சென்னை : சட்டசபை தேர்தலின் போது
அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்
பொருட்டு ‘மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்புகாலம் 9 மாதங்களாக
உயர்த்தப்படும்’ என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
அரசுக்கும்,
மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து
நலத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு ஊழியர்கள்
தான். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எனது
தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
பெண் ஊழியர்களைப் பொறுத்தவரையில்,
அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு நான் 2011-ம் ஆண்டு ஆட்சி
பொறுப்பேற்றவுடன், அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம்
குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க, 1980-ம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த
மகப்பேறு விடுப்பு காலத்தினை 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி
உத்தரவிட்டோம்.
எங்களது தேர்தல்
அறிக்கையில் ‘மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்புகாலம் 9 மாதங்களாக
உயர்த்தப்படும்’ என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம். அதனை
செயலாக்கும் விதத்தில், அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம்
குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில் பேறு கால சலுகையாக வழங்கப்படும் 6
மாதகால மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்பதை தெரிவித்துக்
கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தொடர்ந்து
பேசிய முதல்வர் ஜெயலலிதா, திருநெல்வேலி, ஊட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட 7
இடங்களில் மலைப்பகுதிகளில் ரூ.2.41 கோடி செலவில் 8 நகரும்
மருத்துவக்குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.,
இந்தியாவிலேயே
தமிழ்நாட்டில் மட்டும் தான் மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களின்
எண்ணிக்கை உயர்ந்த அளவாக உள்ளது. கருவுற்ற தாய்மார்களை பிரசவத்திற்கு
மருத்துவமனைகளுக்கு அழைத்து வருதல் மற்றும் பிரசவத்திற்குப் பின் அவர்களை
வீட்டிற்கு அழைத்து செல்லுதல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. பிரசவங்கள்
அதிக எண்ணிக்கையில் நிகழும் 20 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு 20 புதிய
வாகனங்களும் தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பழநி,
திருநெல்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களிலுள்ள தொலைதூர மற்றும் மலைப்
பகுதிகளில் 8 நகரும் மருத்துவக் குழுக்களும் 2 கோடியே 41 லட்சம் ரூபாய்
செலவில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார் தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக