செவ்வாய், 7 ஜூன், 2016

இறைவி….ஆண்கள்.. ஆண்கள்… ஆண்கள்… குடி, குடி, குடி…. ஆட்டம், ஆட்டம், ஆட்டம்

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உதவி இயக்குனர் நண்பர் ஒருவர் தன் கதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நாகர்கோயிலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக சொன்னார். ஆணவக் கொலைக்கு எதிரான படம் என ஆவேசமாக வேறு கூறினார். அருந்ததியப் பெண்ணுக்கும், நாடார் பையனுக்கும் நடக்கும் காதல் கதை அது…. ‘’அவங்க இரண்டு பேரும் டெய்லி கிருஷ்ணன் கோயில்ல மீட் பண்ணிப்பாங்க.. அதுதாங்க அவங்க லவ் பிளேஸ்’’ என்று சொன்ன இடத்திலேயே, அதற்கு மேல் கேட்க ஒன்றுமில்லை என ஆனது… எனக்குத் தெரிந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் அவர் குறிப்பிட்ட அந்த கிருஷ்ணன் கோயிலுக்குள் நாடார் சாதியினரே நுழைய முடியாது… அவர்களுக்கே இடமில்லை எனில், அருந்ததியர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை… மேல்சாதியினருக்கு மட்டுமே அனுமதி…


இப்போது அப்படி சாதிக்கட்டுப்பாடு இல்லையெனினும் மேலே சொன்ன சாதியைச் சேர்ந்தவர்கள் அந்தக் கோயிலுக்கு போவதில்லை… சுடலைமாடன், இசக்கி என அவர்களது தெய்வங்கள் வேறு… கதை சொன்ன நண்பர் காலங்காலமாக கிருஷ்ணன் கோயிலுக்கு செல்பவர்… அதனால் அவரது கதாபாத்திரங்களையும் அந்தக் கோயிலுக்கே போகச் சொல்லி விட்டார்.
தலித் மக்களின் வாழ்க்கையை ஏன் பிறர் எழுதவோ, சொல்லவோ முயன்றால் இப்படித்தான் நடக்கும்… சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளி பற்றிய கதையில், ‘’அவர் காலையில் சாப்பிட்ட தயிர் சாதமும், மாவடுவும் பத்தரை மணிக்கே இருந்த இடம் தெரியாமல் போயிற்று’’ என்ற வரிகளையும் ஒரு நாவலில் படித்த நினைவிருக்கிறது…
நான் எழுதினாலும் இப்படித்தான் எழுதுவேனாக இருக்கலாம்.. ஏனெனில் எனக்கு அந்த வாழ்க்கை தெரியாது… நான் என் சாதியின் பெயரால் எங்கும் அவமானப்பட்டதில்லை, யாரும் என்னை சாதி பெயர் சொல்லி எழுந்து போக சொன்னதில்லை… அவர்களது வலிகளை நான் கற்பனை செய்து எழுதுவதெல்லாம் அவர்களுக்கு செய்யும் துரோகம்… அப்படியாயின் நான் என்ன செய்ய முடியும்… பிறப்பால் நான் சார்ந்த ஆதிக்க சாதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்தது என்று எழுதுவதே நியாயம்..
’’இறைவி’’ படத்துக்கும் இதையேதான் பொருத்திப் பார்க்க முடிகிறது… ஆண்கள் பெண்களின் கதை என்கிற பெயரில் தன் கதையையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மனிதி, இறைவி என புதிதுபுதிதாக வார்த்தைகளை உருவாக்கி, பெண்களுக்கான படம் என்று தொடர்ந்து விளம்பரம் செய்யப் படாவிட்டால் இந்தப் படத்தோடு ஒரு பிரச்னையும் இல்லை… பெண்ணுக்கான படம் என தியேட்டருக்கு இழுத்து வரவைத்து தலையில் சுத்தியால் அடித்தது தான் குரூரம்…
படம் முழுக்க ஆண்கள்.. ஆண்கள்… ஆண்கள்… குடி, குடி, குடி…. ஆட்டம், ஆட்டம், ஆட்டம்…. சூர்யா, விஜய் சேதுபதி இரண்டு ஆண்களின் மனைவிகள் இவர்களால் துன்பப்படுகிறார்கள்… ஆணின் பார்வையின் வழியே பெண்ணின் துயரத்தை பார்க்க முயன்றதெல்லாம் சரிதான்… படம் முழுக்க குடித்துக் கூத்தடித்துக் கொண்டு, படம் வெளியிட சிலை திருடும் இந்த ஆண்களின் மீது, ‘’அய்யய்யோ, அந்தப் பொண்ணுங்களை இப்படி படுத்தறீங்களேடா’’ என ஒரு இடத்திலாவது கோபம் வந்தால் பரவாயில்லை…. இவர்களின் ஒவ்வொரு அயோக்கியத்தனமும், கையாலாகத்தனமும் படம் முழுக்க ஒவ்வொரு இஞ்சிலும் நியாயப்படுத்தப்படுகிறது.. அப்புறம் எங்கே இருந்து அந்தப் பெண்களின் துயரைப் புரிந்து கொள்ள…
அப்புறம் விஜய் சேதுபதியின் காதலியாக மலர் என்று ஒரு பெண் வருகிறார்… நாலு காட்சிகளில் வந்தாலும், நாலிலுமே நாம படுக்கத் தான் இந்த ரிலேஷன்ஷிப்… லவ் இல்ல.. என சேதுபதியிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்… காதலிப்பவர்கள், கல்யாணம் செய்தவர்கள் எல்லாம் வேறு எதற்கு ரிலேஷன்ஷிப் வைத்திருக்கிறார்களோ? அந்தப் பெண்ணை சேதுபதி திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.. முடியாது வேறு யாரையாவது திருமணம் செய்து கொள் என சொல்லிவிடுகிறார்… குழப்பமாக உருவாக்கப்பட்ட பெண் கேரக்டர் இது…
பெண் கேட்டு வந்த சித்தப்பாவிடம், நீங்க நினைக்கிற மாதிரி உங்க பையன் கூட செக்ஸுக்காக தான் பழகுறேன், லவ்வெல்லாம் இல்ல’’ என ஓப்பனாக சொல்கிறார்… அதில் எந்த தைரியமும் இல்லை, முதிர்ந்தவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாத மடத்தனம் அது… எல்லாம் செய்து விட்டு, திருமணத்திற்கு பிறகும் தன்னைத் தேடிவரும் சேதுபதியை துரத்திவிட்டு, ஜன்னல் வழியாக அழுகிறார்.. அவ்ளோ காதலெனில் எதற்காக அந்த உறவை முறிக்க வேண்டும்? அந்தப் பெண்ணை ஆர்ட்டிஸ்ட் என சொன்னதின் தான் அரசியல் இருக்கிறதா? ஏற்கனவே இந்த சமூகம் எழுதுகிற, வரைகிற, பேசுகிற பெண்களை அப்படித்தான் புரிந்து கொள்கிறது.. நீங்கல்லாம் வேற ஏன்யா?
கிளைமாக்சில் அய்யோ சேதுபதி கேரக்டர் செத்துப் போய்விட்டாரே, சூர்யா குடியை விட்டு மனைவியோட வாழ நினைக்கும்போது அநியாயமா ஜெயிலுக்குப் போகப் போறாரே என இவர்கள் மீதுதான் பரிதாபம் வருகிறது… அதிலும் சூர்யா ஜெயிலுக்குப் போகும்முன், ஐந்து நிமிடத்திற்கு முன் தானே நிறுத்திய மனைவியின் நிச்சயதார்த்தத்தை நடத்த முயன்று தியாகி வேறு ஆகிவிடுகிறார்…
’’மனிதி வெளியே வா’’ என்கிற பாட்டைக் கேட்டு எதோ பயங்கர புர்ர்ர்ரட்சி என்று போனால் ஒரு மனிதி மகளோடு மறுபடியும் திருமணத்திற்குள் போகிறாள்…. இன்னொரு மனிதி வாழ ஒரு வழி தேடி சின்ன மகளோடு ஊரை விட்டுப் போகிறாள்…. இதில் எங்கே இருந்து அவர்கள் வெளியே வந்தார்கள்?…. இப்படியே இருக்கிறார்களே, இதெல்லாம் வேண்டாம் வெளியே வாருங்கள் என படம் சொல்ல நினைக்கிறதா? அப்படியெனில் எதற்கு வெளியே போக? பூமிக்கு வெளியேவா?
இது ஆணின் அக்கப்போர்களை மிக அழகாக நியாயப்படுத்தும், ஆணின் வாழ்க்கையை மூன்று மணிநேரம் நமக்கு காட்சிப்படுத்தும் மற்றுமொரு சினிமா… ;(
அட போங்கப்பா!  thetimestamil.com

கருத்துகள் இல்லை: