புதன், 2 நவம்பர், 2016

தமிழகம்-60 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் நமக்கு லாபமா நட்டமா?

நக்கீரன் : சென்னை ராஜதானி (Madras Province) என்று அழைக்கப்பட்ட சென்னை மாகாணம் 1801ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளரால் உருவாக்கப்பட்டது. அதில் குமரி மாவட்டம் நீங்கலான இன்றைய தமிழகம், ஹைதராபாத் சமஸ்தானம் நீங்கலான ஆந்திரா, கேரளாவின்  மலபார், தென் கன்னடம், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் ஆகிய பகுதிகள் இணைந்திருந்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர். 1953ல் ஆந்திரா தனி மாநிலமானது. பின்னர் 1956ல் ஹைதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கு பேசும் பகுதிகளும் அதில் இணைக்கப்பட்டன. 1956ல் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநில எல்லைகள் பிரிக்கப்பட்டன. சென்னை மாகாணத்தின் (Madras State) எல்லைகள் சுருங்கின. அதுபோலவே, ஆந்திரா மாநிலத்துடன் சித்தூர், திருப்பதி உள்ளிட்ட தமிழர்கள் நிறைந்த பகுதிகள் இணைக்கப்பட்டன. திருப்பதியை சென்னை மாகாணத்துடன் இணைக்க வேண்டும் எனத் தமிழர்கள் போராடிய நிலையில், ’மதராஸ் மனதே’ என சென்னையை ஆந்திராவுடன் சேர்க்க தெலுங்கர்கள் குரல் கொடுத்தனர். திருப்பதியை இழந்து, சென்னையைத் தக்க வைத்தது சென்னை மாகாணம். அதே நேரத்தில் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளை இழக்காமல் பாதுகாக்கும் வடக்கு எல்லைப் போராட்டத்தை சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையிலான அமைப்பினர் தீவிரமாக நடத்தி வெற்றி கண்டனர்.
கோலார், கொள்ளேகால் போன்ற தமிழர் பகுதிகள் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டன. ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றுடன் சென்ற தமிழர் பகுதிகள் போக, மீதமிருப்பதுதான் இன்றைய தமிழகம்.

;மதராஸ் ஸ்டேட் என்றழைப்பட்ட இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி காந்தியவாதி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டில் 78 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அவரது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. 1967ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு, மதராஸ் ஸ்டேட் என்றழைக்கப்பட்ட இந்த மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் பெற்றது. இதற்கானத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் அண்ணா நிறைவேற்றினார். தமிழ்நாடு என்று மூன்று முறை பேரவையில் அண்ணா சொல்ல, அத்தனை உறுப்பினர்களும் கட்சி மாறுபாடின்றி வாழ்க எனச் சொல்லித் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இழந்த பகுதிகள்-விட்டுக்கொடுத்த பகுதிகள் போக மிச்சமுள்ள நிலப்பரப்பைக் கொண்டுதான் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலம்  தொடங்கி பேரறிஞர் அண்ணா, கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா எனத் தொடரும் ஆட்சிகளில் தமிழகம் சமூக நீதியிலும் சமூக நலத் திட்டங்களிலும் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உள்ளது.

பள்ளிக்கல்வி-உயர்கல்வி-அடிப்படை சுகாதாரம், உயர் சிகிச்சை-போக்குவரத்து வசதி ஆகியவற்றில் தமிழகம் இந்தியாவின் பிற மாநிலங்களைவிட உயர்ந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள், கிராமங்களுக்கும் குடிசைப் பகுதிகளுக்கும் மின்வசதி, தார்-சிமெண்ட்  சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள், தேசிய  நெடுஞ்சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளிலும் தமிழகம் பிற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறியுள்ளது.

;அதேநேரத்தில் நீர் மேலாண்மை, தொழில் முதலீடுகளை ஈர்த்தல், பிற மாநிலங்களிடம் சிக்கியுள்ள தமிழகத்தின் உரிமைகளை மீட்பது உள்ளிட்டவற்றில் தமிழகம் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு அரசியல் தலைவர்களிடையிலான  தனி மனித விரோதம், காழ்ப்புணர்ச்சி, பொதுப்பிரச்சினைகளில்கூட ஒருங்கிணையாத பகையுணர்வு, ஊழல் புரையோடிய நிர்வாகம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

சுதந்திர இந்தியாவில் முதல் மொழிவாரி மாநிலமானது ஆந்திரா. அதிலிருந்து அண்மையில் பிரிந்தது தெலங்கானா. அதன்காரணமாக, தலைநகரான ஹைதராபாத்தையும் இன்னும் சில முக்கிய பகுதிகளையும் ஆந்திரா இழந்தது. இழப்பை ஈடுசெய்ய சிறப்பு அந்தஸ்து வேண்டுமென மத்திய அரசிடம் கோருகிறது. இந்த நிலையிலும் தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது ஆந்திரா. இரண்டாவது இடத்தில் இருக்கிறது அதிலிருந்து பிரிந்த தெலங்கானா. தமிழகமோ, முந்தைய ஆட்சியின் திட்டங்களை முடக்கிப்போடும் ஜெ பாணி அரசியலால் 12வது இடத்திலிருந்து 18வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை: