சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் பணியிடை நீக்கத்துடோடு
நின்றுவிடாமல் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்து சிபிஐ
விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்
கழகத்தின் தலைவருமான ஞானதேசிகன், எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும்
நிலவியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையருமான அதுல் ஆனந்த் ஆகியோர் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Ramadoss issued statement about Gnanadesikan suspended
ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகிய இருவரின் பணியிடை நீக்கம் குறித்த
அறிவிப்பையோ, அதற்கான காரணங்களையோ தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கவில்லை. ஆனால், அவர்கள் இருவரும் அவர்கள் வகித்து வந்த பணிகளில்
இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மின்சாரம் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற ஊழலும், தாது மணல் ஊழலுக்கு துணை
போனதும் தான் இவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு காரணம் என்று அனைத்து
ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அதுதான் காரணம் என்றால், இருவர் மீதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மிகவும்
சரியானது தான். ஆனால், இவர்கள் மீதான நடவடிக்கைகள் மட்டும் போதுமானதா...
இந்த ஊழல்களில் இவர்களைத் தவிர வேறு அதிகாரிகளுக்கோ அல்லது
ஆட்சியாளர்களுக்கோ தொடர்பு இல்லையா? என்பது தான் விடை காணப்பட வேண்டிய
வினாவாகும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் மின்சாரக் கொள்முதல் ஊழல், தாதுமணல் மற்றும்
கிரானைட் ஊழல் ஆகியவை குறித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக குரல் கொடுத்து
வருகிறேன். இந்த ஊழல்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை
ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்
கடந்த 17.02.2015 அன்று தமிழக ஆளுனரிடம் மனு அளிக்கப் பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் ஞானதேசிகன்
தான். இவரது காலத்தில் தான் மின்சாரக் கொள்முதலிலும், மின்திட்டங்களுக்கு
அனுமதி அளிப்பதிலும் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக
ஆதாரங்களுடன் குற்றஞ்சாற்றினேன். இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
(சிகிநி) அலுவலகமும் இதே குற்றச்சாற்றை முன்வைத்திருந்தது. இவ்வளவுக்குப்
பிறகும் ஞானதேசிகன் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக, அவரது திறமையை பாராட்டும் வகையில், நேர்மையான, திறமையான, அதிக
அனுபவம் கொண்ட இ.ஆ.ப. அதிகாரிகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அரசு தலைமைச்
செயலாளராக அமர்த்தி அழகு பார்த்தது. அதேபோல், தமிழகத்தில் நடைபெற்று வரும்
தாதுமணல் கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று
வலியுறுத்தியபோதெல்லாம் அதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
அதுமட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தாது மணல் கொள்ளை
குறித்த ககன்தீப்சிங் பேடி குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிடாமல்
பாதுகாத்து வைத்திருக்கிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நடைபெற்ற
தாதுமணல் கொள்ளை குறித்து ககன்தீப்சிங் பேடி குழு விசாரணை நடத்தி 3
ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதுகுறித்த விசாரணை அறிக்கையை வாங்கிக் கொள்ள
முதலமைச்சர் மறுத்து வந்தார். இத்தகைய சூழலில் இந்த ஊழல்கள் தொடர்பாக இரு
மூத்த இ.ஆ.ப. அதிகாரிகளை அரசு பணி இடைநீக்கம் செய்திருப்பதற்கு, இதுவரை
நண்பர்களாக இருந்தவர்கள் இப்போது எதிரியாகவும், எதிரியாக இருந்தோர்
நண்பர்களாகவும் மாறிய அரசியல் தான் காரணமாகும்.
மின்சாரக் கொள்முதலில் யூனிட்டுக்கு 20 பைசா கையூட்டு பெற்ற ஞானதேசிகன்
மீது நடவடிக்கை எடுக்கப்படும் போது, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்க
வேண்டும் என்று யூனிட்டுக்கு ரூ.2 கையூட்டு வாங்கிய முந்தைய மின்துறை
அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு என்ன தண்டனை? அவருக்கு அதிகாரங்களை வழங்கி
ஊக்குவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்ன தண்டனை?
தாதுமணல் கொள்ளையர்களுக்கு துணை போனதாக ஞானதேசிகனும், அதுல் ஆனந்தும்
பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தாதுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக
குரல் கொடுத்தது, மிடாஸ் முதல் ஜெயா தொலைக்காட்சி வரை தமது நிறுவனங்களில்
பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டது,
ஆட்சிக்கு வந்தவுடன் பல தாதுமணல் குவாரிகளை ஒதுக்கீடு செய்தது ஆகியவற்றை
செய்த ஜெயலலிதா மீது என்ன நடவடிக்கை? என்ற மக்களின் வினாக்களுக்கு அரசு
விடையளிக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சியாளர்களுக்கும், ஒருகாலத்தில்
அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மறைமுக மோதல்
காரணமாக ஊழல்கள் வெளியில் வருவதும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படுவதும் நல்லது தான்.
ஆனால், அது 2 அதிகாரிகளின் பணியிடை நீக்கத்துடன் நின்றுவிடக் கூடாது.
மாறாக, மின்சாரக் கொள்முதல் ஊழல், தாதுமணல் கொள்ளை ஆகியவற்றில்
யார்,யாருக்குத் தொடர்பு என்பது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட
வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது
செய்து விசாரணை நடத்தி, அவர்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை வசூலிக்க அரசு
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Read more at://tamil.oneindia.com
Read more at://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக