வியாழன், 3 நவம்பர், 2016

தனுஷ்கோடி கடலில் சிக்கிய பேருந்து .. அரிச்சல் முனை சாலை திறக்கப்படாததால் கடற்கரை வழியே சென்ற...

தனுஷ்கோடி கடல் அலையில் சிக்கிய வேனிலிருந்து மீட்கப்படும் சுற்றுலாப் பயணிகள்
தனுஷ்கோடி கடல் அலையில் சிக்கிய வேனிலிருந்து மீட்கப்படும் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடல் அலையில் வேன் சிக்கியதால் தவித்த சுற்றுலாப் பயணிகள் மீனவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
தனுஷ்கோடி கடற்கரையை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்காக பயணிகள் ராமேசுவரத்திலிருந்து முகுந்தராயர் சத்திரம் வரையிலும் பேருந்து அல்லது தனியார் வாகனங்களில் வந்து பின்னர் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு கடற்கரை வழியே சுற்றுலா வேன் மூலம் செல்கின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, பாலம், கம்பிப்பாடு, அரிச்சல் முனை உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 சுற்றுலாப் பயணிகள் வேன் மூலம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து கடற்கரை வழியாக தனுஷ்கோடிக்கு புதன்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தனர். திடீரென ஏற்பட்ட அலையில் சிக்கி பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. உடனே கடல் நீர் வேனிற்குள் புகத் துவங்கியது. இதனால் அச்சம் அடைந்த சுற்றுலாப் பயணிகள் வேனில் தவித்தபடி இருந்தனர். 30 நிமிடங்கள் கழித்து மீட்புப் பணிக்காக வந்த மற்றொரு வேனும் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. பின்னர் முகுந்தராயர் சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் உதவியுடன் சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டனர்.
இது குறித்து முகுந்தராயர் கிராம மக்கள் கூறியதாவது,
புயலால் அழிந்து போன தனுஷ்கோடியை பார்க்க தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும், அரிச்சல் முனையில் தீர்த்தமாட நூற்றுக்கணக்கான பக்தர்களும் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனைக்கு கடல் வழிப்பாதையை பயன்படுத்துகின்றனர்.
1964 ஆண்டு தனுஷ்கோடி புயலுக்குப் பின்னர் 52 ஆண்டுகள் கழித்து முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி அதனை தொடர்ந்து அரிச்சல்முனைவரயிலும் சாலை போடப்பட்டுள்ளது. இது போன்ற விபத்துக்களை தொடராமல் தவிர்க்க பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி, அரிச்சல்முனைக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையை திறந்து விட வேண்டும் என்றனர்.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை: