சனி, 3 செப்டம்பர், 2016

விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்: ஓ.பன்னீர்செல்வம்!


மின்னம்பலம்.காம் தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுத்துறை, மாநில சட்டமன்றம், நிதித்துறை, பணியாளர்-நிர்வாக சீர்திருத்தத் துறை, திட்டம்-வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதன்மீது, பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. பா.கருணாநிதி பேசுகையில், “குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை திமுக ஆட்சியில் 1973ஆம் ஆண்டு கலைஞரால் திறக்கப்பட்டது. 43 ஆண்டுக்குப் பிறகு, தற்போது மழைக் காலத்தில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள், சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரு மாதமாக நோயாளிகள் வெளியில் சிகிச்சை பெறும் நிலை உருவாகியுள்ளது” என்றார்.

அதற்கு குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “குரோம்பேட்டை மருத்துவமனை பள்ளத்தில் உள்ளதால் மழை நீர் தேங்குகிறது. நானே நேரில் அந்தப் பகுதியைப் பார்வையிட்டுள்ளேன். குரோம்பேட்டை மருத்துவமனையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகிறது. விரைவில், அனைத்து வசதிகளும் செய்யப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய கருணாநிதி, “மெட்ரோ ரெயில் திட்டத்தை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக தாம்பரம் வரை நீட்டித்துத் தரவேண்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “மெட்ரோ ரெயில் திட்டத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை பயணிகள் சேவையை கடந்த ஆண்டு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலும், ஆலந்தூர் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. அடுத்த மாதம் இது, மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: