விகடன்.காம் ;நெல்லை: தமிழக முதல்வருக்கு எதிராக செயல்பட்டு வரும் சசிகலா புஷ்பாவுக்கு பின்புலமாக இருப்பதாக சொல்லப்பட்ட தொழில் அதிபரான வைகுண்டராஜன், திடீரென தனக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பி வருபவர், சசிகலா புஷ்பா. அவரது மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்யுமாறு ஜெயலலிதாவே உத்தரவிட்ட பின்னரும் பிடிவாதமாக மறுத்து எதிர்ப்பு அரசியல் செய்து வருகிறார். அத்துடன், ஜெயலலிதா தன்னை அறைந்தார் என்று மாநிலங்களவையில் ஓபனாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பண மோசடி, பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து சசிகலா புஷ்பாவும் அவருடைய குடும்பத்தினரும் காத்திருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில், சில தினங்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன், ‘அரசு தடை விதித்த பிறகும் வைகுண்டராஜன் சட்ட விரோதமாக மணல் அள்ளி அதில் உள்ள கனிமங்களை வெளிநாடுகளுக்கு கடத்தினார். அதன் மூலமாக தமிழக அரசுக்கு 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி விட்டார். சசிகலா புஷ்பாவுக்கு பின்னணியில் வைகுண்டராஜன் இருக்கிறார். அவரது தூண்டுதலிலேயே சசிகலா புஷ்பா செயல்படுகிறார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ&கள் சிலரை விலை பேசி வாங்கி இந்த அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தவும் வைகுண்டராஜன் முயற்சிக்கிறார்’ என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக வைகுண்டராஜன் தனக்கு சொந்தமான நியூஸ் 7 தொலைக்காட்சியில் விளக்கம் தெரிவிக்கும் வகையில் பேட்டியளித்தார். அதில், ‘‘நான் நீண்ட காலமாக கனிமவள தொழிலில் ஈடுபட்டு உள்ளேன். 1980-களில் இருந்தே இந்த தொழிலில் எனக்கு போட்டியாளராக தயா தேவதாஸ் என்பவர் இருந்து வருகிறார். அப்போது எம்.பி&யாக இருந்த தனுஷ்கோடி ஆதித்தனை பயனபடுத்தி அவர் சட்ட விரோதமாக கனிம மணலை கடத்துவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது உண்டு. அவருடைய தூண்டுதலில் குமரேசன் என்மீது அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார்.
சசிகலா புஷ்பாவுக்கு பண் உதவி செய்கிறேன் என்றும் 20, 30 எம்.எல்.ஏ-க்களை வளைத்து வைத்து இருக்கிறேன் என்றெல்லாம் கூட செய்திகள் வருகின்றன. அதில் துளியளவும் உண்மை கிடையாது. தி.மு.க ஆட்சியில் இருந்தால் என்னை அ.தி.மு.க-வுக்கு நெருக்கமானவன் என்றும் அந்த கட்சியில் உள்ளவர்களுக்கு பினாமியாக செயல்படுகிறேன் என்றும் அவதூறு பரப்புகிறார்கள். அதே சமயம், அ.தி.மு.க ஆட்சியில் இருந்தால் என்னை தி.மு.க-வினருக்கு நெருக்கமானவன் என்று பேசுகிறார்கள்.
இப்போது, சசிகலா புஷ்பாவுக்கு நான் தான் பண உதவி செய்வதாகவும் அவருக்கு பின்புலமாக இருப்பதாகவும் பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள். சசிகலா புஷ்பாவுக்கு பண உதவி செய்ய வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு கிடையாது. முதல்வர் என் மீது கோபப்பட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு நான் சசிகலா புஷ்பாவுக்கு உதவிகள் செய்வதாக வேண்டுமென்றே பொய்த் தகவல்களை வெளியிடுகிறார்கள்.
நான் 20, 30 எம்.எல்.ஏ&க்களை வளைத்து வைத்து இருப்பதாக தகவல்களை பரப்பி, அதன் மூலமாக முதல்வரை என் மீது கோபப்பட வைத்து என தொழிலுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம். எனக்கு எதிராக இருப்பவர்கள் செய்யும் சதிச் செயல் இது. நான் சசிகலா புஷ்பாவுக்கு எந்த வகையிலும் ஆதரவாக இருக்கவில்லை என்பதே உண்மை. நான் கடவுளையும் சட்டத்தையும் மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறேன். அதனால், உண்மைகள் ஒரு நாள் வெளிவந்தே தீரும்’’ என அதில் பேசியுள்ளார்.
வைகுண்டராஜன் தனக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் தோன்றி இது போன்ற விளக்கம் அளித்து இருப்பதன் மூலமாக தமிழக அரசுடன் இணக்கமாக செயல்பட முடிவெடுத்து இருப்பதன் எதிரொலி என்றே பலரும் பேசுகிறார்கள். இந்த விளக்கத்தின் மூலமாக அ.தி.மு.க தலைமையிடம் வெள்ளைக் கொடியைக் காட்டி இருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. முதல்வரை சந்தித்து தனது நிலை பற்றி விளக்கம் அளிக்க விரும்பியதாகவும் அதற்கு இதுவரை அனுமதி கிடைக்காததால் இப்படி தொலைக்காட்சியில் தோன்றி தனது கருத்துக்களை தெரிவித்ததாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள்.
எது எப்படியோ, வைகுண்டராஜனின் இந்த திடீர் பல்டி அரசியல் அரங்கில் திடீர் திருப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது!
- ஆண்டனிராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக