வியாழன், 9 ஜூன், 2016

தி இந்து:சென்ட்ரல் ஸ்டேசனை அக்ரஹாரமாக்கு? ...கிரிக்கெட், ஃபில்டர் காபி, கர்நாடக சங்கீதம், சங்கராச்சாரி....கருவாடு.

central-station
உழைக்கும் மக்கள் மீதான ‘தி இந்து’ வின் வக்கிரம்.கிரிக்கெட், ஃபில்டர் காபி, கர்நாடக சங்கீதம், சங்கராச்சாரி ஆகிய இந்த நான்கு துறை சங்கதிகளின் மேன்மைகளை பேசும் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு (தி இந்து) அலுத்து சலித்து வீதி உலா வரும் பொழுது தவிர்க்கவியலாதபடி சூத்திர – பஞ்சமர்களின் கருவாட்டு வீச்சம் மூக்கைத் துளைத்து விடுகின்றது. சென்ற சீசனில் கருவாட்டிற்காக மவுண்ட் மகாவிஷ்ணு ருத்ர தாண்டவம் ஆடியதை அறிந்திருப்பீர்கள்.
இந்த சீசனில்தி இந்துவிற்கு வேலைப்பளு கொஞ்சம் ஜாஸ்தி! அமித் ஷா சென்னைக்கு வந்து காஞ்சி சங்கராச்சாரியின் சந்திர ஹர்ஷ தரிசனத்தில் கலந்து கொண்டு சனாதன தர்மத்தைக் காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பொழுது அதை ஃபுல் கவரேஜ் செய்தது மவுண்ட்ரோடு தான். மேலும் ‘ஆயுஷ்மான் பவ செளம்ய’ என்று நியுஜெர்சியில் காஞ்சிப் பெரியவாளுக்கு சிலை எடுத்த செய்தியை கவரேஜ் செய்ததும் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் மைல்கல் சாதனைகள்! இவ்வளவு வேலைப்பளுவிற்கு மத்தியில் நடுப்பக்க கட்டுரை ஆசிரியர் சமஸின் தனி ஆவர்த்தன சல்லை வேறு! இதனால் உலகளந்த கஸ்தூரிரங்க பெருமானால் அடிக்கடி வீதி உலா வரமுடிவதில்லை.

யார் செய்த பாக்கியமோ? புண்ணியக்கோடி பீடாதிபதி ராணிப்பேட்டை ரங்கன் வாள் இந்தமுறை மூக்கைப்பொத்திக்கொண்டு நமக்காக வீதி உலா வந்திருக்கிறார். பெரியவாளின் அனுக்கிரஹமோ அல்லது வாழை இலை மகிமையோ இன்னதென்று சொல்ல இயலவில்லை! என்னவாக இருந்தாலும் கீழ்க்கண்ட ரங்கனின் அனுபவம் என்னவென்பதை கொஞ்சம் பாராயணம் செய்வது உசிதமானது!
“சமீபகாலமாக அரக்கோணம் சென்னை, கும்மிடிப்பூண்டி சென்னை மார்க்கங்களில் புறநகர் மின்சாரப் பயணிகள் கூடுதல் இம்சைகளை – சக பயணிகள், பிச்சை எடுப்போர், தின்பண்டங்கள் விற்போர், அரசியல் பிரச்சாரக் குழுக்கள், திருநங்கைகள் – போன்றோரால் அனுபவிக்கின்றனர்.
அரக்கோணம் சென்னை மார்க்கத்தில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் ‘2 வர்த்தக மண்டலங்கள்’ இருக்கின்றன! சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நடைமேடை 12, 13, 14 ஆகியவற்றில் மூட்டைகளில் அடுக்கிவைத்து 5 ரூபாய்க்கு சிப்ஸ், இதர நொறுக்குத் தீனிகளை விற்போர். இவர்கள் அநாவசியமாக ரயிலில் ஏறி கூடவே வரமாட்டார்கள். பிளிப்கார்ட், அமேசான் போல இணையதளத்தில் ஆர்டர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சென்ட்ரலில் இருந்து புறப்படும் வரை, பெட்டிக்குள் ஏறி விற்று விட்டுக் கீழே இறங்கிவிடுவார்கள். இவர்கள் விற்கும் நொறுக்குத் தீனிகளில் உள்ள ரசாயனங்கள், எண்ணெய், அளவு பற்றியெல்லாம் பயணிகளே கவலைப்படாததால், ரயில்வே துறையில் சுகாதார ஆய்வாளரும் (அப்படியொரு பதவியில் எவராவது இருந்தாலும்) கவலைப்படுவதில்லை. சென்னைப் புறநகர நடைமேடைகளின் தரமான சுகாதாரத்துக்கு இந்த அதிகாரிக்கு ‘காப்பே’ போடலாம்! தெற்கு ரயில்வேயின் ‘தடையற்ற சுதந்திர வர்த்தக மண்டலமாக’ நடைமேடைகளைக் கருதலாம்.
அடுத்த இனம், ரயிலுக்குள் ளேயே இடைவிடாமல் ஏறி வறுகடலை, மூக்கடலை சுண்டல், தேங்காய் புட்டரிசி, பர்பி பாக்கெட், கமர்கட், பத்து ரூபாய்க்கு 3 ‘அண்ணா’ கவுறு உள்பட பல அத்தியாவசிய சாமான்களை எல்லோரையும் இடித்தும், துவைத்தும் விற்பவர்கள். சம்சா விற்பவர்கள் தங்களுடைய வாயமுதத்தையும் தெளித்து, திறந்த டப்பாவில் ‘ஆரோக்கியமாக’ சம்சா விற்கிறார்கள். விலை மலிவு. 10 ரூபாய்க்கு 4. புறநகர் பயணிகள் தங்களுடைய பசியையும், விற்பவர்களின் வாழ்வாதாரத்தையும் உத்தேசித்து, வாங்கிச் சாப்பிட்டு ஆதரவு காட்டுகிறார்கள். நெய் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், பப்ஸ், 10 ரூபாய் பாக்கெட்களில் தலை கால் வெட்டப்பட்ட முற்றிய காரட்டுகள், வதங்கிய கத்தரிக்காய், வளையாத வெண்டைக்காய் போன்றவற்றையும் விற்கிறார்கள். காய்கறி, பழம் என்றாலே மொஃபசல் ஏரியா வந்துவிட்டது என்று அறியலாம்.
ரயில் பெட்டியின் தரையை அழகுபடுத்துவதற்காகவே ‘வேச்ச’ கடலை (‘வேகவெச்ச’ மருவி, ‘வெவிச்ச’ ஆகி இப்போது ‘வேச்ச’!) விற்கிறார்கள். இதை வாங்குவோரில் 90 சதவீதம் பேர் ஆழ்ந்த சிந்தனைச் சிற்பிகள். கடலைக்காயை உரித்து வாயில் போட்டுக்கொண்டே தோலை அப்படியே காலுக்கடியில் நழவவிடுவார்கள். சப்போட்டாவாக இருந்தால் எதிரில் இருப்பவரின் காலுக்கு அடியில் துப்புவார்கள்.
சென்ட்ரல் ரயில் நிலைய வாயிலிலேயே ஒருவர் பத்து ரூபாய்க்கு 5 சம்சா விற்பார். டெல்லி, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற தலைசிறந்த ரயில் நிலையங்களில்கூட இந்த சம்சா ‘ரிசப்ஷன்’ விற்பனை கிடையாது. பகல் நேரமானால் மோர் விற்பனை. மாங்காயை மிளகாய்த்தூளில் நீராட்டி அப்படியே திறந்து வைத்து விற்பது சென்னை சென்ட்ரல் எதிரில் ஸ்பெஷல்.
நாடி நரம்பெல்லாம் புடைக்க, ‘‘ஓட்டுப் பொறுக்கிக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள், தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுங்கள், டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவோம், ஆயுதம் எடுத்துப் போராடுவோம்’’ என்று அன்பார்ந்த உழைக்கும் மக்களை அழைக்கும் அனல் வீச்சு இயக்கத்தினரை ரயில்வே பாதுகாப்புப் படை (அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திக்காரர்கள், தமிழ் தெரியாது) ஜவான்கள், இருப்புப் பாதைக் காவல்துறையினர் கண்டு கொள்வதே இல்லை. பத்து ரூபாய்க்குத் தங்களுடைய வார இதழை நடப்பு அரசியல் விமர்சனத்துடன் சேர்த்து விற்கவும், இயக்கச் செலவுக்குப் பணம் வசூலிக்கவும் ‘ஃபுளோட்டிங் பாப்புலேஷனை’ நன்றாகப் பயன்படுத்துகிறார்கள். (நாங்க சொல்றதை கேளுங்க, எதிர்த்துப் பேசாதீங்க என்ற அறிவுரையும் உண்டு.)
திருப்பதி, அரக்கோணம், திருத்தணி ‘விரைவு’ ரயில்கள் நடைமேடைக்கு வந்ததும், இளமைத் துள்ளலுடன் பாய்ந்து ஏறி கைப்பை, கர்ச்சீப், செல்போன், லேப்-டாப் என்று 4 அல்லது 5 பொருட்களை இருக்கைகளில் விரித்து அதில் ‘யாரும் உட்காரக்கூடாது, சேத்துப்பட்டில் ரயிலில் வந்துகொண்டிருக்கும் தங்கள் நண்பர்களுக்காக’ என்று அடம் பிடிக்கும் சக பயணிகளான வாலிபர்களை, ஏன் என்று கேட்கக்கூட ரயில்வே துறையில் யாரும் கிடையாது. வயதானவர்கள் நிற்பதை இந்த வாலிபர்களால் கண்கொண்டு ‘பார்க்க’ முடிவதில்லை. எனவே ‘செல்’லில் இயர் பிளக்கை சொருகி பண்பலை வர்ணனையுடன் பாடல்களைக் கேட்டுக்கொண்டு ‘கண்ணை மூடிக்கொண்டு’ விடுகிறார்கள்.
கூட்டம் எவ்வளவு மிதிபட்டாலும் வாயிலிலேயே உட்கார்ந்து அல்லது கேள்விக்குறி போல உடலை மடித்து படுத்து வழிமறிக் கும் வழியடைப்பு சுதந்திரம் தெற்கு ரயில்வேயால் பலருக்கும் தரப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அவதிப் பட்டாலும், சிலராவது காற்று வாங்கிக்கொண்டு வருகிறார்களே என்று நாம் சாந்தி அடைய வேண்டும் (கும்மிடிப் பூண்டி லோக்கல் குவாட்டி போகுமா-தி இந்து தமிழ், 08-06-2016).”
கோயம்பேடு மார்கெட்டிற்கு தன் வாழ்நாளில் முன்னே பின்னே போயிராத ஒருவர் கருவாட்டிற்காக ‘லோகமே இருண்டுடுத்து’ என்று குமுறியதைப் போல ரங்கன் வாள் முதன்முறையாக சென்னை சென்ட்ரல் புறநகர் இரயில் வாழ்க்கையை பார்த்து ஹாஷ்ய பாஸ்யம் எழுதியிருக்கிறார். ஹாஷ்ய பாஸ்யம் என்றால் நகைச்சுவை உரை!
அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருத்தணியிலிருந்து சென்னை எனும் சொர்க்கத்தில் இன்ப வாழ்வு பெறுவதற்காக நாளொன்றுக்கு எட்டு இலட்சம் பேர் வருவதாக கேள்வி. இதில் பெரும்பாலும் கட்டிட வேலை பார்க்கும் பெயிண்டர்கள், சித்தாள்கள், கூலித் தொழிலாளிகள், எலக்ட்ரீசியன்கள், அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்திருக்கும் நோயாளிகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், மார்கெட்டிற்கு சாமான் பிடிக்க வந்திருக்கும் சிறு குறு வியாபாரிகள், மூளை உழைப்பு சாப்ட்வேர் கொத்தடிமைகள் என இந்தியாவின் ஒட்டுமொத்த நாடிநரம்பும் அங்குதான் இருக்கிறது.
இத்தொழிலாளிகள் எல்லாம் வெண்பொங்கல் தின்றுவிட்டு கொட்டாவி வந்தால் பில்டர் காபி இறக்கி, ஏசி அறையில் சங்கீதா ஹோட்டல் முந்திரிப்பருப்பு வறுவலை கொரிக்கும் சிற்றுண்டி சதைப்பிண்ட வாழ்க்கையை வாழவில்லை! பிளாட்பாரத்திலும் இரயிலும் விற்கும் சமோசா, கடலை மிட்டாய், வேச்ச கடலை, பொரி, நெய் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், பப்ஸ், 10 ரூபாய் பாக்கெட்களில் தலை கால் வெட்டப்பட்ட முற்றிய காரட்டுகள், வதங்கிய கத்தரிக்காய், வளையாத வெண்டைக்காய் போன்ற பொருட்கள் எல்லாம் மலமாய் வெடித்துச் சிதறுவதற்காக அல்ல; நாளைக்கும் உழைப்பைச் சுரண்டுவதை உறுதிப்படுத்த தொழிலாளிகளின் உயிரைத் தக்க வைக்கும் பொறுப்பை ஏற்கும் நிபந்தனை தான் இந்த பிளாட்பார பண்டங்கள்!
ஆனால் ராணிப்பேட்டை ரங்கனின் பார்வைக்கு புறநகர் ரயிலில் வியாபாரிகளுக்கும் பயணிகளுக்கும் இருக்கும் இந்த வர்த்தகம் முகம் சுளிப்பாக அறுவெறுப்பாக இருக்கிறது! இவையெல்லாம் அதிகார பூர்வமற்ற வர்த்தக மண்டலங்கள் என்கிறார்! மாறாக இந்தியாவின் பல பகுதிகளில் தண்ணீர் இலவசம், மின்சாரம் இலவசம், தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தாது; வேலைநேர கணக்கு கிடையாது; டேக்ஸ் ஹெவன் ஹாலிடேஸ் உண்டு, நீதி கேட்டு வழக்கு தொடுக்க முடியாது என்றிருக்கும் பன்னாட்டு கம்பெனிகளின் வர்த்தக மண்டலங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்று பெயராம். நம்மை அண்டிச் சுரண்டிப் பிழைக்கும் ஏகாதிபத்திய அட்டைப்பூச்சிகளின் வர்த்தகம் அதிகாரப் பூர்வமானது! யாரால் நாம் உயிர் வாழ்கிறோமா இந்நாட்டின் உழைக்கும் மக்கள் சுண்டல் பொரி கடலை வாங்கித் தின்னும் வர்த்தகம் அதிகார பூர்வமற்றது; அசிங்கமானது! அருவெறுப்பானது!
திறந்த டப்பாவில் சமோசா விற்பவர்கள் தங்கள் வாயமுதத்தையும் சேர்த்து ஆரோக்கியமாக சமோசா விற்கிறார்கள் என்று சொல்லும் தி தமிழ் இந்து வாழை இலையில் பேளும் சங்கராச்சாரியை அனுஷ்டானம் என்று மணப்பதேன்? புரோட்டா கேடு என்று ‘அறிவார்ந்து’ ஆய்ந்து விட்டு அதே மைதாவில் வடிக்கப்படும் பிசா, பர்கர், பிளாக் பாரெஸ்ட்டை நாகரீகத்தின் உச்சம் என்று கொண்டாடும் இந்த ராயல் விக்டோரியன் கனவான்களுக்கு உழைக்கும் பெண்கள் விற்கும் கொய்யாப்பழமும், பலாப்பழமும் சகிக்க முடியவில்லையாம்!
சென்ற வருடம் சென்னை மியூசிக் அகடமியில் புதிதாக என்ன பதார்த்தங்கள் வந்திருக்கிறது என்று இந்து தனிகட்டுரையே எழுதியது! ஆப்பிள் சேவையும் புதினா சேவையும் சங்கீத அரங்கில் புதுவரவு என்று எழுதும் அய்யர்வாள் ஆப்பிள் சேவையில் வாயமுதத்தை பார்க்கவில்லையா? அல்லது பார்ப்பான் எச்சில் மட்டும் புனிதம் என்று கருதுகிறாரா? உண்மையில் சமோசாவில் எச்சிலைக் காணும் ரங்கனின் பார்வையில் சூத்திர பஞ்சம உழைக்கும் மக்கள் சைவமே தின்றாலும் அது தீட்டு என்று தீர்ப்பளிக்கும் பார்ப்பனத் திமிர் தான் தூக்கிக் கொண்டு நிற்கிறது!
அதிகாரபூர்வ வர்த்தகம் என்பதைத் தாண்டி வீதி உலாவில் ரங்கனை அதிகம் இம்சித்த அம்சம் பிச்சைக்காரர்கள், திருநங்கைகள், சகபயணிகள். தமிழ் இந்துவில் வரும் கட்டுரைகள் எல்லாம் மாற்று பாலினத்தவருக்கான ஆதரவு, விளிம்பு நிலை, களிம்பு நிலை என்று எழுதுவதோடு, கூக்கு போன்ற கண்தெரியாதவர்கள் இரயிலில் வாழும் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தால் கவித்துவம் என்று கூசாமல் எழுதிவிட்டு இங்கு அருவெறுப்போடு இத்தகையவர்கள் மீது வன்மத்தைக் கக்குகிறார்கள். தமிழ் இந்துவை நம்பி தலித்தியம், பெண்ணியம், மாற்றுப்பாலினம், விளிம்பு நிலை என்று எழுதிய அறிவுஜீவிக்கூட்டம் எங்கு திரண்டு தி இந்துவிற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்தவர்கள் எங்களுக்கு அறியத் தாருங்கள்!
இறுதியில் ரங்கன் அரசியல் பிரச்சாரம் செய்யும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை புரட்சிகர இயக்கங்களைக் கண்டு குமுறுகிறார்! உங்கள் வீட்டிலும் பில்டர் காபி ஜக்கு இருந்தால் காலையில் பிரெஷ்ஷாக ஹிந்து பேப்பரை உங்கள் மடியில் வைத்து பிரச்சாரம் செய்யலாம். அதைவிடுத்து புறநகர் இரயிலில் உழைக்கும் மக்களைத் திரட்டும் வண்ணம் அதுவும் ஜெயா கும்பலின் டாஸ்மாக் அட்டூழியத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தால் மவுண்ட்ரோ மகா விஷ்ணு சும்மாயிருக்குமா? ரங்கனின் உள்ளடக்கத்திற்கு பதில் சொல்லலாம் என்றால் சமஸைப் போன்று ஆயுதம் என்று அவதூறு செய்கிறார்! இதைத் தவிர்த்துப் பார்த்தால் ரங்கன் சமஸ் போன்றவர்கள் மட்டுமல்ல ஆளும் வர்க்கம் மக்கள் அதிகாரத்தை எப்படி பார்க்கிறது என்பதைச் சொல்வது இங்கு பொருத்தமாக இருக்கும்.
பிப்ரவரி 14 டாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டை மக்கள் அதிகாரம் திருச்சியில் நடத்தியது. அத்தருணத்தில் சென்டரல் ரயில் நிலையத்தில் மக்கள் அதிகாரம் எனும் தலைப்பில் பத்திரிகை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இது புரட்சிகர இயக்கங்களின் பத்திரிகையாக இருக்கும் என்று வாங்கிப்பார்த்தால் ஜெயா கும்பலின் பிராக்சியாக மக்கள் அதிகாரம் என்பதைப் பயன்படுத்தி அம்மா புராணம் பாடப்பட்டிருந்தது. அதாவது மக்களைக் குழப்புகிறார்களாம்! அதுவும் ஆளும் வர்க்கமே சங்கி மங்கி வடிவேலுவைப் போன்று வேடம் போட்டு மக்கள் அதிகாரம் எனும் பெயரைப் பயன்படுத்தி கள்ளப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தது. ரங்கன், ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளவில்லை என்று சொல்கிற பொழுது புறநகர் ரயிலில் உளவுத்துறையில் இருந்து உள்ளூர் காவல்துறை வரை தீயாய் வேலை செய்யணும் குமாரு என்ற கணக்காக வேலை செய்தனர். ரங்கன் என்னடாவென்றால் டீச்சர் அவ கைய கிள்ளிட்டா என்றகதையாக பார்ப்பன பஜனை மடத்தில் நடந்த அரட்டைகள் எல்லாவற்றையும் ரிப்போர்ட் என்று சம்பாஷனை செய்கிறார். இந்து பத்திரிக்கையின் அவாள் தர்மம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!
இதில் புரட்சிப்படை புளோட்டிங் பாப்புலேசனை பயன்படுத்துகிறதாம்! சனிப் பெயர்ச்சி வந்தால் ஒரு வெளியீடு! தேர்தல் என்று வந்தால் தி.மு.க, அ.தி.மு.க எனும் ஓட்டுக்கட்சிகளிடம் தட்சணை வாங்கிக்கொண்டு முதற்பக்க விளம்பரம்; சனாதன தர்மம் என்று பாலகுமாரனை வைத்து வெள்ளி தோறும் ஒரு வெளியீடு என்று பார்ப்பனத் தொந்தி வளர்க்கும் மகாவிஷ்ணு பயன்படுத்தாத கட்டிங் கலெக்சன் ஏதாவது இருக்கிறதா? கட்டிங்கிற்காகவே கருத்து விபச்சாரம் செய்யும் இவர்கள் உழைக்கும் மக்களிடம் உண்டியல் வசூல் செய்யும் தோழர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று ரயில்வே போலீசிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
கடைசியில் அய்யர்வாளின் வீதி உலா டர்ட்டி லேபரர்ஸ் என்று அங்கலாய்ப்பதற்காக ஹாஷ்ய பாஸ்யமாக முடிந்திருக்கிறது! இதைப் பார்த்து சிரிக்கிற அந்த வக்கிர மனதுக்காரர்கள் தான் டிராபிக் ராமசாமி பிளாட்பார கடைகளையும் தள்ளு வண்டி மனிதர்களையும் கோர்ட் உத்தரவு கொண்டு அப்புறப்படுத்திய பொழுது பாராட்டியது என்பதை மறந்துவிட வேண்டாம்! கோமியத்தை புனித நீர் என்று சூத்திர பஞ்சமர்களின் வாயிலேயே ஊற்றித் தெரிந்த பார்ப்பனியம் கருவாட்டிலிருந்து இறங்கி வந்து சூத்திர பஞ்சமர்களின் சமோசாவிற்கு வந்திருக்கிறது. பார்ப்பனத் திமிரை சைவ உணவுகளை வைத்தும் நிலைநாட்டலாம் என்றால் இந்துப் பார்ப்பனியம் என்பது எத்துணை பெரிய பாசிசம் என்பதைத் தான் மவுண்ட் ரோடு நமக்கு இந்த உலாவில் அருளியிருக்கிறார். என்ன செய்யப் போகிறீர்கள்?
ராணிப்பேட்டை ரங்கன் என்ற பெயரில் பா.ராகவன் மாதிரியான தேர்வடப் பூணூல் வெறியர்களோ இல்லை சமஸ் போன்ற கருப்பு பார்ப்பன அடிமைகளோ எழுதியிருந்தாலும் இவர்களின் குடுமியும் மறையாது, விஷமும் குறையாது!
– இளங்கோ
சமூக வலைத்தளங்களில் பதியப்படும் கண்டனங்களை எங்களுக்கும் அனுப்புங்கள்!
தி இந்துவுக்கும் உங்களது கண்டனத்தை அனுப்ப வேண்டியது அவசியம்!

கருத்துகள் இல்லை: