வியாழன், 1 செப்டம்பர், 2016

நாளை 33 கோடிபேர் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் .. 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு..

தினகரன்.காம் :சென்னை: நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறை தொழிலாளர்கள் 33 கோடி பேர் கலந்து கொள்கின்றனர். பஸ், ரயில்கள் இயக்கப்பட்டாலும் ஸ்டிரைக் காரணமாக குறைந்த அளவில்தான் ஓடும் என தெரிகிறது.  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, சாலைபாதுகாப்பு மசோதா சட்டத்திருத்தங்களை கைவிட வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் கட்டிடத் தொழிலாளர், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் என பல்வேறு துறை தொழிலாளர்களும் பங்கேற்கிறார்கள். சுமார் 33 கோடி பேர் ஸ்டிரைக்கில் கலந்து கொள்வார்கள் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  இந்த போராட்டத்துக்கு தொமுச, சிஐடியு, எச்.எம்.எஸ் உள்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.


இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் துரைபாண்டியன் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்ககூடாது, பாதுகாப்புத்துறையில் 100 சதவீதம் அன்னிய முதலீடு கூடாது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்து 33 கோடி பேர் வரை கலந்து கொள்கின்றனர். வருமானவரி, தபால்துறை, ஏஜி அலுவலகம், பாதுகாப்பு, அணு ஆற்றல், ராஜாஜி பவனில் பணியாற்றும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் 1.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்க  பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் 6 லட்சம் வங்கி  அதிகாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.  பொதுத்துறை வங்கி, பழைய தனியார் வங்கி, அயல்நாட்டு வங்கி, கிராமிய வங்கி,  கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட  உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் உயர் அதிகாரிகள் கலந்து  கொள்கின்றனர். இதனால் நாளை ஒரு நாள் வங்கி சேவை முழுமையாக பாதிக்கும்.  காசோலை பரிமாற்றம் ஒரு நாள் தள்ளி போகும். ஏடிஎம்களிலும் பணம் இருக்கும்  வரை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் கூறுகையில், ‘‘நாளை நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் பங்கு பெறுவார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 70 சதவீத ஊழியர்கள் கலந்து கொண்டதால் பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இயங்கவில்லை. இந்த ஆண்டு நூறு சதவீத ஊழியர்கள் பங்கேற்பார்கள். நாளை தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடாது. அனைத்து பணிமனைகளிலும் ஊழியர்கள் வேலைக்கு செல்ல மாட்டார்கள்’’ என்றார். தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஆனால் இந்த போராட்டத்துக்கு ஆளும்கட்சியின் அண்ணா தொழிற்சங்கம் ஆதரவு அளிக்கவில்லை. எனவே அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை கொண்டு பஸ்கள் இயக்கப்படும் என அந்த தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இருந்தாலும், பெரும்பாலானோர் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வதால், முழு அளவில் பஸ்கள் இயக்கப்படுவது சந்ேதகம். அதே போல், முக்கிய ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், ரயில்கள் ஓரளவுக்கு இயக்கப்படும்.  அதே போல், சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால், ஆட்டோக்கள், லாரிகள் பெரும்பாலும் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: