ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஜெயலலிதா சுய நினைவோடு பெருவிரல் ரேகை பதிந்தாரா? தேர்தல் கமிஷன் உடந்தை?

ஒரு மாதத்துக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக பொதுச்செயலாளராக உள்ள ஜெயலலிதா அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டு விண்ணப்பமான ‘பார்ம் பி’-யில் தனது இடது கை பெருவிரல் ரேகையைப் பதித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளராக களமிறங்கும் ஏ.கே.போஸ் சமர்ப்பித்த ‘பார்ம் பி’ விண்ணப்பத்தில் இருந்தே இந்த பெருவிரல் ரேகை விவகாரம் வெளியில் வந்துள்ளது. அந்த ‘பார்ம் பி’ படிவத்தில் மருத்துவர்களின் அத்தாட்சி வாக்குமூலமும், சாட்சி கையெழுத்தும் உள்ளது.
சென்னை மருத்துவக்கல்லூரியின் மினிமல் ஆக்சஸ் சர்ஜரி பேராசிரியர் மற்றும் மருத்துவர் பி.பாலாஜி அளித்துள்ள அத்தாட்சி மூலத்தில் ஜெயலலிதா தன் பெருவிரல் ரேகையை பதித்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளார். இந்த உறுதிப்படுத்தலுக்கு அப்பல்லோ மருத்துவர் பாபு கே.ஆப்ரஹாம் சாட்சி கையெழுத்திட்டுள்ளார். கடந்த 27ஆம் தேதி டாக்டர் பாலாஜி சான்றிதழில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “கையொப்பமிட்டவருக்கு சமீபத்தில் ட்ராக்கியாஸ்டமி செய்யப்பட்டு, வலதுகையில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால் அவரால் தற்காலிகமாக கையொப்பமிட முடியவில்லை. எனவே, என் முன்னிலையில், அவர் தன் இடது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்தார்” என்று தன் உறுதி சான்றை பதிவு செய்துள்ளார் மருத்துவர் பாலாஜி.

அப்பல்லோ மருத்துவர் பாபு கே.ஆப்ரஹாம், மருத்துவர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சிகிச்சையில் இருக்கும் ஜெயலலிதாவிடம் இந்த கைரேகை பதிவைப் பெற்றிருக்கலாம் என்பதே இந்த உறுதி சான்றின் பொருள். இந்நிலையில், மூன்று தொகுதிகளிலும் திமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் நிலையில் திமுக, பாமக வழக்கறிஞர்கள் இந்த பெருவிரல் ரேகையை அதிமுக பொதுச்செயலாளர் சுயநினைவோடுதான் பதிந்தார் என்பது டாக்டர்களுடைய சான்றிதழில் இல்லை. கைரேகையை ஒப்புதலாக தேர்தல் கமிஷன் எடுத்துக் கொண்டு சின்னத்தை வழங்கலாம். ஆனால், சுயநினைவோடுதான் அவர் இந்த கைரேகையை பதிந்தாரா என்பது சட்டரீதியாக எழும் முக்கியக் கேள்வி. இக்கேள்வியை உயர்நீதிமன்றத்தில் எழுப்ப முடியுமா? என்று ஆலோசித்து வருகிறார்கள். ஆனால், கட்சிகளின் தலைமை இதற்கு அனுமதிக்குமா? என்பது அரசியல் ரீதியாக ஆராயப்பட வேண்டிய மிக முக்கியமான ஒன்று.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: