ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஓடிஸா மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது உண்மைதான் .. ஒப்புக்கொண்ட மாவோயிஸ்டுகள்

என்கவுண்டர் முடிந்து கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் உடல்களை இறக்கும் போலீசார். | கோப்புப் படம்: சி.வி.சுப்பிரமணியம். படம்: சி.வி.சுப்பிரமணியம். ஒடிசா மால்காங்கிரியில் என்கவுண்டரில் 28 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தங்களது 40 ஆண்டுகால புரட்சிகர போராட்டத்தில் ஏற்பட்ட பேரிழப்பு என்று மாவோயிஸ்ட்கள் ஒப்புக் கொண்டனர். இந்த என்கவுண்ட்டரைக் கண்டித்து மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நவம்பர் 3-ம் தேதி பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் மாவோயிஸ்ட்கள். இந்நிலையில் சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ‘பிரதாப்’ என்ற பெயரில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில், “தங்களது காம்ரேடுகள் 11 பேரை காயமடைந்த நிலையில் பிடித்த போலீஸ் அவர்களை சித்தரவதை செய்து கொலை செய்தனர்” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


மேலும், “அக்.24ம் தேதி ஒடிசாவில் எங்களது 27 தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது எங்களது 40 ஆண்டுகால புரட்சிகர போராட்டத்தில் மிகப்பெரிய இழப்பு. ஆந்திரா, ஒடிசா, சத்திஸ்கர், தெலுங்கானா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இதில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். சரணடைந்த மாவோயிஸ்ட்களை வைத்து தலைவர்களை குறிவைக்க பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும் மிகவும் பழைய உத்தியாகும் இது. ஆனால் இவையெல்லாம் இயக்கத்தை பலவீனப்படுத்தாது.

இத்தகைய தாக்குதல்கள் பலவற்றை கடந்து வந்துள்ளது எங்களது புரட்சிகர இயக்கம். ஆயிரக்கணக்கானோரை இழந்திருக்கிறோம். சுரண்டல்தான் ஆட்சியாளர்களுக்கும் புரட்சிகர வெகுஜனங்களுக்கும் இடையே போராட்ட குணத்தை ஏற்படுத்துகிறது, இந்த உண்மையை ஆளும் வர்க்கம் மறந்து விடுகிறது. இதற்கான பெரிய விலையை அவர்கள் கொடுத்தாக வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பழங்குடியினர் பகுதிகளில் நரேந்திர மோடி அரசும் மாநில அரசுகளும் ஆவேச சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அந்த அமைப்பு சாடியுள்ளது.

“சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பு இதனை எதிர்க்கும் அனைத்து போராட்டங்களையும் ஆதரிக்கிறது. ஆனால் அரசுகள் பசுமை வேட்டை நடவடிக்கையின் 3-ம் கட்டம் மூலம் இதனை ஒடுக்கி வருகிறது. ராஜ்நாத் சிங், விசாகப்பட்டினம் மற்றும் கோராபுட் பகுதிக்கு வருகை தந்த பிறகே போலீஸாரின் துன்புறுத்தல், தொந்தரவு அதிகரித்துள்ளது. போலி என்கவுண்டரில் அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வது வழக்கமாகி வருகிறது. அக்டோபர் 24-ம் தேதி என்கவுண்டர் இந்த்த் தொடரின் ஒரு அங்கமே” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை: