வியாழன், 3 நவம்பர், 2016

இதுவரை தமிழகம் எதிர்த்து வந்த திட்டங்கள் எல்லாம் கொல்லைவாசல் வழியாக நிறைவேறுகின்றன! ஆனால் காவிரி நோ .. எய்ம்ஸ் நோ ..

உதய் மின் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பொது நுழைவுத்தேர்வை
இனி தமிழக அரசே நடத்தும் என்ற அறிவிப்பு போன்றவை கடந்த சில நாட்களில் இதுவரை இருந்த எதிர்ப்பை தகர்த்தி தமிழகத்தில் காலூன்றியுள்ளது. இவற்றை கடுமையாக எதிர்த்தாவர் முதல்வர் ஜெயலலிதா, ஆனால் தற்போது அவரது அமைச்சர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், மிகவும் குறுகிய காலத்தில் பரபரப்பில்லாமல் மிகவும் அமைதியான முறையில் இரண்டு நடவடிக்கைகள் சமீப காலத்தில் நடந்துள்ளன. பல்வேறு மாநில அரசுகளின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துவரும் திட்டமான உதய் மின் திட்டத்துக்கு தமிழக அரசின் உடனடி ஒப்புதல், அதேபோல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பாரிக்கர் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போன்றோர் கடுமையாக எதிர்த்து வந்தனர். மம்தா இந்த திட்டத்தை நான் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் நடைபெற அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

ஜெயலலிதா தான் மருத்துவமனைக்குச் செல்லும் வரை இந்த இரண்டு திட்டங்களையும் கடுமையாக எதிர்த்து வந்தார். தமிழக அரசு இதை கடுமையாக எதிர்க்கக் காரணம், ‘மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவிகிதத்தை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு, ஒருமுறை மின்கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்; மின் நிலையங்களுக்கு தடையில்லாமல், அதிக நிலக்கரி வழங்கப்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளதேயாகும்.

முக்கியமாக உதய் திட்டத்தின் மூலம் எரிசக்தி துறை எளிமையாக்கம் என்ற பெயரில் தனியார் வங்கிகளிடம் மாநில அரசுகள் அதிக கடன் வாங்க வேண்டிய மறைமுக ஏற்பாட்டை மோடி அரசு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது, மார்ச் 25, 2016இல் புது டெல்லியில் ஒரு கருத்தரங்கில் பேசிய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “எங்களுடைய மோசமான அரசியல் எதிரிகள் கூட உதய் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தவிர உதய் திட்டத்தை அம்மாநிலத்தில் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லையென்றுதான் கருதுகிறேன்’’ என்று கூறினார்.

அப்படி இருக்கும்போது தமிழக அரசின் முடிவில் தலைகீழ் மாற்றம் வந்தது எப்படி? கடந்த 21ஆம் தேதி டெல்லியில் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் உதய் திட்டத்தில் தமிழக அரசு சேர்வதற்கு மாநிலத்தின் சம்மதத்தைத் தெரிவித்தார். இந்த சந்திப்பே அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. திடீரென்று தான் அமைச்சர் தங்கமணியின் டெல்லி பயணம் நிகழ்ந்தது. வழக்கமாக இது போன்ற பயணங்கள் நன்கு திட்டமிடப்படும். ஆனால், அமைச்சர் தங்கமணியின் பயணம் இந்த முறை அவசர கதியில் நிகழ்ந்ததுதான் ‘செப்படி வித்தை’!

தமிழக அரசு இதற்கு முன்பு தான் எழுப்பிய எந்த ஆட்சேபணைகளுக்கும் என்ன பதில் மோடி அரசிடமிருந்து கிடைத்தது என்பதை தெளிவுபடுத்த வில்லை. உதய் திட்டத்தில் தமிழகம் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் கூட இந்த சந்தேகத்தை எழுப்புகின்றனர்.

இதே போன்று அக்டோபர் 27ஆம் தேதி இரவு தமிழக தலைமைச் செயலாளர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகம் முழுவதிலும் அமல் படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தை 2013ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு அவசர சட்டமாகக் கொண்டு வந்த காலத்திலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்து வருகிறார். 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பின் அவரை முதன்முறையாக சந்தித்தபோதும், ஆகஸ்ட் 7, (2015)இல் சென்னையில் முதலமைச்சரை அவரது போயஸ் தோட்ட வீட்டில் மோடி சந்தித்த போதும், இந்தாண்டு மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் ஜுன் 14ஆம் தேதி மோடியை டெல்லியில் சந்தித்தபோதும் முதலமைச்சர் கொடுத்த கோரிக்கை மனுக்களில் இந்த விஷயம் முக்கியமாக இடம் பெற்றிருந்தது.

குறிப்பாக கடைசியாக மோடியிடம் கொடுத்த மனுவில் உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு மட்டும் விலக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றே தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. இதில் முக்கியமாக இந்த சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து முதல் மூன்றாண்டுகளுக்கு மட்டுமே மானிய விலையில் மத்திய அரசு உணவுப் பொருட்களை மாநிலங்களுக்கு வழங்கும் என்று இருப்பதை 10 ஆண்டுகளுக்கு என்று மாற்ற வேண்டும் என்பதாகும்.">இதற்கு முன்பு தமிழக அரசே கடுமையாக எதிர்த்த நிலைப்பாடு என்னவாயிற்று? தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு மோடி தலைமையிலான அமைச்சரவை ஏதாவது விளக்கம் அளித்துள்ளதா? அப்படி ஒன்றுமே இல்லாதபட்சத்தில், தமிழக அரசை மேலும் நிதிச்சுமை மற்றும் தனியார் மயத்துக்குத் தள்ள வேண்டிய கட்டாய சூழலை உருவாக்கும். இந்த இரண்டு திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி கொடுத்து அதை உடனே அமலுக்குக் கொண்டு வந்தது ஏன்?

சமீபத்தில் கல்விக்கொள்கை பற்றி டெல்லியில் பேசிவிட்டுத் திரும்பிய கல்வி அமைச்சர் மாஃபா. பாண்டியன் அவர்கள் நல்ல பல கருத்துகளை எடுத்துரைத்தார் என்று அனைவரும் பாராட்டினர். ஆனால், அவர் பேச்சில் ஒன்றை நமது ஊடகங்கள் கோடிட்டுக் காட்டவில்லை. அதாவது நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தும் என்று அதிர்ச்சி அறிவிப்பை வெளியிடுகிறார்.;

;நுழைவுத்தேர்வினை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தொடக்கம் முதலே எதிர்த்து வந்தார். ஏன்? நுழைவுத்தேர்வு கூடாது என்று சட்டம்கூட அவர் ஆட்சியின்போது இயற்றப்பட்டதுண்டு - நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அது தள்ளுபடி செய்யப்பட்டாலும், கலைஞர் அவர்களின் தலைமையிலான ஆட்சியின்போது முறையாக சட்டம் இயற்றப்பட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது (2007). அதுமுதல் தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு கிடையாது என்பது முக்கியமான - உறுதியான செய்தியாகும்.;

;தலைகீழாக இத்தகைய முடிவுகள் மாறியதற்கு என்ன காரணம்? முதலமைச்சர் உடல்நிலையினால் ஏற்பட்டிருக்கும் சூழலைப் பயன்படுத்தி மத்திய அரசின் நிர்ப்பந்தம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் அடிபடுவதை புறக்கணித்துவிட முடியாதே! தமிழகத்தில் அத்தனை எதிர்கட்சி தலைவர்களும் ஒருசேர நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று கூறிக் கொண்டு இருக்கும் போதுகல்வி அமைச்சர் மாஃபா. பாண்டியன் தமிழக அரசு பயிற்சி வகுப்புகளை நடத்தும் என்று கூறியதன் பின்னணியில் மோடி அரசு செயல்படுகிறது என்றே கருத வேண்டியுள்ளது.  வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை: