புதன், 8 ஜூன், 2016

விடுதலை சிறுத்தைகளின் மோதிர சின்னம் பார்பதற்கு பெல்ட் சின்னம் மாதிரியே...ஆயிரக்கணக்கான வாக்குகள் வீண்!

எண்பத்தேழு வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்டவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இந்த தோல்வி அவரையும், அவருடைய அருமையான தோழர்களையும் நிச்சயம் அதிர்ச்சியான பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும். ஆயினும் அந்தப் பாதிப்பை உதறிவிட்டு, நான்கு நாட்கள் தங்கி மக்களுக்கு நன்றி கூறுவதற்காக 2-6-16 அன்று  சிதம்பரத்திற்கு வந்தார் தொல்.திருமாவளவன். சிதம்பரம் நடேசன் நகரில் உள்ள தொண்டர் வீட்டில் தங்கினார். தொகுதிக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த அவரை சந்தித்தோம்.


நக்கீரன் : தோல்வியைச் சந்தித்த பல தலைவர்கள், அமைச்சர்கள் இன்னும் தங்கள் தொகுதிப் பக்கம் பார்வையைத் திருப்பவில்லை. தாங்கள் நன்றி கூற வந்திருக்கிறீர்கள்?

தொல்.திருமா : ஒரு பைசா கூட வாங்காமல் எனக்கு 48 ஆயிரத்து 363 பேர் வாக்களித்திருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாக்கும் தூய்மையான, ஊழல் கறைபடாத வாக்கு. அந்த தூய உள்ளங்களுக்கு நன்றி கூறுவது எனது கடமை.

நக்கீரன் : ஊழலை ஒழிப்போம், மதுக்கடைகளை மூடுவோம் என்ற உங்கள் பரப்புரை மக்களிடம் எடுபடவில்லையே?
தொல்.திருமா : ஆமாம்... இவற்றை வலியுறுத்தாமல் விட்டிருந்தால், ஒருக்கால் நாங்கள் வென்றிருக்கலாம் என்றுகூட தோன்றுகிறது. (சிரித்துக்கொள்கிறார்)

நக்கீரன் : உங்கள் மக்கள் நலக் கூட்டணியின் முயற்சிகள் வரவேற்பைப் பெற்றிருப்பதாக நினைக்கிறீர்களா?

தொல்.திருமா : நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு நிச்சயம் பின்னடைவு ஏற்படவில்லை.

நக்கீரன் : தேர்தல் முடிவுகள் பற்றி...?

தொல்.திருமா : இது ஒரு சட்டவிரோத தேர்தல். பணப்பட்டுவாடா தேர்தல். இரண்டு கட்சிகளும் மூவாயிரம் கோடியை வாரியிறைத்தன. தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. அ.தி.மு.க.-தி.மு.க. பெற்ற வெற்றி, அவர்களுக்கே நியாயமான மகிழ்ச்சியைத் தரக்கூடிய வெற்றியில்லை.

நக்கீரன் : உங்கள் தோல்விக்கு நீங்களோ, உங்கள் கட்சியோ எந்த விதத்திலும் காரணமில்லை, மற்றவர்கள் மட்டுமே காரணம் என்கிறீர்களா?

தொல்.திருமா : இந்தத் தேர்தலில் மோதிரம் சின்னத்தை தேர்வு செய்தது நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு. மோதிரம் போலவே தோற்றமளிக்கும் பெல்ட் சின்னம், கடந்த எம்.பி. தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் 18 ஆயிரம் வாக்குகள் வாங்கியது. அது தெரிந்தும் நாங்கள்  அலட்சியமாக இருந்துவிட்டோம். அதுதான் தவறு. சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளிலும் பெல்ட் சின்னம் மூவாயிரம், நாலாயிரம் வாக்குகள் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகளின் மோதிரச் சின்னத்திற்கு விழுந்திருக்க வேண்டிய வாக்குகள் அவை. மோதிரம் போலுள்ள பெல்ட் சின்னத்தை யாருக்கும் தரவேண்டாம் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தத் தவறினோம். இது எங்களின் தவறுதானே?

நக்கீரன் : தேர்தலை மனசாட்சிப்படி மிகச்சரியாக நடத்தியதாக தேர்தல் ஆணையர் கூறியிருக்கிறார்?

தொல்.திருமா : ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுமாறு அவரது மனசாட்சி ஆணையிட்டிருக்கும். அதன்படி செயல்பட்டிருப்பார்.

நக்கீரன் : முதலமைச்சர் ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு?

தொல்.திருமா : சொத்துக் குவிப்பது குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. இந்தக் கருத்து வரப்போகும் தீர்ப்புக்கு முன்னறிவிப்பு போல தோன்றுகிறது.

நக்கீரன் : அடுத்து வரும் தேர்தல்களில் உங்கள் கூட்டணி?

தொல்.திருமா : இப்போது இணைந்திருக்கும் ஆறு கட்சிகளின் கூட்டணி என்றும் தொடரவேண்டும். இணைந்தே செயல்படவேண்டும் என்பதே சிறுத்தைகளின் விருப்பம். நல்ல தூய்மையான எனது வாக்காளர்களுக்கு நன்றி கூற வேண்டும்... வருகிறேன்.

-சந்திப்பு : காளிதாஸ்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: