திங்கள், 31 அக்டோபர், 2016

அமைச்சர்களை நம்பாத சசிகலா! சசியை நம்பாத அமைச்சர்கள்.. ஆளாளுக்கு கணக்கு பிரிப்பதிலேயே கவனம் ..

கரூர் மாவட்டத்தில் இருந்து ஏக புலம்பல். ஒவ்வொன்றாக சொல்கிறேன்” என்று முதல் மெசேஜ் வந்தது. ஃபேஸ்புக்கில் இருந்து பதில் வருவதற்கு முன்பே அடுத்த மெசேஜ் வந்தது வாட்ஸ் அப்பில் இருந்து. ”கடந்த தேர்தலில் பணம் செலவு செய்திருந்தால் ஜெயித்திருக்கலாம் என கருணாநிதி தேர்தல் தோல்விக்குப் பிறகு அடிக்கடி சொல்லிவந்தார். அதனால், இப்போது நடக்க இருக்கும் தேர்தலில் பணத்தை கையிலெடுக்கும் முடிவுக்கு திமுகவும் வந்துவிட்டது.மூன்று தொகுதிக்கும் தலா 30 கோடி ரூபாய் செலவு செய்யலாம் என்று கணக்கிட்டு அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என திட்டம். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் என்பது திமுக போட்டிருக்கும் கணக்கு. 20 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கும் மீதி இருக்கும் 10 கோடி ரூபாய் தேர்தல் செலவுக்கும் என பிரித்திருக்கிறார்கள். திமுக தரப்பில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் தகவல் அதிமுகவுக்கும் போயிருக்கிறது. பன்னீர்செல்வமும், தம்பிதுரையும் இந்த தகவலை சசிகலாவின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அதைக் கேட்ட சசிகலா, ‘நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது. மூணு தொகுதியிலும் நாம ஜெயிக்கணும். அக்கா ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. எதாவது ஒரு தொகுதியில் நாம தோற்றாலும் அது நமக்கு அசிங்கமாகிடும்.
எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்யுங்க. அவங்க ஆயிரம் கொடுத்தால் நாம ரெண்டாயிரம் கொடுக்கலாம். அதுக்கு என்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்யுங்க. அவங்க கணக்குப் படியே நாமும் ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுத்தால், தொகுதிக்கு 40 கோடி செலவு செய்ய வேண்டி இருக்கும். அது இல்லாமல் தேர்தல் செலவுக்கு 10 கோடி என்று கணக்கு போட்டால் கூட ஒரு தொகுதிக்கு 50 கோடி செலவு செய்யலாம். மூணு தொகுதிக்கும் சேர்த்து 150 கோடி ஆகும். ஆகிட்டுப் போகட்டும். அதையெல்லாம் பார்த்தால் முடியாது. மூன்று தொகுதிக்குமான பொறுப்பாளர்களை கூப்பிட்டுப் பேசுங்க. பணத்தை எங்கே கொடுக்கணும் எப்படி கொடுக்கணும் என்பதை பேசிக்கோங்க. அதுல எதுவும் சிக்கல் வந்துடவே கூடாது’ என்று சொல்லியிருக்கிறார் சசிகலா.
‘நாங்க பார்த்துக்குறோம்மா…’ என்று தம்பிதுரை சொல்ல… அதை பன்னீரும் தலையாட்டி ஆமோதித்திருக்கிறார்.
‘பார்த்துக்குறோம்னு சொல்றது பெருசு இல்லை. செய்யணும். மத்த எல்லா விஷயங்களையும் நான் விவேக்கை விட்டு உங்களோடு பேசச் சொல்றேன். அதுப்படி செய்யுங்க..’ என்று உத்தரவிட்டு இருக்கிறார் சசிகலா.” என்பதுதான் நான் அன்றைய டிஜிட்டல் திண்ணையில் சொன்ன தகவலின் சாராம்சம்.
இதில் திமுக தரப்பில் இருந்து நமக்கு எந்த ரியாக்‌ஷனும் வரவில்லை. ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் கொந்தளித்துவிட்டனர். ‘ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுக்கிறது எல்லாம் இருக்கட்டுங்க. தேர்தல் தேதி அறிவிச்சு, வேட்புமனுத் தாக்கல் முடிஞ்சுடுச்சு. ஆனால், வேட்பாளரும் சரி... மாவட்டச் செயலாளரும் சரி இன்னும் ஒரு ரூபாய் கூட வெளியில் எடுக்கவே இல்லை. எல்லாத்துக்கும் நிர்வாகிகளே செலவு பண்ணிட்டு இருக்கோம். வேட்புமனுத் தாக்கலுக்கு வந்த நிர்வாகிகளுக்கு மதியம் சாப்பாடு வாங்கிக் கொடுக்கக் கூட யாரும் பணம் கொடுக்கவே இல்லை. அந்தந்த கிளை செயலாளர் தலையில்தான் எல்லாம் விடிஞ்சிருக்கு. ஏற்கெனவே உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிச்ச போதும் நிறைய பணம் செலவு பண்ணிட்டோம். ஒரு ரூபாய் கூட வருமானத்துக்கு வழியைக் காணோம். ஆனால், எல்லா செலவுகளையும் எங்க தலையிலயே கட்டிட்டாங்க. நவம்பர் 3-ம் தேதி பள்ளப்பட்டியில ஊழியர் கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்காங்க. இதுக்கும் செலவுக்கு இன்னும் பணம் கொடுக்கவே இல்ல. ஒன்றிய செயலாளர் போன் பண்ணி, ‘கூட்டத்துக்கு ஆளுங்களை கூட்டிட்டு வந்துடுங்க’னு சொல்லிட்டு போனை வெச்சுட்டாரு. ஆளை கூட்டிட்டுப் போறது அவ்வளவு சாதாரண விஷயமா? அவங்களுக்கு ரெண்டு வேளைக்கு சாப்பாடு, போக்குவரத்து செலவு, மேற்படி செலவுன்னு எவ்வளவு ஆகும் தெரியுங்களா? வேட்பாளர்கிட்ட போனா, ‘தலைமையில இருந்து இன்னும் எதுவும் பணம் வரலைப்பா’னு சொல்றாரு. மாவட்டச் செயலாளர்கிட்ட இதெல்லாம் பேசவே முடியாது. ஒன்றியச் செயலாளர் இது எதைப் பற்றியும் கவலையே இல்லாமல் அமைச்சரோடு சுத்திட்டு இருக்காரு. இதுல நடுவுல மாட்டிகிட்டு முழிக்கிறது நாங்கதான்... இன்னும் ஒருவாரம் இப்படியே போயிட்டு இருந்தால், எந்த நிர்வாகியும் எந்த வேலையும் செய்ய மாட்டோம். நாங்க என்ன கோடி கோடியாவா சம்பாதிச்சு வெச்சிருக்கோம்? ஓட்டுக்கு பணம் கொடுக்கிறதெல்லாம் தேர்தலுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி செஞ்சா போதும். முதல்ல நிர்வாகிகளுக்கு பணத்தை கொடுத்தால்தான் வேலை நடக்கும். அதை யாரும் செய்யுற மாதிரி தெரியலை. வேட்பாளர் செந்தில்பாலாஜி, ‘ஆளுங்கட்சிங்குறதால நாமதான் ஜெயிக்கப் போறோம். எதுக்கு பணம் செலவு பண்ணணும்?’னு சொல்லிட்டு இருக்காராம். மாவட்டச் செயலாளர், ‘தலைமையில இருந்து வந்தால் பார்த்துக்கலாம்’னு இருக்காரு போல. நாங்களும் அப்படியே இருந்துடலாம். நாளைக்கு செந்தில்பாலாஜி தோற்றுப் போனால், அதுக்குக் காரணம் நாங்கதான்னு எங்க பதவியைப் பறிப்பாங்க. அந்தக் கொடுமைக்குத்தான் வேலை பார்த்துட்டு இருக்கோம்..’ என்று புலம்பினார்கள் அரவக்குறிச்சியில் தேர்தல் பணியில் இருக்கும் நிர்வாகிகள்.” என்ற மெசேஜ்ஜை படித்து, காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.
தொடர்ந்து வாட்ஸ் அப், அடுத்த மெசேஜ்ஜையும் அனுப்பியது. "அதிமுகவில் நடக்கும் இந்த உட்கட்சி பிரச்சனை திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியை உற்சாகமாக்கி இருக்கிறது. திமுகவின் கருவூலம் என்று சொல்லப்படும் கே.சி.பழனிசாமி கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை செலவு செய்ய ஆரம்பித்து இருக்கிறார். பிரசாரத்துக்கு செல்லும் நிர்வாகிகள் கேட்ட போதெல்லாம் பணம் கிடைப்பதால் அவர்களும் உற்சாகமாக வேலையைப் பார்க்க ஆரம்பித்துள்ளனர்” என்று முடிந்தது அடுத்த மெசேஜ்.
அதைத் தொடர்ந்து தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸ் ஒன்றினை அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.
"முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த பொறுப்புகள் எல்லாம் அமைச்சர் பன்னீரிடம் ஒப்படைக்கப்பட்டது. பன்னீர் அமைச்சரவையைக் கூட்டினார். ஆலோசனை நடத்தியதாகச் சொன்னார். ஆனால், எல்லாம் பெயரளவில் மட்டுமே அரங்கேறியது. கோட்டையில் உள்ள அதிகாரிகள் எல்லாம் ரொம்பவே ரிலாக்ஸ் ஆக இருக்கிறார்கள். பைல்கள் கூட எதுவும் மூவ் ஆகவே இல்லை. கடமைக்காக வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். ‘மினிஸ்ட்டர்ஸ்கிட்ட கேட்டாலும் எதுவும் பதில் சொல்லவே மாட்டேங்குறாங்க. அப்புறம் என்ன செய்யுறது? அவங்களுக்கும் என்ன செய்யுறதுன்னு தெரியலை. அதனால அமைதியாக இருக்காங்க. மேடம் டிஸ்சார்ஜ் ஆகாமல் எதுவும் செய்ய முடியாது..’ என்று கோட்டையில் உள்ள அதிகாரிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளனர்.
தலைமைச்செயலாளர் ராம்மோகன் ராவ்தான் இப்போது எல்லா முக்கிய முடிவுகளையும் எடுக்கும் அதிகார மையமாக இருக்கிறார். அரசு சார்ந்த விஷயங்களில் செய்ய வேண்டியதை விவேக் மூலமாக சொல்லி அனுப்புகிறார் சசிகலா. அதையெல்லாம் ராம் மோகன் ராவிடம்தான் விவேக் சொல்கிறாராம். விவேக் சொல்வதை கேட்டு, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார் ராம் மோகன் ராவ். அமைச்சர்களே தங்களது எந்த விஷயமாக இருந்தாலும் ராம்மோகன் ராவிடம்தான் சொல்கிறார்கள். அவர்தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறார். பன்னீர் கவனத்துக்கே போகாமல் கூட சில விசயங்கள் ராம் மோகன் ராவ் மூலமாக செய்திருக்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும் பன்னீர் எதுவுமே சொல்லாமல் அமைதியாகவே அப்பல்லோவுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார். மற்றபடி, செயல்படாத அரசு என்ற நிலையில்தான் தற்போது தமிழக அரசு இருக்கிறது.” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்துவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: