந்தபோது தேசிய செய்தித் தொடர்பாளர்கள் என்று பதவி ஆறு நபர்களில் ஒருவராக கிடைத்தது. அப்போது நிர்மலா கட்சியின் முழு நேர ஊழியராகக் கூட இல்லை. செய்தித் தொடர்பாளர் என்ற அளவில் மோடியைப் பற்றி அவர் மீடியா முன் எடுத்து வைத்த கருத்துகள் டெல்லியை விட குஜராத்தில் நிர்மலா சீதாராமனை பிரபலம் ஆக்கின. 2014இல் மோடி ஆட்சி அமைத்ததும் ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கப்பட்டு மத்திய இணை அமைச்சர் ஆகவும் ஆக்கப்பட்டார் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்றத்தில் நுழைந்து மூன்றே வருடங்களில் இதோ இந்தியாவின் பாதுகாப்புத் துறை என்ற முக்கியமான பதவி நிர்மலாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திரா காந்திக்குப் பிறகு பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அடுத்த பெண்மணி நிர்மலா சீதாராமன்தான். இது நிர்மலாவுக்கு பெருமையை மட்டுமல்ல; கடுமையான சவாலாகவும் இருக்கும் என்பதே உண்மை. ‘பிரதமர் மோடியும் கட்சித் தலைமையும் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்ற விதத்தில் உழைப்பேன்’ என்று பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகு சொல்லியிருக்கிறார் நிர்மலா. ஒரு பெண்ணுக்கு உயரிய பொறுப்பு அளித்து பெண் இனத்தையே கௌரவப்படுத்தியிருக்கிறார் மோடி என்று பாராட்டுகள் குவிகின்றன.
அதேநேரம் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோருக்கு இணையாக நிர்மலா சீதாராமனா என்ற முணுமுணுப்பு மத்திய அமைச்சரவைக்குள்ளேயே எழுந்திருக்கிறது என்கின்றனர் டெல்லி பத்திரிகையாளர்கள்.
“நிர்மலாஜியின் திறமை மற்றும் பொறுப்புணர்ச்சியின் மீது சந்தேகம் இல்லை. ஆனால், அவர் டபுள் பிரமோஷன் கொடுக்கப்பட்டிருக்கிறார். இந்த உயரத்துக்கு அவசரமாக ஏற்றிவிடப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை. இது அவருக்கு சவாலானதுதான். மத்திய அமைச்சரவை மாற்றத்துக்கு இரு நாள்கள் முன்பு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டில்

ஜெட்லி, சுஷ்மா, நிதின் கட்கரி ஆகிய சீனியர்கள் மட்டுமே கலந்துகொண்ட முக்கியமான ஓர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இது ஆலோசனைக் கூட்டம் என்பதைவிட, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவுக்குள் நிர்மலா சீதாராமன் என்னும் ஜூனியர் என்ட்ரி ஆவது தொடர்பான ஒருமித்த கருத்தை உருவாக்கும் சமரசக் கூட்டமாகவே நடந்தது. இந்தக் கூட்டம் பிரதமர் மோடிக்கு ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறது. இப்போது இருக்கும் சீனியர் பாஜக அமைச்சர்கள் மன நிறைவோடு இல்லை என்பதுதான் அந்த மெசேஜ்” என்கிறார்கள் டெல்லி பத்திரிகை நண்பர்கள்.
இது பாஜகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு என்றால்... “தமிழகத்தில், ‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது தொடர்பான அவசரச் சட்டம் தொடர்பாக நிர்மலா சீதாராமன் வலிய வந்து கொடுத்த வாக்குறுதியும், அது ஓரிரு நாட்களிலேயே மத்திய அரசால் மீறப்பட்டதும் தமிழகத்தைக் கொந்தளிக்க வைத்தது. இந்தப் பிரனையில் அனிதா தற்கொலை செய்துகொண்ட சூழலில் கோபம் முழுவதும் நிர்மலா சீதாராமன் மீது திரும்பியது. இந்த நிலையில்தான் மோடி அவருக்கு பதவி உயர்வு என்னும் பரிசு அளித்திருக்கிறார். சமூக நீதிக்காக தமிழகத்தில் போராட்டம் நடந்துகொண்டிருக்கையில் அதுபற்றிய மோடியின் பார்வையாகவும் இது பார்க்கப்படுகிறது” என்கிறார்கள் தமிழகப் பத்திரிகையாளர்கள்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெரும் பொறுப்பும், பாஜகவின் சீனியர்கள் இடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும் நிர்மலா சீதாராமனுக்கு பெரும் சவால்களாகவே இருக்கும். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: