செவ்வாய், 5 செப்டம்பர், 2017

டாக்டர் அனிதா ... லயோலா மாணவர்கள் போராட்டம்!

அனிதா மரணம்:  லயோலா மாணவர்கள் போராட்டம்!
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை லயோலோ கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா கடந்த செப். 1ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு நீதி வேண்டியும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மாணவர்கள் , அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதுமே ரயில் மறியல், சாலை மறியல், பேரணி என்று பல்வேறு கட்டப் போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர் . சனி, ஞாயிறு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் சிறிய அளவிலேயே போராட்டங்கள் நடைபெற்றன.
திங்கட்கிழமையான நேற்றுமுதல் போராட்டங்கள் வலுப் பெற தொடங்கியுள்ளன. இந்நிலையில், சென்னை லயோலோ கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இன்று (செப்.5) மனித சங்கிலி போராட்டத்திலும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்துள்ளனர். லயோலா கல்லூரி மாணவர்கள் தொடங்கியுள்ள இந்த வகுப்பு புறக்கணிப்பு மற்ற கல்லூரிகளுக்கும் பரவியுள்ளன.


அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நந்தனம் பகுதியிலும் அரசு கலை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருச்சியிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி ஈவேரா அரசு கல்லூரி மாணவர்கள் 2வது நாளாக வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்பாக 6 மாணவர்கள் நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை பாளையங்கோட்டை, கோட்டை பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3000 பேர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல கோவை அரசுக் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஆசிரியர் தினத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்புகளுக்குக் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: