புதன், 31 ஆகஸ்ட், 2016

பொறுத்தது போதும், தலித்துகளின் சரியான நிலைபாடு: ப.சிதம்பரம்

By P Chidambaram
thenewsminute.com குஜராத் மாநிலம் உனா மாவட்டத்தில் செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக தலித் ஆண்கள் ஏழுபேரை பசு பாதுகாப்புப் படையைச் சேர்ந்ததாக சொல்லிக்கொள்வோர் ஈவிரக்கமின்றி தாக்கும் வீடியோ ஒன்று 2016 ஜூலை 11 ஆம் தேதி வெளியானது. அந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ' இனிமேல் செத்த மாட்டை அகற்றமாட்டோம்' என தலித்துகள் பலர் அறிவித்தனர். இதற்காகப் பசு பாதுகாப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கவேண்டும், ஆனால் அவர்கள் சந்தோஷப்படவில்லை. செத்த மாட்டை அகற்றாததற்காக தலித்துகள்மீது பசு பாதுகாப்பாளர்கள் உள்ளிட்ட தலித் அல்லாதவர்கள் மேலும் அதிக அளவில் வன்முறையை  ஏவினார்கள். சம்தேர் (ஆகஸ்ட் 16) பாவ்ரா ( ஆகஸ்ட் 20) ராஜ்கோட் (ஆகஸ்ட் 24) ஆகிய இடங்களில் தலித்துகள் இப்படி தாக்கப்பட்டனர்,


இவை எல்லாமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஊர்கள்தாம்.
செய்தாலும் தாக்குதல் செய்யவில்லையென்றாலும் தாக்குதல்- இதுதான் தலித்துகளுக்கிருக்கும் சங்கடம். வேதங்களால் புனிதப்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் நான்கடுக்கு வருண முறை என்பது இந்து சமூகத்தின் சாபக்கேடு. பெரும்பான்மையானவர்களை உள்ளடக்கிய இந்த ஏற்பாடு அவர்களுக்கான இடங்களை உறுதிசெய்கிறது, அதே நேரத்தில் ஏராளமானவர்களை அது விலக்கிவைக்கவும் செய்கிறது. அப்படி விலக்கப்பட்டவர்கள்தான் தீண்டாத மக்கள். பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வே இந்த அமைப்பின் அடிப்படை. இந்த ஏற்றத்தாழ்வு ஒருவரது ஆயுள்காலம் முழுமையும் அவரைத் தொடர்ந்துவரும். இந்த அமைப்புக்குப் பணிந்துப்போகாவிட்டால் தரப்படும் தண்டனைதான் தலித்துகள்மீதான வன்முறை. ரோஹித் வெமுலா இதை சுருக்கமாக இப்படிச் சொன்னார்: " என் பிறப்பே என் மரண விபத்து"
பொறுத்தது போதும் என தலித்துகள் முடிவுசெய்துவிட்டார்கள். அவர்கள் அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள். குஜராத்திலும் மகராஷ்டிராவிலும் நாட்டின் இதர பகுதிகள் சிலவற்றிலும் தலித் மக்கள்திரண்டதைப்போல அண்மையில் வேறெங்கும் நாம் கண்டதில்லை. ஊடகங்கள் பெரிய அளவில் அவற்றைக் காட்டவில்லையென்றபோதிலும் மிகப்பெரும் பேரணிகளும், அணிவகுப்புகளும் நடைபெற்றன. நாட்டின் சில பகுதிகளில் தமக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள் தண்டிக்கப்படாமல் தொடர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட கோபம் தலித் சமூகத்தில் அதிகரித்துக்கொண்டிருப்பதை அறிய முடிகிறது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் 2015 ஆம் ஆண்டுப் புள்ளிவிவரம் இந்தியாவில் தலித்துகளுக்கு எதிராக அதிக அளவில் வன்முறை நடைபெறும் மாநிலமாக குஜராத்தைக் குறிப்பிட்டுள்ளது.அதற்கு அடுத்த இடங்களில் முறையே சத்தீஸ்கர்,ராஜஸ்தான் ஆகியவை உள்ளன.
இந்தியாவைப்பற்றிய அனைத்து அம்சங்களையும் போற்றிப் புகழ்கிற, எந்தவொரு விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும் அதை தேசவிரோதம் என முத்திரை குத்துகிற தற்போதைய தீவிரவாத தேசியத்தின் உள்ளீடற்ற போலித்தனத்தைக்கண்டு தலித்துகள் ஆத்திரமடைகின்றனர். உனாவிலும் பிற இடங்களிலும் நடக்கிற சம்பவங்களை ' அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பவை'  அல்லது 'சதிச்செயல்கள்' என அலட்சியப்படுத்துவதைப்பார்த்து தலித்துகள் ஆத்திரமடைகிறார்கள். செத்த மாடுகளை அகற்ற மறுத்தல், பேரணிகள்,  அணிவகுப்புகள் - இவை எல்லாமே அரசியல் அணிதிரட்டல் மூலமாகவன்றி சமூக அணிதிரட்டல்கள் மூலம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நீண்டகால மௌனத்துக்குப் பிறகு ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரதமர் பேசினார். அவர் சொன்னார்: " பசு பாதுகாப்பு என்ற வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போர்மீது எனக்கு ஆத்திரமாக வருகிறது.... சிலர் இரவு வேளையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் , பகல் நேரத்தில் பசு பாதுகாப்பு என்று வேடம்போடுவதையும் நான் பார்க்கிறேன். ". அடுத்தநாள் நடைபெற்ற பேரணி ஒன்றில் அவர் பேசினார்: " தலித்துகளைக் குறிவைப்பதைக்காட்டிலும் என்னைத் தாக்குங்கள்" . ஒரு பிரதமர் இப்படிப் பேசுவது வினோதமானது. அவரது பதவி அவருக்கு அளித்திருக்கும் ஏராளமான அதிகாரங்களைப் பயன்படுத்தி இத்தகைய வன்முறையாளர்களை அவர் தண்டிக்கவேண்டும்.
மாற்றம் நடப்பது உண்மைதான், ஆனால் அது மிக மிக மெதுவாக நடக்கிறது. இந்தியாவில் சமூக இயக்கங்கள் மாற்றத்தைக் கொண்டுவந்த சில பகுதிகளிலும், பொருளாதார அடையாளமும் , தொழில்சார்ந்த அடையாளமும் வழக்கமாக முன்னுரிமைபெறும் நகரப் பகுதிகளிலும் வாழ்கிற இந்துக்கள்  சாதியப் படிநிலை அமைப்பின்மீது வேட்கைகொண்டவர்களாக இருப்பதில்லை. இந்துக்கள் பலபேர் தமது சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதை விரும்பினாலும் தலித்துகளிடையே நண்பர்களைக் கொண்டவர்களாகவே உள்ளனர். இட ஒதுக்கீட்டைப்பற்றி பலர் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் கல்வியிலும், சில வேலைகளிலும் தலித்துகளுக்கு அளிக்கப்படும் சிறிய அளவிலான முன்னுரிமைகளைப் பற்றி அவர்கள் பொறாமைகொள்வதில்லை.
எனினும் இந்து சமூகத்தில் ஒரு பகுதியினர் சாதிய மேலாதிக்கம் இருந்த காலத்தை பழமை ஏக்கத்தோடு இப்போதும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலர், 2014 ல் பாஜக பெற்ற வெற்றியில் அதற்கான ஒப்புதலுக்கான அறிகுறிகளைக் கண்டுகொண்டனர். பசு பாதுகாப்பாளர்கள் என்பவர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இங்கு நிலவிய மேலாதிக்க கருத்தியலின் வெளிப்பாடுதான். மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை, பசுவைக் கொல்வதற்குத் தடை, தீவிரமான பெரும்பான்மைவாத சொல்லாடல்கள்- இவை எல்லாமும் சேர்ந்து அவர்களுக்குப் புதிய உயிர்க்காற்றை வழங்கியுள்ளன.
சாதியவாத செயல்திட்டத்தை டாக்டர் அம்பேத்கர், ஈவெரா பெரியார் ஆகியோரைப்போல தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள் ஒருசிலர்தான். இந்துமதத்தை சீர்திருத்தமுடியும் என்பதில் அவர்கள் இருவருமே அவநம்பிக்கைக் கொண்டிருந்தனர். தலித்துகள் இந்து மதத்துக்குள் கண்ணியத்தைப் பெறமுடியும் என்று டாக்டர் அம்பேத்கர் எண்ணவில்லை, அதனால்தான் தலித்துகளை பௌத்தத்தைத் தழுவுமாறு அவர் தூண்டினார். கடவுள் மறுப்பும் பகுத்தறிவும் பெரியாரின் வழிகளாக இருந்தன. கல்வி, தொழில்மயம், நகரமயம், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி என்கிற புதிய சமூக அமைப்பை ஊக்குவிக்கக்கூடிய வகையில் இந்து சமூகத்தை சீர்திருத்தம் செய்வதென்பது மூன்றாவது வழியாகும்.
தீவிரவாத இந்து தேசியவாதிகளைப் பொருத்தமட்டில் ' இந்து தேசம்' என்ற கருத்தாக்கமானது அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக்கொண்ட ஜனநாயகக் குடியரசைவிடவும் உயர்ந்தது. சாதிய வரலாற்றின் துயரங்களை அவர்கள் தம் படுக்கைக்குக் கீழே பெருக்கித்தள்ளிவிடுகிறார்கள். 'இந்து' தேசம் என்ற கருத்தாக்கத்தை உயர்த்திப்பிடிக்க வேண்டுமென்றால் அதன் குறைகளையும் கோடிக்கணக்கான தலித்துகளும் சிறுபான்மையினரும் அதற்காகக் கொடுத்த விலைகளையும் மறைத்துவிடவேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களோ இந்தப் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை மறுக்கவில்லை: சாதி பேதங்களும் பாகுபாடுகளும் இருப்பதை அங்கீகரித்த அவர்கள் அதற்காகத்தான் அட்டவணை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கான உரிமைகள் முதலான இடைக்கால நிவாரணங்களை உருவாக்கினர்.
வரலாற்று அநீதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இயற்கை நீதியை அனுபவிக்கவேண்டும் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மையான நோக்கம். குடியுரிமைக்கும், குடிமகனின் உரிமைகளுக்கும் சாதி, மதம், பாலினம் எதுவும் முக்கியமில்லை என ஆக்குவதே அதன் குறிக்கோள்.
பரந்துபட்ட சிக்கல் நிறைந்த இந்த நாட்டில் சமமான குடியுரிமை என்ற உணர்வை உருவாக்கும் செயல் திட்டம் இன்னும் முற்றுப்பெறாத ஒன்றாகவே உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த நோக்கத்தோடு பெரும்பான்மைவாதத்தின் ஒரு வடிவமான தீவிரவாத இந்து தேசியம் முரண்படுகிறது. அந்த முரண்பாடு மென்மேலும் வன்முறையான வடிவங்களில் இப்போது வெளிப்படுவதைப் பார்க்கிறோம். இந்த நீண்டகால முரண்பாட்டின் பின்விளைவுகள் நாட்டுக்கு மிகவும் கேடுபயப்பவை. நாட்டின் முன்னேற்றத்துக்கும் அமைதியான, வளமான தேசத்தை உருவாக்குகிற இலக்கை எட்டுவதற்கும் தடையாக இருப்பவை.
( கட்டுரையாளர் முன்னாள் மத்திய அமைச்சர், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அவர் ஆங்கிலத்தில் 28.08.2016 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: ரவிக்குமார்).

கருத்துகள் இல்லை: